Monday, September 16, 2013

மூடர் கூடம் - திரைபட ஆய்வு(கூடம்)


இயக்கம் நவீன்
தயாரிப்பு WHITE Shadows
நடிப்பு
  • ஜெயப்பிரகாஷ்
  • நவீன்
  • ராஜா
  • ஓவியா
  • கிருஷ்ணா
  • சென்ட்ரயன்
இசையமைப்பு நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு டோனி சான்
படத்தொகுப்பு ஆதியப்பன் சிவா






’முட்டாள்’  என்ற வார்த்தைதான் இந்த உலகின் பெரிய கெட்டவார்த்தையாக நினைக்கும் குபேரன், தான் கஞ்சா விற்பதை கடவுள் கொடுத்த வரமாய் நினைக்கும் சென்றாயன்,  தன் தந்தையால் ஆளான மாமனை நம்பி சென்னை வந்து அவர் நாசூக்காய் வெளியே கிளப்பிவிட மீண்டும் தெருவுக்கே வந்த வெள்ளைச்சாமி (ஒயிட்).. இந்த மூவரும் போலீஸ் ஸ்டேஷனில் நட்பாகும் பெரும் பாக்கியத்தை பெற..இவர்களை வழிநடத்தும் பாக்கியம் (முன்னாள் சீர்த்திருத்த பள்ளி மாணவர்..) நவீனுக்கு  கிடைக்கிறது. 

இந்த நகரா!? வாழ்க்கையில் தமது அடுத்த காலை எங்கே ஊன்றுவது என்று யோசித்து நால்வரும் ஒன்றாய்  ’ஒயிட்’ன் மாமா வீட்டில் கொள்ளையடிக்க கிளம்புகின்றனர். மாமா ஜெயப்பிரகாஷ் வீட்டில் நுழையும்போது நடப்பதே வேறாகிவிட கொள்ளையடிக்க புது ரூட் போடுகிறார்கள்.  அதே வீட்டிற்கு வேறொரு ஆளுக்காய் சி.டி + பொம்மை  திருட வரும் ’மயில்ஸ்’ என்ற இன்னொரு கொள்ளையனும் களத்தில் இறங்க..  அதன் பின்னர் படம் முழுவதும் காமெடி மேளாவேதான்.


ஏதோ ஸீரியஸ் க்ரைம் த்ரில்லர் போல ஆரம்பித்து படம் நெடுக கிடைத்த கேப்புகளில் எல்லாம் காமெடி ரோல் கேப் பட்டாசை வைத்து வெடித்து விளையாடி இருக்கிறார்கள்.

படத்தின் ஸ்பெஷலே.. படத்தில் குறுக்கே ஓடும் நாய் முதற்கொண்டு அனைத்து கேரக்டர்களுக்கும் ஒரு முன்கதை சுருக்கம்தான்.அட்டகாசம். மெய்யாகவே  டைரடக்கர்தான். அதிலும் பொம்மைக்கு வரும் முன்கதைக்குக்கூட மெனக்கெட்டு வேர்வை சிந்தி சிந்தித்திருக்கிறார்கள்..

படத்தின் பெரிய பலமே காமெடியிலும் கனகச்சிதமான மெஸேஜ்களை சுமந்துவரும் வசனங்கள்தான்.  வெகு சில இடங்கள் மட்டுமே வெடித்து சிரிக்கும்படியாக இருந்தாலும் படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கும் வேலையை சென்றாயன் சிறப்பாக செய்கிறார். 

தமிழ் கற்றுக்கொள்ளாததற்காக  சேட்டு, தாவூதின் ’சென்னைக் கிளை’  தலைவர் சலீம் பாயிடம் திட்டுவாங்குவது முதற்கொண்டு கிடைத்த இடங்களில் எல்லாம் கருத்து மழைதான்.  இருந்தாலும் ச’ளி’க்கவில்லை!.  

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த கோபத்திற்கு ஆளாகிவிடாமல் இருக்க கடைசியில் ஒரு சென்டிமெண்ட் காட்சியைவைத்து கதையை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

கதையை ஒரே ஸ்பாட்டில் வைத்திருந்தாலும், கதையே தனக்கு தேவையான ஆட்களை வெளியிலிருந்து உள்ளே இழுத்து வந்து கார் வர்க்‌ஷாப்பில் வைத்து ரிப்பேர் பார்த்து அனுப்பிவைக்கிறது. 

ஓவியாவை அவள் காதலனுடன் சேர்த்துவைத்துவிட்டு, அவனுக்கு தன் சட்டையும்
தாரை வார்த்துவிட்டு சென்றாயன் கொடுக்கும் லுக்கு இருக்கிறதே.. அடடா.. சூப்பர் பாஸ்..  அடுத்து இவரது ‘தபேலா வாசித்த கழுதை’ வந்து சேர்வதற்குள் இவர் கவனிக்கப்படும் இடத்திற்கு போய்விடுவார் போல.  வாழ்த்துக்கள் பாஸ்.

படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ஆட்டொ குமார் அண்டு கோ நமக்குள் ஒரு சூப்பர் சவாரி போடுகிறார்கள். 

குழந்தைக்கு ஒரு வண்டி ஸ்நாக்ஸ் கொடுத்துவிட்டு ஜோடியாக குளிக்கபோகும் தம்பதிகளை கடைசியில்  ஒருவழியாக குளித்து முடிக்க வைத்தது ஒரு ஸ்பெஷல் குறும்பு எபிஸோடுதான்.

படம் நெடுக நகாசுவேலைகள் அட்டகாசம்.  ஆனாலும் நவீன் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை  பதற்றமின்றி.. அது மிக அவசரமேயானாலும்.. நிதானமாக தத்துவம் பேசுவது சில இடங்களில் எரிச்சலை உண்டாக்குகிறது.  தேவையற்ற வசன விளக்கங்களை குறைத்திருக்கலாம். 

ஒளிப்பதிவு, கலை  என அனைத்தும் நிறைவு. 

பாடல் இசை, பின்னணி இசை நடராஜன். சில இடங்களில் கவன ஈர்ப்பு, வெகுசில இடங்களில் காது சவ்வு சிதைப்பு.  பனிஷ்மெண்ட் கொடுக்கபடும் அனைவருக்கும் அளித்த அமெச்சூர்தனமான ஒலிக்குறிப்பை தவிர்த்திருக்கலாம். 

படத்தொகுப்புக்கு சரியான தீனிதான். ஆதியப்பன் சிவாவிற்கு இரண்டாவது படம். KBKR முதலாவது. 

தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் குதூகலமாய் சிரித்துவரலாம்.. இந்த கோமாளிகள் கூடாரத்தில் சிரிப்பு சர்கஸ் கேரண்டி!

(விகடனார் மதிப்பெண் 44+ கொடுத்து விடுவார் என்று நம்புகிறேன்!) 

ஒரு மேலதிக தகவல்: கோவை குமரன் தியேட்டரில் இன்றும் பைக் டோக்கன் 5 ரூபாய்தான்.   ஸ்நாக்ஸ் @ MRP only!!