Friday, August 24, 2012

பதினெட்டு வயசு – ரிப்பேரான மனசு!



திரைவிமர்சனம்:

  [ Cast: Johnny, Gayathri   Director: Paneerselvam  Producer: S S Chakravarthy   Music: Charles   Bosco, Dinesh Kanagaratnam   / Cinematography: Shakthi / Editing: Anthony Gonsalves  / Art Direction: Sanjay Karan / Screenplay: Paneerselvam  / Action Direction: Rajasekhar ]

ரேணிகுண்டா இயக்குனரின் அடுத்த படைப்பு என்ற அடையாள முத்திரையை சுமந்து வரும்போதே லேசான சந்தேகம். ”சந்தன மரத்துக்கு எதுக்கு சைன் போர்டு விளம்பரம்?” அது நிஜமாகவே சந்தனமரம் எனும்போது!. நல்ல படமாக இருப்பின் முந்தய எல்கேஜி ஐடி கார்டை யூகேஜியிலும் சுமக்க வேண்டாமே?!. 

இது கெட்ட அம்மாக்களின் சீசன் போல.. (ஐயோ மக்களே.. இதில் அரசியல் 0%: மற்றபடி சினிமாதான்.. சினிமாமட்டுமேதான்! ) மோசமான நடத்தையுள்ள அம்மா ’நான்’ விஜய் ஆண்டனிக்கு வாய்த்ததை போலவே இந்த ’ப.வ’ ஜானிக்கும் (யுவராணி) வாய்த்துள்ளார்.  விளைவு, அவர் அப்பா தான் அதீத பாசம் காட்டும் மகனை அம்போவென விட்டுவிட்டு தற்கொலை செய்துக்கொள்கிறார். அந்த பிணமான அப்பாவின் கோரமுகத்துடன் தொங்கும் கால்களை காலைவரை கட்டிபிடித்து அழுது, இடையிடையே அதிரும் மின்னல் இடியினால் அப்பொது பிடிக்கத்துவங்கும் மனநலக்குன்றல் படத்தில் அவ்வப்போது இடி இடிக்கும்போதெல்லாம் அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் படத்தை நீட்டியிருந்தால் நமக்கும் இதே பிரச்சினை லேசாக துவங்கியிருக்கும் போல. அநாவசிய காட்சி நீட்டல்கள்.


ஹீரோ ஜானிக்கு இதுபோலான சமயங்களில் எல்லாம் அருகில் இருக்கும் மிருகம் அல்லது அரவங்களின் குணாம்சம் ஒட்டிக்கொள்கிறது. இந்த மேட்டரை சொல்லிதான் டைரக்டர் ப்ரொட்யூசரை ஒப்பேத்தியிருப்பார் போல. இப்படி நிஜமாகவே ஏதேனும் வியாதி இருக்கிறதா? என லாஜிக் வகையறாக்களை பார்க்கத்துவங்கினால் படத்தின் பல இடங்களில் குச்சியினை வைத்து கிளற வேண்டி வரும்.

அப்புறம் காதலி கண்ணில் பட இவருக்கும் காதல் புரிபட துவங்குகிறது. அந்த காதலியும் பெற்றோரை இழந்து ஹீரோ இருக்கும் ஃப்ளாட்டில் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். ஒரு நிலையில் காதலிக்கு நேரும் பிரச்சினையிலிருந்து காப்பாற்றி அவளை தான் விரும்பிய படி (அல்லது) அடிக்கடி புலம்பியதுபடி, தான் போக நினைக்கும் காட்டுக்கே அவளை அழைத்து போக திட்டமிடுகிறார் ஹீரோ. அந்த நேரம் அவன் அம்மா யுவராணியின் காதலன் லிவிங் டுகெதருக்கு இவர்கள் வீட்டுக்கே வந்து சேர.. அவரை கோபத்தில் தாக்கி.. குறுக்கே வந்த அம்மாவையே போட்டுத்தள்ளிவிட்டு கிளம்ப, போலீஸ் வர, ரத்தக்களறியுடன் வரும் ஜானியுடன் வர நாயகி மறுக்கிறார்.

இந்நிலையில் இவரைவிட கொஞ்சம் முத்திய (வயசிலும்.. மனக் கோளாறிலும்..) ஒரு ஆள் இவருக்கு உதவி செய்கிறார். அப்புறம் ஹீரோ என்னவானார், காதலி என்னவானாள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிய அணுகவும் அருகில் ப.வ ஓடும் தியேட்டர்களை.

இயக்குனருக்கு சரக்கு போதாது போல. சொல்ல வந்ததை சவ்வுமிட்டாய் போல இழுத்து நம்மை சோதனைக் குழாய்க்குள் போட்டு குலுக்கி நுரை தள்ள வைத்துதான் வெளியே அனுப்புகிறார்.

நன்றாகவே இருந்தாலும் திணிக்கப்பட்ட பாடல்கள் சலிப்பையே உண்டு பண்ணுகின்றன. இன்னும் கொஞ்சம் அங்கங்கே வெட்டியிருக்கலாமோ என தொன்றுகிறது.   

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை, விஷுவலில் சொல்லப்படும் காட்சிகளையே வசனங்களிலும் விளக்க முனைந்திருப்பது, பெரிதாக ஈர்க்காத வசனங்கள், திட்டமிடாத காட்சியமைப்புகள், நாடகத்தனமான துணை நடிகர்களின் நடிப்பு என நிறைய மைனஸ்களை தாண்டியும் படத்தில் சில பிளஸ்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரு கில்மா படத்துக்கான டைட்டிலை வைத்த கையோடு, ஷகிலாவை ஓரம் கட்டி கால்ஷீட்டை வாங்கி பெட்ஷீட்டை விரித்து படம்பிடித்திருந்தால் ஒருவாறாக மனசை தேத்திக்கொண்டு வீடு திரும்பியிருக்கலாமோ?.

ஜானியின் காஸ்டிங் என்னவோ பல முன்னணி ஹீரோக்கள் செய்த (தெ.திருமகள் -விக்ரம், குணா –கமல் மற்றும் நம்ம செல்வராகவனின் –அனைத்து ஹீரோக்களும்) குணாதிசயங்களையே நினைவு ‘படுத்துகின்றன. வேறு ஏதேனும் புதிதாக யோசித்து இருக்கலாம்!

போஷாக்கான பாசம் கிடைக்காத நாலரை பால் அர்ஜூன்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் சமூக அக்கறை மட்டுமே படத்தின் மீது நாம் வைக்கும் கொஞ்ச அக்கறைக்கான காரணமாய் இருந்திடக்கூடும்.

Wednesday, August 15, 2012

அட்டைக்கத்தி -ஒரு மொன்னைப் பார்வை


         மதுபானக்கடையின் ஹேங் ஒவர்  தீரும் முன்னர்  ’ஒரு படம் பார்த்துவிடலாமே’ என்ற யோசனை உச்சிவெயில் நேரத்திலேயே ஊற்றெடுக்க, மாலை  தனிக்குழு கூட்டி அப்புறம் தனியாக  நிற்கிறோமே என்ற ஞானம் ஊற்றெடுக்க நேராக போய் நின்ற இடம்.. கோவை கே.ஜி.. ஸ்க்ரீன் 3.

பல நாட்களுக்கு பின்னர் நமக்கிருக்கும் ரிலையன்ஸ்* அலர்ஜியை சட்டை செய்யாது இந்த முறை தியேட்டருக்குள் நுழைந்தால், இருக்கைகள் பல இரு கைகளையும் இழந்து எண்ணை தலைகள் உரசிய
அட்டுடலுடன் காட்சியளித்தன. வெளிய என்னதான்  செக்யூரிட்டி பில்டப் கொடுத்தாலும்.. உள்ளே உரல்லதான் இடிச்சிகிட்டு இருக்கிறார்கள் பில்டப் பெருமாள்கள். (* ரிலையன்ஸ் எடுத்த புதுசுல இவங்க போட்ட ஆட்டம்.. சாமீ.. )

ஒரு வழியாக சரியான நேரத்திற்கு சற்று பின்னர் படம் துவங்கியது.

2000மாவது ஆண்டில் (கி.பி லதான்..) கதை துவங்குகிறதே அதனால் ஏதேனும் ஸ்பெஷலாக இருக்குமோ என்று கண்ணை உருட்டி எதையும் தேடவேண்டாம்.. கொஞ்சம் பழய அட்மாஸ்பியர் அவ்வளவே.

அச்சு அசலாக, அந்த நாட்களில் சென்னையின் அசலூராக இருந்து, இன்று ரியல் எஸ்டேட்  , க்களால் மத்திய சென்னைக்கு வெகு அருகில் சுமார் அறுபது கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமம்..

அங்கிருந்து தினமும் அட்டெம்ட்டுக்கு டுடோரியல் போகிறேன் என்று ’’காட்சி’’  கொடுத்துவிட்டு பஸ்ஸில் கிளம்பி  கண்ணில் கிடைக்கும் சுமாரான பெண்களை எல்லாம் காதல் வலைக்குள் வீழ்த்த பிரயத்தனம் செய்யும் சுமாரான இளைஞன் தினகரன். கடைசிவரை அவர் டுடோரியலை கண்ணில் காட்டாதது ஒரு ஆறுதல்.  கிளிஷேக்கள் தவிர்ப்பிற்காக இருக்கலாம். (புதுமுகம் தினேஷ் - நடிப்பில் அறிமுகம் என்பது கொஞ்சம்
ஆச்சரியம்தான். தம்பி நல்லா வருவே.. போகும்போது ஒரு டீ சொல்லிட்டு போ!)

எல்லா விஷயங்களிலும் ஓவர் பீலா.. கொஞ்சம் புருடா என கையாளும் பார்ட்டி மண்ணைக்கவ்வும் விஷயங்களில் கூட  வானளாவ ராக்கெட் விடும்போது ரசிக்கவைக்கிறார்.

இவர் பஸ்ஸில் வரும் பெண்களை மடக்க மேற்கொள்ளும்  அதிகப்பட்ச சாகஸமே ஃபுட்போர்டு அடிப்பதுதான். அதனையே  குலத்தொழில் போல செய்து வருகிறார்.

அதிலும் சில பல இடர்கள்.  திலும் வந்து சிக்குகிறார் உருட்டும் விழிகளுடன், தாவணியில், இயல்பான அவசியமான அழகுடன் பள்ளி மாணவி பூர்ணிமா.
பூரணியிடம் காதலை இன்றாவது சொல்லிவிடுவேன் என்று கிளம்பி பக்கதில் சென்றதும் அவள் ’அண்ணா’ என்று அழைக்க,  வெறுத்துப்போய் நிற்பவன் கொஞ்சம் வினாடிகளிலே டேக் இட் ஈஸி என கிளம்பியவுடன் அடுத்து தன்னை லுக்கு விடும் பெண்ணை டார்கெட் செய்ய..  மனசாட்சி மணியடிக்கிறது. அதனால் வாலண்டியராக சோகத்தை வரவழைக்க முயற்சி செய்து, தோற்றுப்போய், சிரித்து,  நான் ’இப்படி’த்தான் என நம்மிடம் சொல்லிவிடுகிறான்.

படத்திற்கு ஏன்  ’அட்டகத்தி’  என யோசிப்பவர்களுக்கு இயக்குனர் வைத்திருக்கும் ஒரு மொக்கையான காரணத்தை உங்களிடம் சொல்லி சுவாரஸ்யத்தை குலைக்க விரும்பவில்லை.

அதன் பின் ஒரே போல் உடையணிந்து வேலைக்கு செல்லும்  நதியா திவ்யாக்களை தன் அடுத்த வலைவீச்சில் இழுத்துபோட கிளம்புகிறார். அவர்களில் ஒருவரை மனமார(ற) தேர்வுசெய்து அவர்கள் ஊரிலேயே சொல்லப்போய் அடிவாங்கி பிழைத்து ஓடி வருகிறார். அப்படிஓடி வரும் வேகத்திலேயே உள்ளூர் கராத்தே மாஸ்டரிடம் சேர்ந்து  அவரிடம் பயிற்சி எடுக்கும் காட்சி அதகளம்.  அப்புறம் அங்கிருந்தும் பேக் அப். 

கடைசியில் ஒருவழியாக இருந்த ஒரு ஆங்கிலத்தை பாஸ் செய்து கல்லூரியில் சேர்ந்து ரூட்டு தல ஆகிறார்.

அங்கே மீண்டும் பூர்ணிமாவே வந்து நிற்க அதிர்ச்சி, சந்தொஷம், ஆச்சர்யம்.  நமக்கும்தான். அப்புறம்  அவருக்கும் பூர்ணிமாவுக்கும் காதல் வந்ததா இல்லையா என்பது மீதிப்படம். 


நாயகனின் அப்பா, அம்மா, அண்ணன் நண்பர்கள் என அனத்துக் பாத்திரங்களும் யதார்த்ததை வழியச்சுமந்து இருக்கின்றன. அளவு, அழகு.

இயக்குனர் யாரும் எதிர்பாராத விஷயங்களையே காட்சிகோர்வையாக வைக்கவேண்டுமென மெனக்கெட்டு அமைத்திருப்பார் போல.  படம் முன்பாதி ஜெட்டு போல் கிளம்பி  ஏரோப்ளேனாக மாறி கடைசியில் நம் பொறுமையை சோதித்து கட்டைவண்டியாக வந்து சேர்கிறது.

புனைவுகளும், சினிமாத்தனமும் இல்லாத அருமையான உணர்ச்சி பதிவுகள்,  விடலைக்காதல், எல்லாவற்றையும் அழகாய் சொன்ன இயக்குனர் கதைய ட்விஸ்ட்டு பண்ணுகிறேன் பேர்வழி என ஹீரோவை

ஒருதலையாக காதலிக்கும் பெண்ணை அயிட்டம் ரேஞ்சுக்கு உரசவிட்டு.. (அயிட்டமே இப்படி ஓசியில் உரசுமா? என அனுபவசாலிகள் பின்னூட்டம் போட்டா தேவலாம்..) குழப்பியடித்து மட்டுமல்லாது
அதன் பின்னான காட்சிக்கோர்வைகளை காற்றில்  விட்டுவிட்டார்.

கல்யாணமாகி இன்று ஓரிரு குழந்தைகளுக்கு அப்பனாகியிருக்கும் ஆளா நீங்கள்.. அப்படியென்றால் இந்த ஹீரொவின் செயல்களின் சாயல் உங்களிடம் கொஞ்சமேனும் இருக்கும்.

தலைப்புக்கு நியாயம் செய்தாலும், கிளைமாக்ஸை இன்னும் கவனமாக செதுக்கியிருந்தால் ஒரு சூப்பர் ’சூரிக்கத்தி’ கிடைத்திருக்கும்.

பின்னணி இசை ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். (கம்ப்யூட்டரில் இசைக்கும் காலத்திலும் பின்னணி இசை என்பது சரிதானா? ).  'ஆசை ஒர் புல்வெளி , 'ஆடி போனா ஆவணி' பாடல்கள் நன்று.  நடுக்கடலிலே.. கானா தாளம் போடவைக்கும்.

தாராளமாய் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.. ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது .

Monday, August 6, 2012

மதுபானக்கடை - குப்பை அலசல்


ஒரு குவாட்டர் அடிக்காம தியேட்டருக்குள்ள போனா அப்புறம் உங்க உசுருக்கு உத்திரவாதமில்ல..

ரொம்ப ராவா இருக்கு சார்..     படத்த சொன்னேன்.

 அட! டைட்டில வித்தியாசமா போடுறானுங்களேன்னு நிமிந்து ஒக்காந்தேன் சார்.. இடுப்பு புடிச்சுகிச்சு.. பக்கத்து சீட்ல உள்ளவரு, நான் என்னமோ ஒரு ஆர்வக்கோளாறு மாதிரியும்.. ஆசப்பட்டு நுனி சீட்டுல ஒக்காந்து படம் பாக்குற மாதிரியும் கடுப்புல என்னை பாத்துட்டே இருந்தாரு.. அத விடுங்க சார்..

கதையதான் தேடாதீங்கன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்க.. ஆனா என்ன சொல்ல வர்றாங்கன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்லன்றேன்..

கதயத்தான் சொல்லவரலியே.. தண்டக்கருமாந்திரம் காதலயாவது உருப்படியா சொன்னானுங்களா..

பல நேரங்கள்ல மூஜிக் போடுறவரு போடனுமா வேண்டாமான்னு கன்ஃப்யுஷன்ல போடாம விட்டது, படம் நீளமா இழுக்குதோன்னு ஃபீல் பண்ண வெக்குது..


 கலந்துக்கட்டி கில்லி மாதிரி சொல்ல வேண்டிய லொக்கேஷன்ல படம் நொண்டியடிச்சிகிட்டு இருக்கு.

ஆரம்பத்துல ஊரவுட்டு ஓடிப்போற காதல் சோடிக்கு பின்னாடி டி பெருசா ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு பதற வெச்சுட்டு படத்த ஆரம்பிச்சு என்னன்னமோ சொல்ல வந்து எதயுமே முழுசா சொல்லாம போயிட்டாங்க..

அச்சு அசலா பல குடிமகன்களை காட்டி படம் முழுக்க நெரப்பி வெச்சிருக்காங்க. ஆனா அதுனாலயே ரசிகர்களுக்கு யார்மேல ஏறி படத்துக்குள்ள போறதுன்ற கொழப்பம் தீர்றதுக்குள்ள படம் பொசுக்குன்னு முடிஞ்சு போயிடுது.

 நல்ல விஷயம் நெறய சொல்லியிருக்காங்க.. ஆனா ஒரு கோர்வையா  சொல்லாதது சீக்கு விழுந்த கோழித்தல மாதிரி அப்படி இப்படின்னு ஆடிக்கிட்டே இருக்கு.

சரியா சொல்லனும்னா பெரிய குப்பத்தொட்டிக்குள்ள பிச்சக்காரன ஏத்திவிட்டுபுட்டு ஏதாவது எனக்கும் வீசுறான்னு கெஞ்சிட்டு கீழ நின்னா வந்து விழுமே...   அது மாதிரிதான் நாமளும் ஸ்க்ரீன பாத்துகிட்டு இருக்கோனும்..தெவப்பட்டது வரும்போது பிடிச்சுக்கனும்..

கேமரா நல்லாருக்கே சார்? ஸோ வாட்.. அத எங்க கொண்டுபோயி வெச்சுக்கறது..  நெறயா டயாலாக் சூப்பரா இருக்கே சார்? அத வேணா தஞ்சாவூர் கல்வெட்டுல குறிச்சு வெச்சுக்கலாம் சார்..

ஆனா ஒன்னு சார்,  ஆ.. ஊன்னா டர்ர் புர்ர்ன்னு டெர்ரரா மூஜிக் போட்டு என்னவோ பயங்கரமா நடக்கபோறா மாதிரி கிலிய கெளப்பிவிட்டுட்டு.. பொளக்கட்டீர்னு சீனை மொக்கயா முடிச்சுடுறாங்கோ.. 

கெவுர்மெண்ட்ட்ட நெறய கேள்வி கேக்குறாங்கோ.. கம்யூனிசம் சோஷலிசமெல்லாம் பேசுறாங்கோ.. ஆனா மலப்பாம்புமாதிரி எடுக்கப்படவேண்டிய படம் நத்தை மாதிரி நம நமன்னு ஆயிடுது.

போதும் சார் இதுக்குமேல எனக்கு பொறுமையில்ல.. 

இன்னும் வெலாவரியா வசனம் முதற்கொண்டு தெரியனும்னா கீழே உள்ள லின்க்க க்ளிக்குங்கோ.. தெரிஞ்சுக்கலாம்..

http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html    

 நன்றி: சென்னிமலையார்


மச்சி இன்னொரு கோட்டர் சொல்லேன்.... 



ப்ளாக்லயாவது சொல்லேன்..