Wednesday, February 12, 2014

புலிவால் - கெட்டியா புடிச்சுக்கணும்!

புலிவால்  - திரைப்பார்வை

’கண்ணும் கண்ணும்’ பக்கமே இருந்தாலும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாரிமுத்து அவர்கள் இந்த ’புலிவால்’ ஐ பிடித்திருக்கிறார்.  மலையாளத்தில் வினித் ஸ்ரீனிவாசன் நடித்து ஹிட்டடித்த ’சாப்பா குரிஷு’ (சரியான உச்சரிப்புதானா..?!) என்ற காமெடி த்ரில்லர் கலந்த ’ஹைப்ரிட் ஜானர்’-வகையறா படத்தின் மறு உருவாக்கம்.  
திருமணம் வேறு (இனியா) பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்ட ’ப்ளேபாய்’ ப்ரஸன்னா தன் அலுவலக பெண்ணுடன் (ஓவியா) நடத்திய காமக் களியாட்டத்தை ஐ ஃபோனில் மொபைலில் பதிவு செய்திட.. அது ஒரு அசந்தர்ப்பவசத்தில் விமலின் கையில் கிடைக்கிறது. அந்த ஆப்பிள் ஃபோனின் மீதான ’முன்’ ‘பின்’ அனுபவமில்லாத விமல் அதை திரும்ப கொடுத்தாரா இல்லையா என்பதே பின் மீதிக்கதை.

2011ல் வெளியான மலையாள படத்தை தட்டி நகாசு வேலை பார்த்து இன்றைய ட்ரெண்டுக்கு மாற்றிய இயக்குனர் திரைக்கதை போக்கின் வலுவினையும் கவனத்தில் கொண்டிருக்கலாம்!.  முன்பாதி முழுக்க இரண்டு ஹீரோக்களின் சுவாரஸ்யம்  இல்லாத வழக்கமான காதல் காட்சிகள்.. திணிக்கப்பட்ட இரு டூயட்டுகள் என ஸ்லோமோஷனில் கிளம்பும் கதை செல்ஃபோனை தொலைத்தவுடன்  வேகம் பிடித்த பம்பரமாய் கிளம்பி அப்புறம் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுற்றி.. நம்மை சோதிக்கிறது. ’கானாங்குருவி’ அழகு பாடலுக்கு அரதப்பழசான நடன அசைவு அதிலும் விமலின் ’ஸ்பெஷல்’ மூவ்மெண்ட்டுகள் சலிப்புடன் ’உச்’சுக்கொட்ட வைக்கிறது.


இயக்குனர் ஜி.மாரிமுத்து அவர்களின் முந்தைய படத்துடன் ஒப்பிடுகையில் இதில் ஸ்டைலிஷ்ஷான மேக்கிங்கிலும், அழகான கேமரா கோணங்களுக்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். வெட்டல் ஒட்டல் செய்த அஸோஸியேட் எடிட்டர் மப்பு ஜோதி ப்ரகாஷ் (கிஷோரின் அஸிஸ்டெண்ட்) எனது ரூம் மேட் என்பதால் அதை பெருமைப்படுத்தி சொல்வதற்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது! J
ஒருபுறம் ப்ரஸன்னா தனது கேரக்டரை சிறப்புற செய்து படத்தை நகர்த்துகையில் விமல் தன் சோகை விழுந்த நடிப்பை பயன்’படுத்தி’ கதையின் அஸ்திவாரத்தை வாருவதுடன் நம்மையும் படுத்தியெடுக்கிறார். இந்த மண்டு கேரக்டருக்கு இயல்பாகவே இவர்தான் பொருந்தி போவார் என்ற இயக்குனரின் கணக்கில் கணிசமான டேமேஜ்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

ரசிகர்களை தவறிக்கூட மூளையை பயன்படுத்த வைக்காத திரைக்கதை என்பதால் சுவாரஸ்யம் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?.  
விமல் வேலை பார்க்கும் டிபார்மெண்ட் ஸ்டோர் களம், விமலின் காதலி அனன்யா, சூரி, மற்றும் டார்ச்சர் மேனெஜர் தம்பி ராமைய்யா என அனைவருமே ’அங்காடித்தெரு’வின் EXTENSION’ல் வாழ்கிறார்கள்.

மைய கதை செல்ஃபோன் சார்ந்து இருப்பதால் சூரியின் காமெடி பக்கங்களை SMS ஜோக்குகள் வைத்து செய்ய நினைத்தது நல்ல ஐடியாதான் என்றாலும் சில இடங்களில் ஒட்ட வைத்த கலர் காகிதங்களாக கண்ணை உறுத்துகின்றன.


திருப்புமுனைகள் இல்லாத திரைக்கதை மட்டுமே படத்தின் ஆகப்பெரிய்ய்ய பலவீனம். மற்றவிஷயங்களில் படம் ஓகே ரகம்தான்.  

Saturday, February 8, 2014

பத்மினிக்கு என்னதான் பிரச்சினை!?

பத்மினிக்கு என்னதான் பிரச்சினை!?

  
ஒரு ஊர்ல ஒரு பண்ணையார்.. அவர் பாட்டுக்கு தேமேயென்று வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்கையில் நண்பர் பத்மினி கார் ஒன்றைக் கொடுத்து தான் திரும்ப வந்து வாங்கிக்கொள்ளும்வரை பார்த்துக்கொள்ள சொல்கிறார். பார்த்த மாத்திரத்திலே பத்மினியை காதலிக்கதுவங்குகிறார் பண்ணை!.

தன் அடுத்த கல்யாண நாளுக்குள் காரை ஓட்டிப் பழகிவிட நினைக்கிறார் பண்ணையார்.  தாய் வீட்டிற்கு வந்தாலே எதையாவது பிடுங்கிச்செல்லும் மகளிடம் இருந்தும், என்றேனும் ஒருநாள் திரும்ப வந்து காரை கேட்கப்போகும் நண்பனிடமிருந்தும் காரை காப்பாற்றினாரா என்பதே மீதி வரலாறு.

ஜெயப்பிரகாஷின் சாந்தமான பாவனைகள் முழுக்க பண்ணையார் பாத்திரத்துக்கு ஓரளவுக்குதான் பொருந்தியிருந்தாலும் தன் தேர்ந்த (வழக்கமான!?) நடிப்பால் கடைசிவரை நிறைவு செய்ய முயன்றிருக்கிறார். 

ஊரில் கார் ஓட்டத்தெரிந்த ஒரே ஆள் விஜய்சேதுபதி முருகேசன் பாத்திரத்துக்குள் கச்சிதமாகவே சம்மணமிட்டு அமர்ந்துக்கொள்கிறார். இவரின் காதல் கதையின் நீளத்தை கூட்டுவதற்கு மட்டுமே உதவியிருக்கிறது!. கதையின் ஃபோகஸ் ’பத்மினி’மீதுதான் என்பதால் இந்த காதல் பெரிதாக மனதில் பதிய மறுக்கின்றது. 

டைட்டிலுக்கு நியாயம் செய்ய நினைத்து பண்ணையாருக்கு தன் மனைவியுடன் ஒரு காதல் எபிஸோட் நிகழ்த்தியதில் ஒருவித செயற்கைத்தனம் க்ரீமி லேயராய் பரவத்துவங்குவதை உணரமுடிகிறது!. 

படத்தின் உயிர்நாடியான கதையில் உயிரோட்டம் இருந்தாலும், இப்படி ஒரு எமோஷனல் ட்ராமாவை சரியாக படைக்க பெரிய்ய்ய்ய அனுபவ முதிர்ச்சி தேவை என்பது புரிகிறது. இந்த குறைதான் பண்ணையார்-மனைவி இருவரின் ரொமான்ஸ் காட்சிகளின் செயற்கைத் தனத்தனத்தில் அயர்ச்சி ஏற்படுகிறது. 

பண்ணையார் காரை ஓட்ட கற்றுக்கொண்டாரென்றால் தன்னை கழட்டி விடுவாரென்று நம்பி கற்றுத்தருவதில் தகிடுதத்தம் செய்யும் இடங்களில் நல்ல ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி. பின்னர் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் உள்ள புரிதல் உணர்வு அலைவரிசையின் தாக்குதலில் நிலைக்குலைந்து உண்மையாவே கற்றுக்கொடுக்கத்துவங்கிடும் காட்சிகளில் அபாரமான உணர்வுகளை கொட்டி தன் கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார். 

நாயகி அட்டக்கத்தி ஐஸ்வர்யாவிற்கு பெரிய அளவில் இடமில்லாது போனாலும் பீடையாக வரும் பாலசரவணவன் பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டிவிடும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.  
டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பாஸ்மார்க் ஏரியாவில் இருப்பதால் அதனைக் குறித்த அலசல்களை விட்டுவிடுவோம்.

பல இடங்களில் திரைக்கதையில் தோய்வு இருந்தாலும்.. இதையே காரணம் காட்டி கமர்ஷியல் கப்ஸாக்களை நுழைக்காமல் விட்ட இயக்குனரின் நேர்மையை பாராட்டியேதான் ஆகவேண்டும்.
ஆனால் கல்லா கட்டுவதற்கான சினிமா யதார்த்தம் அதுவல்லவே. இன்னமும் ‘பூ’, ’தங்கமீன்கள்’ போன்ற உணர்ச்சி பூர்வமான சினிமாக்களை நெஞ்சில் அணைத்துக்கொள்ளும் கூட்டம் பேரளவில் உருவாகாத நிலையில் இது போன்ற சினிமா முயற்சிகள் ஓரங்கட்டப்படும் அபாயமிருக்கிறது.

படங்கள் மாறத்துவங்கிவிட்டன.. அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் பொறுப்பு ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

’ஆசுவாசமான மனநிலை’யுடன் படம் பார்க்கும் திறன் கைவரப்பெற்றிருந்தால் இந்த பத்மினியில் ஒரு ரசிக்கும்படியான சவாரி உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு! 

நன்றி! 

கணேஷ் நாராயணஸ்வாமி