Sunday, December 25, 2011

சிறுகதை

                                                           
அம்மாவுக்கு எல்லாம் தெரியும்
   டேய், சின்னவனே, மேல போயி சம்முகண்ணன் வீட்டு மாதுளை செடியில இருந்து கொழுந்தா பாத்து அஞ்சாறு கிளை ஒடிச்சுட்டு வாடா”, வயிற்றுவலி காரணம் காட்டி அன்று பள்ளிக்கு மட்டம் போட்டிருந்த எனக்கு அம்மா சொல்லும் வேலை சலிப்பை உண்டாக்கியது. ‘புதிதாய் வாங்கிய ஆட்டுக்குட்டிக்குத்தான் பறித்துவரச்சொல்கிறாளோ?’ என்று ஓர் நொடி தோன்ற விருட்டென்று கிளம்பினேன்.
     மலைக்கிராமம் எங்கள் ஊர். ‘பக்கம்..’ ‘தூரம்..’ என்பதெல்லாம் கிடையாது, மேலே.. கீழே என்பதே பெரும்பான்மை உபயோகம். நான் பறித்து வந்து கொடுத்ததில் கொழுந்தாக ஆய்ந்து அம்மா பக்குவமாக அரைப்பதை குத்துக்காலிட்டு அருகில் இருந்து கவனித்தேன்,
 ”கொஞ்சம் சக்கரை போடும்மா.. ஆடு நல்லா சாப்பிடும்என் அறிவிற்கெட்டிய ஆலோசனை அவளை மெல்ல சிரிக்க வைத்தது. நான் என் அம்மாவை அவள் தூங்கி பார்த்தது அபூர்வம் என்றால் அவள் சிரித்து பார்த்தது அதனினும் அரிதுதான். மாடுகள், கோழி, இப்போது ஆடு மற்றும் எப்போதும் அப்பா என்று எல்லோருக்குமான தேவைகளே அவள் உலகம் என்றானப்பின் சிரிப்பினை சிக்கனப்படுத்த பழகிவிட்டாள்.
இது ஆட்டுக்கில்லைடா, உனக்குத்தான்.. சின்ன சின்னதா ரெண்டு உருண்டை மட்டும் சாப்பிட்டு பாரு அப்புறம் உன் வயத்துவலி காணாமப்போயிடும்”, சதியினை புரிந்துக்கொண்டு நான் ஊரின் எல்லைக்கு தப்பி வந்து ஒற்றைக்கண்ணால் குறிபார்த்து உடும்பின் மீது கல்லெறிய துவங்கும்போதுதான் அம்மா நான் காணாததை உணர்ந்து என்னை தேட துவங்கியிருப்பாள்.
மாலை நான் வீடு திரும்பியபொழுது அந்த ஆட்டுக்குட்டி மீதமான மாதுளைத்தழைகளை தின்று முடித்து மென்று அசை போட்டுக்கொண்டிருந்தது. ‘‘சொல்பேச்சு கேட்க நீயாவது இருக்கிறாயே’’ என்று என் அம்மா ஆசுவாசப்பட்டிருப்பாள் போல.
ஊருக்குள் மருத்துவமனை கிடையாது, அருகில் உள்ள மின்வாரிய முகாமிற்கு வாரம் ஒருமுறை  வரும் டாக்டர்தான் சினிமாவிலன்றி நாங்கள் பார்த்திருந்த டாக்டர். வெளியே அவரது வண்டியில் கண்ணாடி ஜன்னலுக்குள் காத்திருக்கும் அவர் நாயும், மருத்தவமனைக்கு உள்ளே அவரும் எழுப்பும் சப்தங்களுக்குள் வேறுபாடு கண்டறிதல் கடினம்அவர் கைராசிக்காரரா என்று தெரியாது ஆனால் ரகம் பிரிக்க இயலாத ஒரே மாதிரியான னா/னா மாத்திரைகளை மட்டுமே எல்லோருக்கும் தருவதனால் பத்திரிக்கைகளில் நான் படிக்கும் டாக்டர்ஜோக்குகளில் அவரை பொருத்திப்பார்ப்பது எனக்கு சௌகர்ய மாகிப்போனது.
சில சமயம் அம்மா கொடுக்கும் அதிரடி கைவைத்தியத்திற்கு இந்த டாக்டரின் மாத்திரைகளே பரவாயில்லை என்று தோன்றும். ஒருநாள் அம்மாவின் மென்முறை வைத்தியத்தில் புளங்காகிதம் அடைந்துஅம்மா நீ எப்படிம்மா இவ்வளவு மருந்து தெரிஞ்சு வச்சுருக்க?..’ என்றபோது ‘‘எல்லாம் எங்கம்மா சொல்லிக்கொடுத்ததுதான்டா’’ என்று சுருக்கமாக பதில் சொன்னாள்.காலில் சேற்றுப்புண் என்றால் தேங்காய் எண்ணையும் மஞ்சளும் ஒருசேர குழப்பி பூசிவிடுவாள் மெல்லிய எரிச்சல்தான் எதிர்வினை, தப்பித்துவிடலாம். ஆனால் அடிபட்டகாயமென்றால் அம்மாடி! அதே தேங்காய் எண்ணையினை அடுப்பில் காயவைத்து கொதிக்க கொதிக்க உப்பு வைத்து கட்டிய சிறு துணி உருண்டையினை முக்கி எடுத்து காயத்தின் மீது வைக்கையில் வென்ற அலறலுடன்தான் காட்சி முடியும்.
பனிவிழும் மாலை நேரங்களில் யானைகள் ஊருக்குள் நகர்வலம் வருவது குறைவு. அது போன்ற  நாட்களில் பக்கத்துவீட்டு பெண்களுடன் அம்மா பேசிக்கொண்டிருக்கையில் அவள் முந்தானையில் எனக்கு முக்காடு போட்டு கதகதப்பாய் அவள் மடியில் இருத்தி வைத்திருக்கும் சுகத்திற்கு இணையாக இன்குபேட்டர் சாதனம் இதுவரை பெட்டராக கண்டுபிடிக்கப்படவில்லை என்று உளமாற நம்புவோமாக.
 மருந்திற்கும் பள்ளியின் பக்கம் பார்த்திராத அவளுக்குள் ‘எப்படி இத்தனை நுணுக்கங்கள் பொதிந்த டி.என்.  சூத்திரம்? என்பது என் ஏழாம் அறிவிற்கு இன்றுவரை புரிபடவேயில்லை.
எல்லாத்துக்கும் உனக்கு மருந்து தெரியுமாம்மா?” என்ற என் தீராத ஆச்சர்யத்திற்கும் எப்போதும் சின்னதாய் சிரிப்பொன்றே பதிலாய் கிடைக்கும். அப்பா ஊரில் உள்ளவர்களுக்கு சுளுக்கெடுப்பார். நிஜமாகத்தான், அவர் காட்டில் உழன்ற நேரம் போக மாலைநேரங்களில் ஊரில் உள்ளவர்களுக்கு சுளுக்கெடுப்பதில் தன் மூர்க்கத்தனத்தினை வடிகாலிட்டுக்கொள்வார். அதற்குப்பின் அம்மா மணலை வறுத்து துணியில் சிறு மூட்டையாக வைத்து சூடாக ஒத்தடம் கொடுக்கச்செய்வாள். அவர்களும் மறுநாள் வந்துஇப்போ பரவாயில்லம்மாஎன்று சுகம் உரைக்கையில் நான் அம்மாவின் உப்பு வைத்தியம்தான் குணப்படுத்தியதாய் நம்பினேன்.
நான் பள்ளி செல்ல துவங்காத நாட்களில் ஒரு நாள் அம்மா குளித்துக்கொண்டிருக்கையில் என்னை அழைத்து அருகில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த நீரினை எடுத்து வாளியில் ஊற்றச்சொன்னதை தவறாக புரிந்து அவள் மீதே ஊற்றித்தொலைகத்துவிட்டேன். அம்மா அலறபயத்தில் நான் வீட்டை விட்டு ஓடிவந்து மாலைவரை அப்பா வரும் வழியில் காத்திருந்தேன். மாலை அவர் துணையுடன் வீடு வந்து சேர்ந்தப்பின் அம்மாவை மெல்ல எட்டிப்பார்த்து அவளின் சிரிப்பினை கண்டுதான் விபரீதம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.
நான் நகர வாழ்க்கைக்கு ஆட்பட்டப்பின்னர் ஏம்மா அந்த காட்டுலயிருந்து கஷ்டப்படுற.. என்கூட வந்திடும்மாஎன்று பலமுறை அழைத்தும்உங்கப்பாவை யாராவது பாத்துக்கணும்டா, என்னை திட்டிக்கிட்டாவது என்கையால சாப்பிட்டாத்தான் அவருக்கு நிம்மதிஎன்று ஒரே மூச்சில் மறுத்துவிட்டாள்.
நேற்று ஊரிலிருந்து செல்போனிற்கு அழைப்பு  வந்தது.  ”தம்பி.. சுப்புதான பேசுறது.. நான் செல்வமணியண்ணன் பேசுறேன், உங்கம்மாவிற்கு சீரியஸ்.. உடனே கிளம்பி வாப்பா..” என்று அவர் முடிக்கும் முன்னர் யாரோ போனை அவரிடமிருந்து பிடுங்கிடேய் தம்பி.. அதெல்லாமில்ல.. அவங்க இறந்துட்டாங்க.. நீ சீக்கிரம் கிளம்பி வாப்பா. குளிர் டைம்தான் பாடிகாலைலவரை தாங்கும், வெச்சிருக்கோம் வாஎன்று கொச்சையாய் சொல்லிய வார்த்தைகள் மூளைக்குள் உறைக்க உணர்வுகள் சில்லிட்டுப்போனது.
தடுமாறி ஏதேதொ வண்டிகளை பிடித்து மாலை ஊர் சென்று சேர்ந்தேன்.  என் வாழ்வின் மிக கொடிய நீண்ட பயணமாக அது மாறிப்போனது. வீட்டினை அடைந்தபொழுது அக்காள்தான் என்னை ஆற்றாமையுடன் பார்த்து அரற்றலுடன் அழத்துவங்கினாள். எப்படிக்கா?.. என்னாச்சு?” குளிரையும் மீறி வார்த்தைகள் துண்டுத் துண்டாய் வெளிவந்தது.   “அப்பாக்கூட சின்ன சண்டைடா. எப்பவும் போல அழுதுட்டுநான் செத்தாத்தான் என் அருமை உங்களுக்கு புரியும்னு சொல்லிட்டு வெளிய போய் உக்காந்து இருந்தாங்க.. அப்புறம் காணோமின்னு தேடும்போது… ”  சொல்லிக்கொண்டே வீட்டின் பின்புறம் அழைத்துச்சென்று காட்டினாள்.
 வீட்டிற்கு பின்புறம் இருந்த பெரிய எருக்கஞ்செடியில் இருந்து நிறைய இலைகள் உடைத்து எடுக்கப்பட்டு அதன் பால் எல்லாம் ஒரு தொட்டாங்குச்சியில் சேகரித்து பாதி குடித்த நிலையில் மீதம் கொஞ்சம் வைக்கப்பட்டிருந்தது. “மயங்கி விழுந்தாங்கன்னு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போகும்போதே எல்லாம் முடிஞ்சுடுச்சுடாஎன்று முடித்தாள். நான் இன்னும் அழத்துவங்கியிருக்கவில்லை.
எனக்குத்தான் தெரியுமேஎன் அம்மாவின் கைமருந்தின் பக்குவம். நிரந்தர மனநிம்மதிக்கு சரியான கைவசமுள்ள மருந்து எருக்கம்பால்தான் என்று அவள் முடிவு செய்திருக்கலாம். ஆனால் ஒரு மருந்தினை தயாரிக்க அவள் எவ்வளவு சிரத்தையுடன் செயல்படுவாள் என்பதை நேரில் இருந்து அதிகம் பார்த்தவன் நான்தானே.
தம்பி.. உங்கண்ணனுக்கு தகவல் சொல்ல முடியல.. அதனால நீயே கொள்ளி வச்சுடுஎன்று எரியும் கட்டை என் கையில் கொடுக்கப்பட்டு பணிக்கப்பட்டேன். அன்று வெறும் சுடுநீருக்கே அம்மா அலறிய காட்சி கண்முன்னர் விரிந்து நான் பெருங்குரலில் அழுவதைத்தான் என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த முறை நான் வீடு திரும்புகையில் அம்மா புன் சிரிப்புடன் காத்திருக்கப்போவது இல்லை. இழப்பு என் மீது தீராக்காயங்களை உண்டாக்க துவங்கியிருந்த்து.
*******

Saturday, December 3, 2011

சசிகுமரின் ’போராளி‘ - திரைவிமர்சனம்

சமுத்திரகனியின் போராளி... மிகப்பெரிய தர்ம நியாய ங்களுக்காக போராடுவார் என்ற மிதமிஞ்சிய கற்பனைகளை கடாசி விட்டு முழுக்கவே அக்மார்க் சசிக்குமாரின் படத்தினை பார்க்கவே  தியேட்டருக்கு செல்லலாம்.


 நகரத்தில் வசிக்கும்  நண்பன் கஞ்சா கருப்புவின் வீட்டில் அவரது பாணியிலே தஞ்சம் புகும் சசிக்குமார் அல்லரி (குறும்பு) நரேஷ் சகாவினர் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச்சேர்ந்து பங்க் ஓனர் அண்ணாச்சியின் அபிமானத்துடன் அங்கேயே சுயதொழில் தொடங்கி... என்று ஸ்முத்தாக  செல்லும் திரைக்கதை... இவர்களை ஒரு கும்பல் தேடிவரும்போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்க துவங்குகிறது. யார் இந்த கும்பல் என யோசிக்கவைத்து இடைவரும் இடைவேளைக்குப்பின், திரைக்கதை
ஸுப்பர் ஸானிக் வேகம்தான்...

‘பிரச்சினை எதுவானாலும் முடிவை நான்தான் எடுப்பேன்‘ என்னும்  ஹவுஸ் ஓனர், கொஞ்சி‘க்‘கொஞ்சி பேசும் குடிகாரர் பேச்சிலர்,  சாந்தியை கட்டிக்கொண்டு ஷாந்தியின்றி தவிக்கும் ‘படவா’ கோபி, மற்றும் படம் நெடுக கஞ்சா கருப்பு, பின்பாதியில் ‘பரோட்டா’ சூரி என அனைவரும் காமெடியில் தோரணம் கட்டி கதகளி ஆடியிருக்கிறார்கள்.


மறுத்தும் சிபாரிசுகளுடன் வரும் ஸ்வாதியின் காதலை ஏற்றுக்கொள்வதற்கு நாயகனுக்கு காரணங்கள் பெரிதாக எதுவும்  தேவைப்படவில்லைதான்... ஆனால் அதற்கான ஞாயங்கள் மிகச்சரியாகவே கையாளப்பட்டிருக்கின்றன. குறைசொல்ல வைக்காத பாத்திரபடைப்புகள். சமுக அக்கறையுடன் கூடிய யதார்த்தங்களை இறைத்துப்போடும் பளிச்சென்ற வசனங்கள்  என கச்சிதமான படைப்பு.

சுந்தர் C பாபுவின் இசையும் தன் கடமையாற்றியுள்ளது.


விலாநோகும்படியான  பெருங்குரலெடுத்த சிரிப்புக்களும்,  தியேட்டரின் கோரஸான கைத்தட்டல்களும்,  போராளியின் வெற்றிக்குறிக்கான அறிகுறிகள்.

Thursday, October 6, 2011

திரு.வெற்றிமாறனின் ‘ஆடுகளம் ‘ - தேசிய விருதுக்கான நியாயங்களும் ஏற்புகளும்

கோடம்பாக்கத்தின்  குணக்கேடுகளுள்  ஒன்று...      ( குறிப்பாக சில இணை/துணை இயக்குனர்களின்.. )  வெற்றி  பெற்ற  அல்லது  வெற்றிபெறவேண்டிய படைப்புகளை கொண்டாடுவது இல்லையெனினும்  தூக்கி மிதித்துப்பார்க்க சமயம் பார்த்துக் காத்துக்கிடப்பது.  அதிலும் சமீபத்தில் சந்திக்க நேர்ந்த அத்துனை  துணைகளும், ஆடுகளம்”  படத்துல என்னய்யா இருக்கு?... என்று  சொல்லி வைத்தார்போல் ஒரு சேர புலம்பியதை பார்க்கையில் மனசு என்னவோ போலானது. 

 
           இந்தப்படம்  ’தேசிய  விருதினை   வென்றது ஏன்?’  என்று கேட்டபொழுது ’அதுல கோழி ச்சண்டை இருக்குல்ல... அதான்..’  என்ற துணை இயக்குனரின் பதில்   அவரின் அறியாமையா?...  அல்லது  அவரது அறிவு முதிர்ச்சியின் எல்லையா?.


           சக படைப்பாளியின் திறனை கொண்டாடும் திறனை கொண்டாடும் பக்குவம் எல்லாருக்கும் என்று வருமோ..  அதுவரைக்கும் ..   நேர்  நின்று நிலைப்பிறழாத  நியாயங்களை  நெஞ்சுக்குள்  திணித்திடும்   திறன் வளர்ப்போம்.

நமது நியாயங்களும் ஏற்புகளும்:

    CASTING/பாத்திரபடைப்பு: ’கருப்பு’ என்ற நாயகனின் பாத்திரத்தின் ஆக்கம் அசாதாரணமானது. சுருங்கச் சொன்னால்,  ’இந்தச்சேவல் ஆகாது அறுத்துப்போடு...’ என்று  சொன்ன அனுபவமிக்க குருநாதரின் வாக்கினை பொய்யாக்கி  அந்தச் சேவலையே பழக்கி பந்தயத்தில் வெற்றிபெற்று காட்டுகிறார். Anglo-Indian  இனத்தைச் சேர்ந்த, தன் வாழ்க்கை முறைக்கு சம்மந்தமில்லாத பெண்ணின் மீதான காதலில்,  தன் யதார்த்தமான இயல்பிலேயே ஈர்த்து  தன் வசமாக்குகிறார் . 

     நம்பிக்கை வைத்தால் குருநாதரை(ஐ.வெ.ச. ஜெயபாலன்) கடைசிவரை நம்பும் அவரின் வெள்ளந்தி மனசு... அதனால் விளையும் பூசல்களும் வன்முறைகளும்... அவரை நிர்கதியாக்கும்போது ... சேவலைப்போல சிலிர்த்தெழுந்து போராடுகிறார்.  சூழ்நிலையால் எதிராளியாக்கப்பட்ட நண்பருக்கு உயிர்ப்பிச்சை அளித்து, வன்முறை நிரந்தர தீர்வல்ல  என தீர்மானித்து  காதலியை கைப்பிடித்து வேறு புதிய வாழ்க்கையை தேடிச் செல்கிறார்.  நொடிகளில் சம்பாதித்த லட்சங்களை தன்னையே நம்பியிருந்த நண்பனிடம் விட்டுச்செல்வதன் மூலம்  ’இதைப்போல  எப்படியும் சம்பாதிக்க முடியும்’  என்ற கருப்புவின் மன தைரியம் வெளிப்படுகிறது.

 ’இணை’ துணைகளின் குமுறல்கள்:     

  • ’கோழிச்சண்டை நேச்சராவே இல்லைங்க...                                                           கருப்புவை வைத்து இயக்குனர் ஆட நினைத்த களத்தை கொத்திச்சமன் படுத்த  மிட்டுமே கோழிச்சண்டை களம்.
  •  ’பொண்ணு ஸ்டேட்டஸ் எங்கே?  தனுஷின் ஸ்டேட்டஸ் எங்கே?’ ...          கருப்பு அவளை அடைய  எந்த  ஹீரொயிசமும்  செய்யவில்லை. மாறாக அவனின் வெகுளித்தனத்தையும் தன் சொல்லுக்கடங்கும் தன்மையையும் அவள் ரசிக்கின்றாள். அதனாலேயே ஈர்ப்பும் வருவது இயல்புதானே?....
  இன்னும் விவாதிக்க நிறைய உள்ளன இந்தப்படத்தில்...


         படத்தைப்பற்றி ஒரே வரியில் சொல்வதானால்  "The Excellent Tamil Movie  from a Perfect Movie Maker Mr. Vetrimaran".

Monday, June 20, 2011

பெரும்படத்திற்கு நிகரான குறும்படம்


நட்புக்களே,
         சொல்ல நினைத்த விடயம்  ‘அட்டாச்மென்ட்’ லேயே
இருப்பதால்... Over to Attachment...

 

தலையும் தலையங்கமும்...

நண்பர்களே,

           சமீபத்தில் குமுதம் வார  இதழை ( 11.05.2011,  பக்கம் - 134) படிக்க நேர்ந்தபொழுது மனசுக்குள் மெலிதான பொறி தட்டினார்ப்போல் மெல்லிய சலனம்... அடடா..   இது நம்ம மேட்டராச்சே...  என்று சிலிர்த்து எழுந்து அமர்ந்து பார்த்தால் நமது  ‘தியேட்டர் டைம்ஸ்‘ கோவை பதிப்பில் 28.05.2011 அன்று வெளியான  இதழின்  ஆசிரியர் பக்கத்தின்  தலையங்கத்தின் ஆதங்கத்திற்கு விடையாக அந்த கட்டுரை அமைந்தது யாம் செய்த பாக்கியம்... 

தலையங்கம் -


குமுதத்தில் வெளியான கட்டுர

( நன்றி : குமுதம் வார இதழ்)

Wednesday, March 23, 2011

யார் யார் வாய் கேட்பினும்...

நடு நிசி நாய்கள்...  

சமீபத்தில் திரைக்கு வந்து ஓலமிட்ட ஒரு அருவருக்கத்தக்க தெரு நாயின் ...எச்சம் .  தமிழன் தலையில் கலைபசிக்கு தோண்டியது போக எஞ்சி விடப்பட்ட பள்ளத்தில் எதை வேண்டுமானாலும் கொட்டலாம் என்று 'தாழ்பரியம்' கொண்டு அலையும் வெகுசில ஜென்மங்களில் ஒன்றாகிய இந்த ...மேனன்'ஐ எதை கொண்டு அடித்தால் பித்தம் தெளியும் என்று யோசித்து கொண்டிருக்கும்  வேளையில்,  ௦01.௦03.2011 தமிழ் முழக்கம் வெல்லும் என்கிற இதழில் கீழ்க்கண்ட கட்டுரையை படிக்க நேர்ந்தபொழுது சற்றே மனசு ஆறுதலடைந்தது . 

மெய்பொருள் காண விழைவோர் காணவேண்டிய கட்டுரை.