Saturday, October 12, 2013

சாதகம் பாக்கலியோ!



சாதகம் பாக்கலியோ!
#சிறுகதை

காதலித்தவளையே கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என்று முடிவானவுடன் முதலில் ஓடிப்போவது என்ற தீர்மானத்தைதான் என் காதலி அகிலாவிடம் முன் வைத்தேன்.  முதலில் அரைமனதாகசரிஎன்று சொன்னாள். அப்புறம் என்ன யோசித்தாளோ, ”எதற்கும் எங்கப்பாவிடம் வந்து ஒருமுறை பெண் கேளுங்கள், அவர் சம்மதிக்கவில்லை என்றால் அப்புறம் நாமே ஒரு முடிவிற்கு வரலாம்!” என்று தீர்மானமாய் மறுத்துவிட்டாள்.
      பரவாயில்லையே, இந்தளவிற்கு தந்தையை மதிப்பவளை காதலியாக பெற்றமைக்கு கொஞ்சம் ஓவராகத்தான் புளங்காகிதம் அடைந்தேன். இரண்டொரு நாளிலேயே தன் அப்பாவிடம் பேசிவிட்டு, ”அப்பா உங்களை பாக்கணும்னு சொல்லுறாரு, இன்னைக்கு சாயங்காலம் வாங்களேன்என்றாள்.
      மாலையே ஃபிரெஷ்ஷாக குளித்து, இருப்பதிலேயே டீஸண்ட்டான சட்டை ஒன்றை அணிந்துக்கொண்டு கிளம்பினேன். போகும் வழ்யிலேயே நான் என்னைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன். நானும் உலகில் சிறந்தது ஆன்ராய்டா, ஓஎஸ்ஸா? என குழம்பிக்கொண்டு அலையும் சராசரி ஹைடெக் சிட்டிஸன்தான். சாஃப்ட்வேர் ஜாப், கைநிறைய சம்பளம், கணிசமான பணம் சேர்ந்தபின்னர் ஊர்ப்பக்கம் சென்று இயற்கை விவசாயம், தோப்பு பண்ணை வீடு என்று செட்டிலாகிவிடும் எதிர்கால திட்டம். தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அந்த திட்டங்களை எல்லாம் ஓரங்கட்டி வைக்குமளவிற்கு என்னை மாற்றியது இந்த அகிலா என்ற அழகு ராட்சஸிதான்.
      அவள் என் டீமில் வந்து சேர்ந்து ஒரு வருடம் இருக்கும், நானும் என்னாலான ஆரிய வித்தைகள் அனைத்தும் மேற்கொண்டு என் வலையில் அவளை வீழ்த்த மேற்கொண்ட பிரயத்தனங்கள் கொஞ்சமா நஞ்சமா?. ஒரு வழியாக சம்மதித்து அவள் கொடுத்த காதலை, பிட்ஸா, பர்கர், கப்புச்சினொ என அனைத்து அன்னிய உணவுகளையும், ஊட்டி வளர்த்தேன். அது இப்போது வளர்ந்து இன்று அவள் வீட்டிற்கே சென்று பெண் கேட்கும் அளவிற்கு நிற்கிறது.   
      ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடலாமா?’ என்றபோது, ”அந்தளவிற்கு தைரியம் உள்ள உனக்கு ஏன் எங்கள் வீட்டில் பெண் கேட்க துணிச்சல் இல்லையா?” என்று என்னை ஒரே கேள்வியில் மடக்கி விட்டாள்

      டிவைன் அப்பார்மெண்ட்ல் அவர்களது கொஞ்சம் பெரியவீடுதான், என் கிராமத்து வீட்டைப்போல மூன்றுமடங்கு இருக்கும். கதவைத் தட்டியதும் அகிலாவின் அம்மாதான் திறந்தார்கள். லேசான புன்முறுவல்தான் வரவேற்பாய் கிடைத்தது. ஹாலில் அவள் அப்பா அமர்ந்திருந்தார். அவரின் இறுக்கமான முகம் எனக்கு நாசரை நினைவுபடுத்தியது. ”வாங்க!” என்ற ஒற்றைச்சொல்லுடன் சோஃபாவில் அமரச்சொல்லிய கையசைப்பு இனாமாய் வெளிப்பட்டது.
      என் சுயவிபரங்களை மேலோட்டமாய் கேட்டுக்கொண்டார்.  இங்க பாருங்க வினோத், எனக்கு ஜாதி முக்கியமோ இல்லையோ ஜாதகம் ரொம்ப முக்கியம், உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்திச்சுன்னா பாருங்க, உங்க வீட்டு பெரியவங்களோட பேசி ஒரு முடிவுக்கு வரலாம். அதுசரி.. உங்களுக்கு ஜாதகம் எழுதியிருக்குல்ல?” என்று கேட்டார். ”இருக்கு ஸார்!”என்றேன் அநேகமாய் என் வாழ்வில் நான்யோசிக்காமல்சொன்ன முதல் பொய்யாக இருக்கும்.
      மறுநாள் ஆஃபிஸ் வந்தவுடன் அகிலா கேட்ட முதல் கேள்விஎன்ன வினோத் ஜாதகம் கொண்டு வந்திருக்கியா?” என்பதே. “என்கிட்ட ஜாதகமே இல்லைஎன்றவுடன் ஷாக்காகி என்னை பார்த்தவள், “ஜாதகமே இல்லையா?, அய்யய்யோ, உனக்கு ஒரு ஜாதகம் இருந்து அது எனக்கு பொருந்தி.. போச்சு போ.. என்னடா செய்யப்போற?” என்று ஒரு பவுன்சரையும் வீசினாள். இந்த காதலிகளே இப்படித்தான் பட்டென்று ஆண்கள் மீது சுமையை இறக்கி வைத்துவிடுவார்கள்.
      சரி ஒண்ணு செய்யலாம், எப்படியும் ஜாதகம் எழுதணும், அதயே உன்னோட ஜாதக்த்தோட கம்பேர் பண்ணி பொருத்தம் வர்றமாதிரியே எழுதிடலாமே? என்னச் சொல்லுறே?” என்று ஒரு ஐடியாவை முன்வைத்தேன். ”ஃபோர்ஜரியா? அடப்பாவீ!என்று டென்ஷனாகிவிட்டாள்.
      முன்னே பின்னே தெரியாதவங்க கல்யாணம் பண்ணிக்கவே ஆயிரம் பொய்யைச் சொல்லலாம்னா.. நல்லா தெரிஞ்ச நாம ஏன் ஒரு பொய்யை சொல்லக்கூடாது?” என்ற என் நியாயமான வாதத்தை முன்வைத்தேன்.
      கரெக்ட்டா ஜாதகம் பாத்து வாழுறவங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்கன்னு உன்னால சொல்லமுடியுமா?, இல்லை அப்படி பண்ணினவங்க எல்லாரும் டைவர்ஸ் ஆகாம     ஒன்னாத்தான் லைஃப்ல இருக்காங்கன்னும் சொல்லமுடியுமா? நம்மளுக்குள்ள நல்ல    மனசுப் பொருத்தமும் விட்டுக்கொடுக்கும்பக்குவமும் இருந்தா போதும் , இந்த ஃபோர்ஜரி ஜாதகமே உங்கப்பாவ சமாதானப்படுத்த   மட்டும்தான்ப்பா.. இல்லைனா நாம ஓடிப்போய்தான் கல்யாணம் கட்டிக்கணும்!” என்றேன்.
      அவளை சமாதானப்படுத்திவிட்டேன், ஆனால் இந்த போலிஜாதகம் எழுத அலைந்த பிறகுதான் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. நல்ல ஜோசியர் மட்டுமல்ல, போலி ஜோசியர்கள் கூடபோலியா ஜாதகம் எழுதமாட்டேன்!” என்பது நிச்சயமாய் விநோதமானஜாப் எதிக்ஸ்தான்.  அகிலாவிற்கு பொருத்தமான எனது பிறந்தநாளைக் கண்டுபிடிப்பதுவே மிகச் சிரமமான வேலையாய் போனது.
      ஒருவழியாய் கடையநல்லூரில் ஒரு முட்டுசந்தில் கிடைத்தவின்னர் டிவி புகழ்!?” ஜோதிடர் ஒருவருக்கு சுளையாய் ரெண்டாயிரம் வெட்டியவுடன் ஜாதகம் தயாரகத் துவங்கியது.  எழுதிக்கொடுத்த ஜாதகத்தை கையில் வாங்கியவுடன்தான் என் அலைச்சல் முடிவுக்கு வந்தது.  
      முதல் வேலையாக அகிலாவுக்கு சொல்லிவிடலாம் என்று அகிலா கையில வாங்கிட்டேன்என்று சொன்னதும் அவள் சொன்னதுதான் எனக்கு அடுத்த அதிர்ச்சி. “வினோத், எங்கப்பா நீ கொண்டு வர்ற ஜாதகத்தை எங்க குடும்ப ஜோசியர்ட்ட கொடுத்து கேப்பாராமா!”  என்றாள்.                       அதுனால என்னா பிரச்சினை?” என்றேன் அப்பாவியாய்.                                       புரியாம பேசாத வினோத், எல்லா ஜோசியர்களும் ஒருத்தர் சொன்னத இன்னொருத்தர்       ஏத்துக்கிட்டாங்கன்னா நாட்டுல எல்லா கல்யாணமும் காலாகாலத்துல நடந்துடுமே!?” என்றாள். தொடர்ந்துஎதுக்கும் நீ வேணா நம்ம ஜாதகத்தை  இன்னொரு ஜோசியர்கிட்ட கொடுத்து நம்ம பொருத்தம் எப்படின்னு கேட்டுப்பாரு, ஒரு ஐடியா கிடைக்கும்என்றாள்.
      சரியெனப்பட்டதால் மறுபடியும் ஒரு ஜோஸியரைத்தேடும் படலம் ஆரம்பமானது. முதலில் என் நினைவுக்கு வந்தவன், எனது நண்பர்களிலேயே ரொமப ஆர்தடக்ஸ் பார்ட்டியான சிவசு’.  அழைத்த ஐந்தாம் நொடியிலேயே போனை எடுத்தான். விஷயத்தில் இருந்த வில்லங்கங்களை மறைத்து, பேஸிக் விபரம் மட்டும் சொல்லி விளக்கம் வாங்கிக்கொண்டேன். 
      அடுத்தகணம் கோட்டூர் ஜோஸியரின் ஸ்பாட்டில் நான் ஆஜர். வரிசைக்கிரமத்தில் காத்திருந்து நான்காவது ஆளாக நுழைந்தேன். எங்கள் இருவரின் ஜாதகத்தின் எல்லா கட்டங்களையும் பார்த்தவர், “இது ஒத்தே வராத சம்பந்தம் தம்பி, இது புத்திரபாக்கியத்துக்கு உகந்த பொருத்தமல்ல. மாப்பிளைக்கு ஜாதகப்படி இருக்கிற இரண்டு தோஷங்களை நிவர்த்திபண்ணிட்டேள்னா, ஒருவேளை மண வாழ்க்கை சுகப்படலாம்.. “ என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். அதற்கு பின் அவர் சொன்ன கட்ட கணக்குகளின் பிணக்குகள் என் காதில் ஏறவே இல்லை. வாழ்க்கையே வெறுத்தே போனது.         
      யோசனையுடன் வெளியேறி பைக்கை நோக்கி நடக்கும்போதே அகிலாவின் போன். “சொல்லுஎன்றேன் விரக்தியாய். “என்ன ஆச்சு?என்றாள். நீ சொன்னாப்போலதான், இந்த ஜோஸியரு வேற மாதிரி சமப்ந்தமே இல்லாம என்னென்னமோ சொல்லுறாரு. குழப்பமா இருக்கு அகிலாஎன்றேன்.
      அன்று இரவெல்லாம் யோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். மறுநாள் அகிலா வீட்டின் அருகில் உள்ள கோவிலில் சந்திப்பதாய் ஏற்பாடு.  அகிலாவின் அப்பாவோடு அவரது குடும்ப ஜோதிடரும் வந்திருந்தார்.       கோவில் பிரகாரத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் சென்று அமர்ந்தோம். அகிலா வரவில்லை. அவள் அம்மா மட்டும் உடன் வந்திருந்தார்.
      எந்த தயக்கமும் இல்லாமல் எனது ஜாதகத்தை எடுத்து கொடுத்தேன். ஓரங்களில் புதுமஞ்சள் பூசி இருந்ததை சந்தேகமாய் பார்த்தவர் கவரைப் பிரித்து பார்த்த்தும் எழுந்து நின்றே விட்டார். நிமிர்ந்து என்னை அதிர்ச்சியாய் பார்த்தவர் என் உறுதியான முகபாவத்தை உணர்ந்து மீண்டும் படிக்கத்துவங்கினார்.
      ஜோதிடரும், அகிலாவின் அம்மாவும் அவர் முகத்தின் ரியாக்‌ஷன்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். எனக்கும் மனதுக்குள் படபடவெனத்தான் இருந்த்து. 
      என்ன நினைத்தாரோ வினோத், என் இடத்துல யார் இருந்தாலும் இதப்பாத்து எப்படி கோப்ப்பட்டிருப்பாங்கன்னு தெரியாது., எனக்கு கோபம் வந்தாலும், அதையும் தாண்டி இதுல இருக்கும் நேர்மையும், உண்மையும் பிடிச்சிருக்கு அதவிட உங்க சமயோசிதம் ரொம்ப்ப் பிடிச்சிருக்கு, உங்கப்பா அம்மாவ வரச்சொல்லுங்க, மேற்கொண்டு பேசலாம் என்று கூறிமுடித்தார்.
      எனக்கு மனசுக்குள் படபடத்த அத்தனை உணர்வுகளும் பட்டாம்பூச்சியாய் பறக்க ஆரம்பித்தன. ஜோதிடர் “குடுங்க சார், கட்டங்கள்ல சிலது உங்களுக்கு புரியாது, நான் பாத்து சொல்லுறேன்என்று தன் வேலையை ஆரம்பித்தார். “வேண்டாம் ஜோசியரே, இது எல்லாருக்கும் புரியும்படியான ஜாதகம்! நாம சாமிய கும்பிட்டு கிளம்பலாம்..என்று சொல்லிவிட்டு இறுக என் கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு நகர்ந்தார்.
      அகிலாவிற்கு நான் சொல்லுவதைவிட அவள் அப்பாவே சொல்லும் வரை சஸ்பென்ஸ் வைக்கலாம் என்று முடிவுசெய்து அவள் போனுக்காக காத்திருக்க துவங்கினேன்.   
      டேய்.., என்னடா பண்ணினே.. அப்பா ரொம்ப ஹாப்பிடா, நான் தவிச்சே போனேன் தெரியுமா?. ஜாதகத்த மறுபடியும் எழுதிவாங்கிட்டயா?என்றாள்.
“இல்ல அகி, நானே என் ஜாதகத்த நானே எழுதிட்டேன்
என்னடா சொல்லுறே?!அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள்
“ஆமா அகி, அந்த ஜாதகத்த உனக்கு மெயில்ல அனுப்பறேன்
சீக்கிரமா, எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல
      செல்போனை எடுத்து இந்த ஜாதகத்தை போட்டோ பிடித்து மெயிலில் அனுப்பிவிட்டேன். நண்பர்களுக்கு இன்னைக்கு பார்ட்டிக்கு வாங்கடா என மெஸேஜ் தட்டிவிட்டு கிளம்பினேன்.
      நான் அகிலாவின் அப்பாவிடம் கொடுத்த ஜாதகத்தின் காப்பி உங்களுக்கும் வேணும்னா, எனக்கு மெயில் அனுப்புங்க, அனுப்பி வைக்கிறேன்.
      என் மெயில் ஐடி இதுதான்.. yathaarthanvino@gmail.com.. ,
                சொல்ல மறந்துட்டேன் உங்களுக்கும் ஜாதகம் எழுதணும்னா எங்கிட்ட வாங்க!


            12                  1                  2                  3
உங்கள் சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம்!

முதலிடத்தில்: என் பெற்றோர்
இரண்டாமிடத்தில்: தங்கை, படிக்கிறாள், அவளை கடைதேற்றும் கடமை உள்ளது
பல தலைமுறையாக விவசாய குடும்பம்
எப்போதாவது கொஞ்சம் குடிப்பது உண்டு
ஆஃபீஸ் விழாக்களில் மட்டும்!
நா.வினோத் குமார்
ஜாதக கட்டம்
முதல் தலைமுறை பட்டதாரி
ஒரு ஃபிளாட் ஹயரில் வாங்கியுள்ளேன்
நேரம் தவறாமை என் சிறப்புகுணம்
உங்கள் மகளை முழுமையாக புரிந்து வைத்துள்ளேன்
சுயம் இழக்கமாட்டென், எந்த சூழலிலும், ஆனால் ஈகோ கிடையாது
சிகரெட், பாக்கு பழக்கங்கள் பழகிட வாய்ப்பு கிடைக்கவில்லை
முன்கோபத்தை முற்றிலும் குறைத்துக்
கொண்டேன்
            9                 8                   7                  6                                                       
      இதுதாங்க என்னோட ஜாதகம்! காப்பியடிச்சு எழுதாம, ஃபோர்ஜரி பண்ணாம சரியா எழுதுங்க பாஸு. நல்லாருக்கும் வாழ்க்கை!.
***