Thursday, October 3, 2013

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் - மறு(ப்பில்லா)பார்வை!




தனிமை ஓநாயின் ஓலம்..



ஒரு வகையில் இது தனிமை படுத்தப்பட்ட / தனித்து விடப்பட்டு.. பின்னர் எதிரிகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்படும் ஓநாய், திரும்பி நின்று எதிர்த்து நின்று வேட்டையாடி, மாரில் அறைந்து அறைகூவலாய் ஓலமிடும் ஓசைதான் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

’முகமூடி’யில் சந்தர்ப்ப சூழல்களால் நினைத்ததை நினைத்தபடி எடுக்கமுடியாமல் போய், பல்வேறு எதிர்ப்புக் கணைகளையும் நெகட்டிவ் விமரிசனங்களையும் மாரில் வாங்கிய வலியோடு தன் விஸ்வரூபத்தினை காட்ட மிஸ்கின் எடுத்த அவதாரம் இந்த ஓநாய் வடிவம்.   

வில்லன்களாலும், போலீஸாராலும் தேடப்படும் மோஸ்ட் வாண்ட்டட் க்ரிமினல், தன் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை காப்பாற்றி அவர்களோடே தன் மீத வாழ்வினை வாழ்ந்திட முனையும் போராட்டம்தான் கதை. 

மிஸ்கினின் வழக்கமான பாணியில் ’ஹாஃப் வே’ ஓப்பனிங்கில் படம் துவங்குகிறது. குண்டடிப்பட்டு சாலையில் கிடக்கும் ’வுல்ஃப்’ என்று அழைக்கப்படும் எட்வர்டை (மிஸ்கின்) மருத்துவ கல்லூரி மாணவர் ’ஸ்ரீ’ காப்பாற்றுகிறார். அதுவே அவருக்கு வினையாக அமைய, போலீஸ், சிபிசிஐடி என இரு தரப்பினரும் அவரை வைத்தே ’வுல்ஃபை’ பிடிக்க திட்டம் போடுகின்றனர்.

ஸ்ரீ ஏன் அவரை ’108’ அவசர உதவிக்கு அழைக்காமல் அங்குமிங்கும் அல்லாடுகிறார் என்ற  சின்ன லாஜிக் நெருடலுடன் திரைக்கதையை துவக்கினாலும் மீதமுள்ள நிமிடங்களில் நம்மை கதையின் உள்ள்ள்ள்…ளே  இழுத்துப்போடும் லாவக வித்தைக் கற்ற இயக்குனரிடம் மோதி இந்த லாஜிக் ராக்கெட் சின்னாபின்னமாகிறது.

முன்கதை ஒன்றைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதால் எல்லோரின் கவனமும் அட்டகாசமான ஆக்‌ஷன் ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்திருக்கையில், அந்த கதையினையே கல்லறையில் ஈரம் காயாத சவக்குழி முன்பாக நிலைக்குத்திய விழிகளோடு, வார்த்தைகளாலேயே விரித்துரைக்கும் பொழுது மொத்த தியேட்டரும் நிசப்தமாகி, கதையினை சொல்லிமுடித்து எட்வர்ட் கண்ணீர் விடுகையில் கண்ணீருடன் கை தட்டாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஃப்ளாஷ்பேக்கை சிக்ஸ்பேக்கைவிட முக்கியமாக கருதும் தமிழ் ரசிகர்களுக்கு இப்படி க்ளீன் ஓரல் நரேஷன் மூலம் சொல்லத்துணிந்த தைரியம்.. ஆச்சர்யம்தான். சபாஷ் இயக்குனரே. 

எதிர்பார்க்காத தருணத்தில் சுடப்படும்போது சுடப்பட்டவர் உதிர்க்கும் ‘சண்டாளா!’ போன்ற ஒற்றை வசனங்கள் என்னைப் போன்ற காமிக்ஸ் பிரியர்களுக்கு மட்டுமே பரிச்சயமானவை. ஆனால் அதனையும் தியேட்டர் ரசிகர்கள் கைதட்டி ரசித்தது ஆச்சர்யப் புதிராகவே இருந்தது.

கடைசியில் குழந்தையை ட்ராலியில் தள்ளிக்கொண்டு போகையில் மறைந்திருக்கும் எதிராளியை யதார்த்தமாய் திரும்பிப்பார்த்து சுடுவது போன்ற ஹாஸ்யங்கள் கைத்தட்டல்களை அள்ளுகின்றன.
காட்சிகளின் பலவிஷயங்கள் நமது கணிப்பிற்கே விடப்படுகின்றன.
அந்நியமான காட்சி அமைப்புகள், வழக்கமான சினிமா பாணியில் அல்லாத பெயர் தெரிவுகள் என்று இருந்தாலும் அந்த வட்டத்தினுள் நம்மை இழுத்துச்சென்று கதை சொல்லுவதால் அது உறுத்தாமல் இருக்கிறது.
வழக்கமாய் பாத்திரங்களுக்கான எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் காட்சிகளை தவிர்க்கும் இயக்குனர் இதில் அந்த கட்டுப்பாட்டுக்கு விலக்கு அளித்துள்ளார்.
ஒரு க்ரைம் திரில்லருக்கான ஷரத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த படம் வளரும் இயக்குனர்களுக்கு நிச்சயமாய் ஒரு முன்மாதிரி.

இளையராஜா… இசைதேவன்.. சொல்லியும் தெரியவேண்டுமா.. இந்த படத்தின் பின்னணி இசை எல்லாவற்றிற்கும் மேல் வெகு சிறப்பு.  பார்வையாளனின் கவனத்தை திசைத்திருப்பாது, காதுகளை பதம் பார்க்காது, அவசியப்படுகையில் தன் இருப்பை உணர்த்தும் இசையப்பாளர் இந்த இசைதேவன் தன் அனுபவ பங்களிப்பை நிறைவாய் செய்திருக்கிறார்.

கத்தாழை கண்கள் கொண்ட கன்னித்தீவுப் பெண்களின் நடனம் மிஸ்ஸிங்கு.

கேரக்டர்கள் கனகச்சிதம், வழக்கமாக எல்லா பாத்திரங்களும் ஒரே பாடி லேங்குவேஜில் இயங்கும் மிஸ்கின் படங்களில் இருந்து இந்த படத்தில் ஸ்ரீ, இன்ஸ்பெக்டர் பிச்சை, சிபிசிஐடி அதிகாரி என அனைவரிடமும் தத்தமது இயல்புகளிலேயே வேலை வாங்கியிருப்பதும் கொஞ்சம் புதிதுதான்.

ட்விட்டர் சமூக தளத்தில் ஒருவர் எழுதியிருந்தார் இப்படி “இறைவா தயவு எப்படியாவது இளையராஜா மிஸ்கின் இருவருக்கும் சாகாவரம் கொடுத்துவிடு!” என்று.  கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும் படம் பார்த்தபின் அந்த கருத்துக்கான நியாயமும், ஏற்புகளும் புரிந்தது. 
 
சினிமாவிற்கு வெளியேயும் ஒரு கலைஞனை காயப்படுத்தினால் அவன் தன் படைப்பின்  மூலமாகத்தான் பதில் சொல்வான். அந்த பதில் இந்த ஓநாயின் ஓலத்தில் இன்னமும் காதுகளுக்குள் எதிரொலித்தபடி இருக்கிறது. 

ம்ம்.. என்னவோ சொல்ல மறந்துவிட்டேன்.. ஆங்.. வழக்கம்போல இது எந்த படத்தின் காப்பி என மண்டையை குழப்பிக்கொண்டிருப்பவர்கள் பதினாலாம் நூற்றாண்டிற்கு ’கால இயந்திர’த்தில் ஒரு டூர் போய் வருதல் நலம்.

4 comments:

  1. However, even a good movie cannot hold the space of its own when not promoted till bottom. Your review is good.
    Meganathan, Cbe

    ReplyDelete
  2. A good movie where music plays hero

    ReplyDelete
  3. ஐ லவ் யூ மிஷ்கின்! வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஐ லவ் யூ சொன்னா மட்டும் போதாது.. கடைசிவரை கட்டி காக்கணும் அவர் படங்களை.. ஆமா..

      Delete