Tuesday, February 26, 2013

ஹரிதாஸ் - சபாஷ்தாஸ்!

Director: G.N.R. Kumaravelan (கதையும் எழுத்தும் இவருடையதே..)

Cast: Kishore, Sneha,Prithviraj Das, Yugi Sethu, Soori, Pradeep Singh Rawat, 

Music: Vijay Antony    Lyrics: Arvind Annamalai   Cinematography: R. Rathnavelu  Editing: Raja Mohammed

சிலாகிப்பதற்கென்றே சில படங்கள் தியேட்டரில் அத்தி பூத்தாற்போல் வருவதுண்டு.. சில சமயம் அவை பூப்பது தெரியாதது போலவே காய்ப்பதும் கவனிக்கப்படாமல் போவதுண்டு.  என் கவலை, அதுபோல இந்த ஹரிதாஸ் படத்திற்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதுதான்.



 இயக்குனர் குமரவேலன்  ’நினத்தாலே இனிக்கும்’, ’யுவன் யுவதி’ (2011 மே)  படங்களுக்குபின்னர் இந்த ஹரிதாஸ்'ஐ களம் இறக்கியுள்ளார்.

இன்னுமொரு ’ஆட்டிஸம்’ குறித்த படம் என சாதாரணமாக ஒதுக்கிவிட்டு சென்றுவிட முடியாது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 88:1 என்ற விகிதத்தில் குழந்தைகள் ஆட்டிஸத்தால் பாதிக்கபடுவதைக்குறித்தும் அவர்களுக்கான சமூக விழிப்புணர்வு குறித்தும் பேசுகிறது.

ஆதி என்ற ரவுடியை என்கவுண்ட்டர் செய்ய உருவாக்கப்படும் தனிப் படைக்கு தலைமை தாங்குகிறார் ’சிவதாஸ்’ (கிஷோர்). மனைவி இல்லாத காரணத்தால் ‘ஆட்டிஸ’த்தால் பாதிக்கப்பட்ட தன் மகனை அது இன்ன வியாதி என தெரியாமலே(!?) (இது மட்டுமே கொஞ்சம் நெருடல்..) கிராமத்தில் தன் தாயின் பராமரிப்பில் விட்டுவிடுகிறார். திடுமென தாய் இறந்துவிட மகனை சுமக்கும் பொறுப்பு கூடுதலாக வந்து சேர்கிறது.

மகனை புரிந்துக்கொள்ள முயற்சிப்பவர் பின்னர் அவனது உலகத்திற்கே சென்று அவனுடன் வாழ ஆசைப்படுகிறார். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு  பள்ளியில் மகனை சேர்க்கிறார். அங்கு ஆசிரியையாக ஸ்நேகா. அரசு விதிப்படி ஒரு கார்டியன் பள்ளியில் மாணவனுடன் இருக்கலாம் என்பதால் மகனுடனே தானும் வகுப்பிலேயே அமர்ந்துக்கொள்கிறார்.

அதன் பின் வரும் நிகழ்வுகளும், மகனின் சிறப்புத்தகுதி எது என தெரிந்துக்கொள்ள அவர் எடுக்கும் சிரத்தைகளும்,  தன் போலீஸ் டீமினால் தேடப்படும் ஆதி என்கிற ரவுடியை என்ன செய்தார் என்பதும் மீதிக்கதை.

கிஷோரின் மகனாக மாஸ்டர்.ப்ரித்விராஜ் ’ஹரிதாஸ்’ கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறான். முதல் அரைமணி நேரத்திற்குப்பின் பள்ளியில் கதை நகரத்துவங்கும்போது நம்மை ஸ்க்ரீனுக்குள் இழுத்துப்போடும் இயக்குனர் படம் முடிந்த பின்னரே நம்மை வெளிவிடுகிறார்.
 முதல் நாள் பள்ளியில் சிறுவர்கள் மத்தியில் கிஷோரை வைத்துக் கொண்டு சிறுவர் பாடலை ஸ்நேகா ’நடனபாவ’த்துடன் சொல்லித்தர கூச்சப்படும் காட்சி குட்டி ஹைக்கூ தான்.  
 ஸ்நேகா நாம் எதிர்பார்த்தது போலவே ஒரு அனுதாபத்தில் ஹரியின் அம்மாவாக ஆசைப்பட அதை கிஷோர் நாகரிகமாக மறுக்கும் காட்சி அத்தனை அழகு.

பள்ளிக்காட்சிகள் படத்தின் காமெடி கலந்த ரிலாக்ஸுக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அதன் காட்சிகளை மையக்கதையுடன் இரண்டறக் கலந்திருப்பது அட்டகாசம். ரியல் பிரில்லியன்ஸ்!!. 

இயக்குனர் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சிறு வசனங்களிலும் தகவல்கள் சரியானதாக தரப்பட்டிருக்கவேண்டும் என மெனக்கெட்டிருப்பார் போல.. இரு டோல்கேட்டுகளுக்கு இடையேயான தூரம் ஐம்பது கிலோ மீட்டர் என்பது போன்ற தரவுகளும் சரி.,  கோச்’சாக வரும் இயக்குனர் ராஜ்கபூர் பேசிக் கொண்டே மாணவர்கள்  ஓடும் சுற்றுக்களை கவனிப்பதில் உள்ள சூட்சுமங்கள் ஆகட்டும் என பல இடங்களில் நகாசு வேலை பார்த்திருப்பது உண்மையிலேயே சபாஷ் போட வைக்கிறது. செலக்‌ஷன் கமிட்டியின் தலைவர் ’க்யூபை’ கையில் வைத்துக்கொண்டே திரிவதை வசனத்தால் சப்பைக் கட்டு கட்டி, அதை காட்சிப் படுத்தியது கொஞ்சம் நாடகத்தனமாகவே இருந்தாலும் அது அவசியமானதாகப் படுகிறது. 


தேவையில்லாமல் ஒரு குத்துப்பாட்டு வைத்துவிட்டாரோ என நினைத்த போது, அதையும்  போலீஸாரின் வேலைக் கஷ்டங்களை எடுத்துச்சொல்ல பயன்படுத்திக்கொண்டார். பாடல் வரிகள் நிஜமாகவே வளம் நிறைந்தவைதான். க்ளைமாக்ஸ் வில்லன் போர்ஷன் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம்.  வேறு குறைகள் சொல்லும்படி  இல்லை.

இன்னும் கொஞ்சம் சமரச முயற்சிகளை தவிர்த்திருந்தால் இதைவிட சிறப்பாக இருந்திருக்கும்.. கமர்ஷியல் சமாச்சாரம் இல்லையென்றால் இந்தக் கதை மக்களைப்போய் சேராதோ என இயக்குனர் எண்ணியிருக்கலாம்.. என்ன செய்ய  ஏ, பி, சி என அனைத்து செண்டர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய அவலமான கட்டாயத்தில்  இருக்கிறது தமிழ் சினிமா. 

அப்படி தியேட்டரில் அம்போவென விடப்பட்ட படங்களுக்கு சிறந்த உதாரணம் 'ஆரண்ய காண்டம்’.  இந்தப்படமும் அதைப்போலவே அநாதவரவாக விடப்பட்டால் அதற்கு இரண்டே காரணம்தான் இருக்கும்.. ஒன்று ’ஸ்டார் வேல்யூ’, இன்னொன்று நமது மந்தமான ரசனை. 

ரத்னவேலு ஒளிப்பதிவு கதையின் போக்கில் எந்தவிதமான இடையூறும் செய்யாது நம் கண்களின் ஃப்ரேம்களாக மட்டுமே இருந்து கடமையாற்றுகிறது.  கோர்வையான கண்களை உறுத்தாத எடிட்டிங் இவையெல்லாம் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்கள்.  

திடும் திடுமென ஜாஸ் கிடார் வந்து உதார் விடும்போது நாம், விஜய் ஆண்டனி தன் இருப்பைத் தெரிவிக்கிறார் என புரிந்துக்கொள்ளலாம். பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

கமர்சியல் காரணங்களால் காவு கொடுக்காது காப்பாற்றப்படவேண்டிய படம்..

நன்றி..




Friday, February 22, 2013

ஆதிபகவன் - அய்யோ சாமீ!!


கதை, திரைக்கதை,இயக்கம்: அமீர் தயாரிப்பு: அன்பழகன் (விரைவில் இவரை தெருவோரங்களில் பார்க்கலாம்) ஒட்டி/வெட்டியவர்: அஹ்மத்  ஒளிப்பதிவு: தேவராஜ்.

ஆதிபகவன்.. பருத்திவீரனுக்கு (2007) பின்னர் வரும் அமீரின் படம் என்பதால் பெருத்த எதிர்பார்ப்புடன் கோவை சாந்தி தியேட்டருக்கு சரணாகதி புகுந்தோம்.

 இந்த தியேட்டரில் சவுண்டு மற்றும் ப்ரொஜெக்‌ஷன் முன்னைவிட சிறப்பாக இருந்தாலும்.. தியேட்டர் நிர்வாகம் படு திராபை. தியேட்டர் ஊழியர் ஒருவர், படம் போட்டு முக்கால் மணி நேரம் வரை தாமதமாக வருவோருக்கெல்லாம்  சீட்டு வரை வழிகாட்டிக்கொண்டிருந்தார்.. அதில் இம்சை என்னவென்றால் அவர் அந்த முக்கால் மணி நேரமும் கையில் வைத்திருந்த டார்ச்சால்  சுழற்றி சுழற்றி நம் முகத்தில் அடித்து ’டார்ச்’சர்   பண்ணிட்டாரு..


’ஜெயம்’ரவி என்கிற ’ஆதி’ இந்தியாவில் ஒரு பெரும் ஆந்திர கிரானைட் பார்ட்டியிடம் அவர் வீட்டில் ஒளித்து வைத்திருக்கும் கறுப்பு, மஞ்சள் (கோல்டுதேன்..) பணத்தை சிபிஐ போர்வையை வைத்து சுருட்டி கிளப்பிச்செல்கிறார்.  எங்கே??  தாய்லாந்திற்கு.. இங்கு வரலாறு புரிந்துக்கொள்ளப் படவேண்டுமானால்.. ஃப்ளாஷ்பேக்கில் ஜெயம் ரவியின் அப்பா தப்பான தொழில் செய்தவராதலால் அவர் அம்மா சுதாச்சந்திரன்  தன் மகன் ரவியையும் மகளையும் கூப்பிட்டு வறிய நிலையில்(?!*#) பட்டாயாவில் சோர்ந்து போய் சேர்கிறார். அப்புறம் Jeyam Ravi மூன்று காட்சிகளில் மாஃபியா பிஸினஸில் கொடியில்லாமல் பறக்கிறார்.

 சரக்கடிக்கப் போகிற பாரில் அரைவேக்காட்டு ஃபிகர் நீதுமேல் பரிதாபப்படுறார். சில நாட்களுக்கு பின்னர் வேறு ஒரு இடத்தில் அவள் தன் பாஸிடம் அடிவாங்கி துன்புறு’வதை’ காணப்பொறுக்காமல் விலைக்கு வாங்கியும் வருகிறார் .  பிறகு ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸில் ஜெயம் ரவியை அவர் காப்பாற்ற நீதுவின் மேல் காதல் வருகிறது.  நீதுவும் எங்கப்பாவை பாக்க இந்தியாவுக்கு போலாம்’ என்றவுடன் முந்தானையை  பிடித்துக் கொண்டே வந்து இந்தியாவில் வகையாக மாட்டிக்கொள்கிறார்.  நீது அவரை ஏன் மயக்கி இந்தியாவிற்கு அழைத்து வந்தார்?? மீண்டும் ஒரிஜினலாக மயக்கி (மயக்க மருந்துதேன்.. ) ஏன் மாட்டிவிட்டார் என்பது  பின்’பேதி’க் கதை. 

முன்பாதி இதே தியேட்டரில் ‘ஓடிய’ சமர்’ஐ நினைவு’படுத்தியது’.. என்ன.. அங்க விஷாலு ஏன் எதுக்குன்னு கேக்காம ஹீரோயின் கூப்பிட்டான்னு தாய்லாந்து போனாரு..  இங்க அது உல்டா.. திருநங்கையாக இரண்டாவது வேடத்தில் வரும் ஜெயம் ரவி (பகவான்) பார்க்கும் பெண்களை உஷார் பண்ணும் ’கில்மா கிங்’காக இருப்பது என்ன வகையான சமாச்சாரமோ?? அமீருக்கே வெளிச்சம். பகவானாக பல இடங்களில் நன்றாக நடித்திருந்தாலும்.. சில இடங்களில் எரிச்சல் வருவது தவிர்க்க முடியவில்லை, அதிலும் பகவானை குறிப்பிடும்போதெல்லாம் எல்லா கேரக்டர்களும் இந்த பகவான் இல்லை அந்த 'பகவான்' என மேலே கையைக் காட்டி நம்மையும் மேலே அனுப்பும் முயற்சியில் இறக்குகின்றன. 

ஒளிப்பதிவு தேவராஜ். சிறப்பாகவே செய்திருக்கிறார் . ஸ்டெடிகேம் /ஃபைட் எபிஸொட்களில் சுழற்றி விளையாடி இருக்கிறார். இருப்பினும் இன்னும் ஃப்ரேமிங்கில் சிரத்தை எடுக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

பாடல்கள் சோபிக்கவில்லை.பிண்ணனி இசை சுமார்தான்.  யுவன் முன்பாதியில் பிண்ணனிக்கு பல இடங்களில் ஃபீமேல் கோரஸில் நம் குரல்வளையை நெரிக்கிறார். 

இரண்டு வருஷமா இதத்தான் எடுத்தாரா அமீர்?. சலிப்பை உண்டாக்கும் டயலாக் டெலிவரி படத்தில் இருந்து நமது கவனத்தை அக்கம் பக்கம் திருப்புவதில் லேசான கழுத்து வலி வரும் அபாயம் தெரிகிறது. 

சென்ற முறை சுப்பிரமணிய சிவாவை வைத்து இயக்கி  ’ட்ஸோல்ஸி’யை ’யோகி’ யாக உருமாற்றிய வித்தையையே அமீர் மீண்டும் கையாண்டிருக்கலாம்.

மோசமான திரைக்கதை மற்றும் ஆக்கம் இந்த பகவானை பக்கவாதத்தில் படுக்கப்போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.. 
படத்தை பார்க்கும் எண்ணம் இந்நேரம் உங்களுக்கு அற்று போயிருந்தால் அதுவே ஆதிபகவனின் வெற்றி!! 

விகடனார் 39-40 மதிப்பெண்கள் கொடுத்து இது போன்ற இயக்குனர்களை ஆறுதல்செய்வார் என நம்புகிறேன்.. 

நன்றி.. 
உங்கள் கமெண்ட்டுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்..

கணேஷ் நாராயணஸ்வாமி.

Monday, February 18, 2013

வனயுத்தம் - திரை’மறைவுகள்’குறித்த விமர்சனம்


இது வெறும் விமர்சனம் அல்ல.. இந்த படம் எனக்குள் உண்டாக்கிய சில அதிர்வுகளின் வெளிப்பாடு.


வனயுத்தம், வீரப்பனை குறி(வை)த்த கதை என்பது தெரிந்த விஷயம்.  ஆனால் வீரப்பன் உலவிய காடுகளில் ஒரு அடர் வனம்தான் முதுமலை வனச்சரகம். அங்கு ஒரு மின்முகாமில் வளர்ந்தவன். (சிங்காரா (http://singaracamp.blogspot.in/) என்பது  தமிழ் நாடு மின்சார வாரியதிற்கு சொந்தமானது).  அங்கே எனக்கு நேர்ந்த சில வீரப்பன் தொடர்பான நிகழ்வுகள், மற்றும் அறிந்த விஷயங்கள் இந்த படத்தோடு என்னை ஒன்றச்செய்யவில்லை  என்பதே உண்மை. 

உண்மைக்கு வெகு அருகில் நின்று சொல்ல வேண்டிய வரலாறு..ஆனால் இப்படம் அரசாங்கத்தின் ’ஆக்க’ப்பட்ட ஆவணங்களுக்கு சப்பைக்கட்டு வேலையை மட்டுமே செய்துள்ளது..

சின்னத்திருடனாக இருந்த வீரப்பனை பாலூற்றி வளர்த்தது வேறு யாருமல்ல, இதே அரசாங்கத்தின் ஊழல் பெருச்சாளிகளும், மற்றும் பல வனசெல்வங்களை விற்று வயிறு வளர்த்த பன்றிகளும்தான்.  சும்மா சுள்ளி பொறுக்க காட்டுக்கு சென்ற பெண்கள் தலைதெறிக்க காட்டிலிருந்து ஓடி வருவது வாடிக்கை. சில சமயம் துரத்தியது காட்டு மிருகங்கள், பல சமயம் கொள்ளையர்களுக்கு தடம் உண்டாக்கித்தரும் வன ஊழியர்கள்தான். 

ஒரு நிலையில் இந்த மொத்த வணிகத்தை தன் கையிலெடுத்துக் கொண்டது மட்டுமே வீரப்பன் செய்த பிழை. 

அதற்காக வீரப்பன் காட்டு மிருகங்களை கொன்று குவித்தது ஞாயம் என்று சொல்லவில்லை. அதையும் ஒரு கட்டத்தில் அவன் கைவிட்டுவிட்டு ஆட்களை கடத்தும் வேலையில் இறங்கிவிட்டான். அப்போதுதான் அரசுக்கு வீரப்பன் ஒரு பெருந்தொல்லையாக மாறினான்.  காட்டை சூரையாடும்வரை தேமேயென்று இருந்த அரசு.. வீரப்பன் நாட்டை உலுக்கத்தொடங்கியதும்

என் நண்பனின் அப்பா காட்டுக்குள்  விறகு வெட்ட சென்றவர்.. நல்ல திடகாத்திரமான உடல் கொண்டவர்.  முதல் சுமையை (ஒரு கட்டு விறகு) கொண்டு வந்து வீடு சேர்த்துவிட்டு சென்றவர், இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. நாங்கள் புதைகுழி மற்றும் காட்டின் பலபகுதிகளில் தேடி கிடைக்கவில்லை. இன்று வரையிலும் அவர் திரும்பவில்லை. (மிருகங்கங்கள் அடித்தால் உடலின் பகுதியாவது கிடைக்கும். மேலும் புதைகுழிகள் எங்கெங்கு உள்ளன என்பது அவருக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அத்துபடி..) கடைசியில் நாங்கள் நினைத்தது, அவர் வீரப்பனுடன் சேர்ந்துவிட்டார் என்பதே.  கடைசியில் வீரப்பன் சுடப்பட்ட பின்னர் அந்த கூட்டத்தில் அவர் இல்லை. அவர் என்ன ஆனார் என்பது எங்களுக்கு இன்றும் புதிர்தான். இப்போதும் அவர் குடும்பத்தினர் மசினகுடியில் வசித்து வருகின்றனர். அவரை எதிர்பார்த்த வண்ணம்.

அதற்கு பின்னர் நான் (1994 என நினைக்கிறேன்) அன்றைய ஆப்பிள் கம்ப்யூட்டர் எஜுகேஷனில் மூன்றுவருட கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். வாரத்தில் மூன்று நாட்கள்தான் க்ளாஸ்.  அரசு ஊழியரேயானாலும் சொற்ப சம்பளத்தில் என் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத அப்பா. என் அப்பாதான், அதனால் நான் திருப்பூரில் இருந்து சில முகமதிய நண்பர்கள் முன்பணம்கூட வாங்காமல் தரும் பனியன் துணிகளை தருவார்கள். அதை ஓய்வு நாட்களில் பக்கத்தில் உள்ள மின்வாரிய முகாம்களில் சென்று விற்று வருவேன்.  ஒரு நாளைக்கு நான்கு முறைதான் பேருந்து ஊருக்குள் வரும்.  


அன்று பஸ் வராததால் சாலை வழியாகவே காட்டினுள் நடந்துக் கொண்டிருந்தேன்.  வழியில் ஓரிடத்தில் ஒரு ஆள் காட்டுப்பகுதியில் இருந்து வந்து என் எதிரே நின்றான். ’தம்பி மாடு விழுந்து கிடக்கு, தூக்கி விடனும் வந்து உதவி பண்ணுறியா?’  என்று அழைத்தான். அந்த ஆள் வைத்திருந்த கத்தியின் வடிவம் அந்த ஏரியா காட்டுவாசிகள் பயன்படுத்தும் வடிவில் இல்லை. (இதைப் போன்ற நுட்பமான விஷயங்களை படத்தில் கருத்தி கொள்ளவில்லை.. ஏனோ தானோவென்று.. )  எனக்கு அந்த ஆளை முன்பின் பார்த்த ஞாபகம் இல்லை..  இருந்தும் உதவி எனக்கேட்டதால் கிளம்பிக் காட்டினுள் சற்று நடந்தோம். அங்கு வற்றிய காட்டு ஓடை ஒன்றின் மணற் பரப்பினைக் காட்டி இங்கதாம்பா மாடு படுத்திருந்துச்சு.. காணொமே, என்றவன் வா கொஞ்சம் உள்ளே போய் பார்க்கலாம் என அழைத்தான். அங்கு மாட்டின் கால்டித்தடம் எதுவும் இல்லை. மேலும் மாட்டிற்கு காயம் ஏதேனும் பட்டிருந்தால் வேப்பெண்ணை தடவியிருப்பார்கள். வாசம் வரும், அது மட்டுமல்லாமல் எழுந்து போன மாட்டினை ’மறுபடியும் எழுப்ப போவானேன்’ என்று சந்தேகமாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் மரத்தின் பின்னாலிருந்து இருவர் எட்டி பார்ப்பது தெரிந்தது.. சந்தேகம் வலுவானவுடன் அந்த ஆள் என்னை கூப்பிட கூப்பிட  நான் தெறித்து ஓடி சாலைக்கு வந்துதான் வேகத்தைக்குறைத்தேன். யானை துரத்தும்போதுக் கூட அப்படி ஓடியது இல்லை. அப்புறம்தான் அந்த டீஷ்ர்ட் பேக் ஐ காட்டுக்குள் வைத்துவிட்டது ஞாபகம் வந்தது. 

அதற்கு பின் வீரப்பன் வீடியோ கேசட் அனுப்பும்போது நீங்களெல்லாம் எதை தேடியிருப்பீர்கள் தெரியாது. நான் என் டீ ஷர்ட்டுகள் தெரிகிறதா என்றுதான் பார்ப்பேன். 

அதற்கு முன்பு ஒருமுறை,  எங்கள் மின்வாரிய முகாமில் மூன்று ஷகிலாவை ஒன்றாய் கட்டிவைத்த சைஸுக்கு ஒரு பெரிய சநதன மரம் இருந்தது. அதை ஒரு நாள் ஒரே இரவில் வீரப்பனின் கும்பல் வந்து அறுத்துச்சென்றது. அதன் அருகில் உள்ள குவாட்டர்ஸில் குடியிருந்த சீனிவாசன் என்பவர் அவரது பாத்ரூம் வழியாக மூக்கை நுழைத்து பார்க்க.. சற்றைக்கெல்லாம்  ஒரு துப்பாக்கியை இவருக்கு நேராக நுழைத்த ஒருவன் சொன்னானாம் “பேசாம இருந்தீங்கன்னா.. அறுத்திட்டு போயிட்டே இருப்போம்..இல்லன்னா..’ என்று மிரட்டியதில் காய்ச்சல் வந்து படுத்தவர் ஒருமாதம் கழித்து தான் எழுந்தார். என் ஆச்சரியம் எல்லாம், அவ்வளவு பெரிய மரத்தை எடுத்துச்செல்ல எத்தனைபேர் வந்திருப்பார்கள் என்பதுதான். இன்னும் அதன்  சிறிய துண்டுகள் பலர் வைத்திருக்கிறார்கள். அரைத்துப்பூச. வழக்கமாக மரத்தின் ஆணிவேர்தான் முக்கிய பகுதியாக தோண்டிச்செல்லும் வீரப்பன் இந்த மரத்தின் தரைப்பகுதியிலிருந்து ஒன்றரை அடி உயரம் வரை விட்டுச் சென்று விட்டான் என்றால், அந்த மரத்தின் அளவு எவ்வளவு பெரிதாய் இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்..

அதன் பின்னர் எங்கள் கேம்பின் ’க்ளப் டே’ வுக்கு சற்று ஒதுக்குப்புறமான தூரத்தில் இருந்த ‘ரெக்ரியேஷன் க்ளப்’ல்  நாடக ப்ராக்டிஸ் முடித்துவிட்டு வீட்டிற்கு இரவு சுமார் ஒரு மணியளவில் தனியாக திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென கேம்பின் கீழ்பகுதியின் தெருவிளக்குகள் ஒருசேர அணைந்தன. நான் தடுமாறியபடி வீட்டின் அருகில் வந்தேன்..(வீடுகளின் மின் இணைப்பு வேறு லைன்..)  என் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் இருந்த வீட்டிற்கு நேராக பச்சை பனியன் அணிந்து லுங்கியுடன் ஒருவன் நீண்ட தடியுடன், பாறை ஒன்றின் மேல் கால் ஊன்றியபடி நின்றிருந்தான்.  என்னை பார்த்தும் விட்டான். ஆனால் அவனிடம் எந்த பதற்றமும் இல்லை..  நான் சத்தமில்லாமல் வீட்ட்டின் கதவை தட்ட அம்மாதான் திறந்தாள். வாலைச்சுருட்டிக் கொண்டு படுத்தவன் காலையில் இன்னொரு சந்தன மரம் வெட்டிட்டு போயிட்டானுக என்ற செய்தியை கேட்டுதான் எழுந்தேன்.   

இப்படியாக பல நிகழ்வுகள். ஆனால் இவை எதிலும் வீரப்பனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவன் கொன்றது எல்லாம் அவன் தொழில் முறை விரோதிகளைதான்(?!) .

இதுபோல் ஏராளமான அனுபவங்கள். சரி.. இப்போது என் அனுபவங்களை கொஞ்சமேனும் உள் வாங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.   இனி படத்தினை கவனிக்கலாம். 

முதலில் படம் எடுக்கப்பட்ட காடு.. அதை காடு என்று சொல்ல முடியாது.. வீரப்பன் உலவியது ‘ட்ராப்பிகல் எவர்க்ரீன் வெஜிட்டேஷன்’ வகைக் காடுகள்.. படத்தில் உள்ளது ‘ட்ராபிகல் தார்னி (thorn) வெஜிட்டேஷன்’ என்று வரையறுக்கலாம்.  கதையின் காலக்கட்டம் 2000தின் முன் பின்னான ஆண்டுகள்.. அதில் அர்ஜூன் (விஜியகுமாராக..) இன்றைய நவீன எல்சிடி மானிட்டர்களும், ஸ்லிம் லாப்டாப்புகளுடன் வலம் வருகிறார்..

வ.ஐ.ச ஜெயபாலன் மட்டும் மிலிட்டரி பெரியவராக (போட்டுக்கொடுக்கும்..)வரும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.   வீரப்பன் (கிஷோர்) உட்பட மீதம் எல்லாம் பக்கா சினிமாத்தனம்.

காவல்துறையினர்,அரசு ஊழியர்கள் வீரப்பனை தேடுகிறேன் பேர்வழிகள் என்று வீரப்பன் சார்ந்த கிராமங்களில் கொட்டாட்டம் போட்ட நிகழ்வுகள் சித்தரிக்கப்படவில்லை.. (உண்மையை சொல்ல பயந்தவன் எதுக்கு படமெடுக்கணும்.. )  

இன்னும் பல சிரத்தையில்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள்.. என்று படம் முழுக்க அற்பத்தனங்களும் சினிமாத்தனங்களும் நிறைந்த காட்சிகளே.  

க்ளைமாக்ஸில் வீரப்பன் கொல்லப்பட்ட காட்சி மட்டுமே போலிசாரின் வஞ்சக வெற்றியை சொல்லாமல் சொல்லுகின்றது. 

வீரப்பன் திரிந்தசமயத்தில் வேறு திருடர்கள் காட்டினுள் செல்ல பயப்பட்டதால் பல சிற்றுயிர்கள், விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்று கண்டவனெல்லாம் காட்டில் களவாடும் பொழுதுகளை தினமும் கேட்கிறோம்.  இன்னும் என்னவெல்லாமோ தொன்றுகிறது.. 

ஞாபகங்களுக்கு காடுகளைப் போல் எல்லை இல்லையே.. 

ஆட்டமா தேரோட்டமா போன்ற குத்துப்பாட்டுகள் எதுவும் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல்.

நல்ல நேர்மையான பதிவாக இந்தப்படம் இல்லை என்ற குற்றச்சாட்டுடன்.. 

கணேஷ் நாராயணஸ்வாமி.
Ph: 98432 11228.







Tuesday, February 5, 2013

விஸ்வரூபம் – அகில நாயகனின் அல்டிமேட் ஆக்‌ஷன்.


MUSIC: Shankar Ishan Loy கூட்டணி.. DIRECTION: Kamal Hasan          CINEMATOGRAPHY: SANU VARGHEESE                                                                                                  CAST: Kamal Hassan, Andrea Jeremiah,  Zarina Wahab, Nasser, Poojakumar, Jaideep Ahlawat, Shekar Kapoor, Rahul Bose.



பொதுவாய் ’தடை’ அது இது என சீண்டப்பட்ட படங்கள் ஒரு 'ஹைப்' ஐ உருவாக்கி பின்னர் சே ”இவ்ளோதானா!” என சலிப்படைய வைத்ததுதான் வரலாறு. ஆனால் இன்று விஸ்வரூபம் இதற்கு விதிவிலக்கு.

நமது சகல எதிர்பார்ப்புகளுக்கும் ஒருபடி மேலே நின்று தன் ரூபத்தை காட்டியிருக்கிறார் கமல். இந்த படம் எங்கே, எந்த காட்சிகளில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் மனதை புண்படுத்துகிறது என்பது தமிழகத்தில் வெட்டப்பட்ட காட்சிகளை கொண்டுதான் உணர முடியும்போல. 

ஹாலிவுட்டுக்கு நிகரான ஆக்‌ஷன் பேக்கேஜ்களை வஞ்சனையின்றி வழங்கியிருக்கிறார்.  ஆரம்ப காட்சியில் ’VIZ’ என அழைக்கப்பட்டு பின்னர் ஃப்ளாஷ்பேக்கில் ”விஸாம் அஹ்மத் காஷ்மீரி” என்ற பெயரினை தாங்கி, தலிபன்களை உளவு பார்க்கும் RAW உளவாளியாக அறியப்படுகிறார். தானும் குழம்பி நம்மையும் குழப்பக்கூடாது என தெளிவாக ஆரம்பத்திலேயே தனக்கு ’கஷ்மீரி’யும் தெரியாது, ”பஷ்தோ”வும் தெரியாது என ஒப்புக் கொடுத்துவிடுகிறார். விளைவு பல இடங்களில் சப்-டைட்டில்களே புரிதலுக்கான புண்ணியத்தை கட்டிக்கொள்ளுகின்றன.

“பாப்பாத்தியம்மா, சிக்கன்ல உப்பு இருக்கா பாத்து சொல்லு”, ”நாங்க எங்க கடவுள கடல்லதான் போடுவோம், சிலுவைல அறைய மாட்டோம்” போன்ற வசனங்கள் கமலஹாசனை அடுத்த கட்ட அலைக்கழிப்புகளுக்கு ஆளாக்க நேரிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதன் பின்னான தர்க்க வாதங்கள் ஆண்டவனுக்கே வெளிச்சம்! (எந்த ஆண்டவனுக்கு என்பது உங்களுக்கே வெளிச்சம்..) கமலை போல் நாத்திகர்கள் அம்மாவிடம் முறையிடலாம். (எந்த அம்மான்றது… சரி விட்டுடுறேன்)

கதை?? ..ம்ம் சுருங்கச் சொல்லலாம் தவறில்லை. விளங்கச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இந்திய ராணுவத்தின் உளவுபிரிவில் பணிபுரிகிறார் கமல்ஹாசன். தலிபான்களின் களத்திலேயே ஊடுருவி அவர்களது நடவடிக்கைகளை நேட்டோ படைகளுக்கு நேக்காக போட்டுக்கொடுப்பதுவே அவரது அஸைன்மெண்ட்.

ஒஸாமாவின் அடுத்தக் கட்ட தலைவர்களில் முக்கியமானவரான   ’ஒமர்’ன் நம்பிக்கைக்குறியவனாகி அவர்களின் இடம்பெயர்தலையும், முக்கிய சந்திப்புகளையும் முறியடிக்க முனைகிறார், ஆனால் அவர்களின் விபரீத விஷமத்தனம் நியூயார்க் நகரில் மையம் கொண்டுள்ளதை அறிந்து ஒமரை காப்பாற்றி அனுப்பிவிடுகிறார்.

அதன் பின்னர் நியூயார்க்கில் அவர்களது மொத்த திட்டத்தையும் முறியடிப்பதே பின்கதை.

எந்தவித லாஜிக் பொத்தல்களுக்கும் இடம் தரக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் கமலஹாசன். ஆனாலும் சில ஓட்டைகள். மேம்போக்காக எதையும் கவனித்தால் பல சந்தேகங்கள் எழ வாய்ப்புண்டு. ஆனால் ஒவ்வொரு ஃப்ரேம்களும் கனகச்சிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்சில காட்சிகள் மறுபடியும் விளக்கப்’படு’வதை’ தவிர்த்திருக்கலாமோ!?.  அதே நேரத்தில் கமலிடம் கொடுக்கப்படும் துப்பாக்கியினை யார் அவரிடம் கொடுக்கச்சொன்னது என்று கொடுப்பவர்க்கே தெரியாது என்பது போன்ற வசனங்கள் நம்மை சுத்தலில் விடுகிறது.

ஒமரின் மகன்களின் எதிர்கால விருப்பங்கள் நொறுக்கப்படுவது, வெறுமனே கடந்து போகும் காட்சியல்ல.. நாளைய இளம் ஆஃப்கானிய தலைமுறையினரின் நசுக்கப்பட்ட ஆசைகளின் காட்சிப் பதிவு. இந்தபதிவுகள் பட்டவர்த்தனமான உண்மை எனும்பட்சத்தில்,அந்த பிஞ்சுகள் ’விரல் துப்பாக்கி’யால் சுட்டு விளையாடாமல் வேறு எதில் விளையாடும்??. ஒரு இளம் ஜிகாதி தன் குழந்தைத்தனமான ஆசைகளை சூசைட் பாமால் இறப்பதற்கு முன்னர் ஊஞ்சலில் ஆடியவண்ணம் ஒரு இனம்புரியாத வேதனையுடன் அனுபவிப்பது வன்சோகக்கவிதை. அதே ஊஞ்சலில் ஒமரின் அடுத்த மகன் அடுத்த நாள் அமர்ந்து ஆடுவது

வசனங்கள் அழகு. ”அவருக்கு அதெல்லாம் புரியும், இது தனிக்காழ்ப்பு இல்லையே” “எனக்குள்ளும் எமோஷனல் பேக்கேஜ் நிறய உண்டு” “யார் வர்றாங்க? அவர்தான் ஒஸ(ர)மா இருப்பாரே! அவர்தான்”, என ஆங்காங்கே கவன ஈர்ப்பு வசனங்களும் உண்டு.

வருங்கால சமுதாயத்திற்கு இந்த உலகத்தை இப்படியே கரடுமுரடாக விட்டுச்செல்லாமல் அமைதியை மட்டுமே பரிசாகத்தரவேண்டும் என்று பேராசைப்பட்டிருக்கிறார் கமல். ஆனால் அவரை வறுத்து எடுத்தது எதுவென அவருக்கே வெளிச்சம். அரசியலா, பகையுணர்ச்சியா?,தற்கால புகழ் விரும்பிகளின் கச்சேரியா? என கேட்டுக்கொண்டே போகலாம். பதில் இவற்றின் கலவையாகவும் இருந்திடக்கூடும்.

தலிபன்களைதான் தீவிரவாதி என்கிறார், அது உலகறிந்த விடயம். தலிபன்களைக்கூட அவர்கள் செய்வது தவறு என்று வாதிட வரவில்லை. முஸ்லிம்கள் எல்லாம் தலிபன்கள் என்று சொன்னால்தானே தவறு. ப்ச்.. இதைகுறித்து பலரும் விவாதித்து தீர்ந்துவிட்டதால் நாமும் இதனை விட்டுவிடுவோம்.   

சினிமாட்டொக்ராஃபி அற்புதம் என்று ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட்டு சென்றால் அது அபத்தம். ஸானு வர்கீஸ் கபடியில் எக்ஸ்பர்ட் போலே.. அருமையாக விளையாடி இருக்கிறார். நின்று மிதந்து தாவி பறக்கிறது காமிரா.

அப்புறம் என்ன சார்?? ஆண்ட்ரியா அவசியமில்லாத அவசியம், நாயகி பூஜாகுமாருக்கு ”கூஜாவிழி நாயகி” என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள். மூடித்திறக்கையில் எல்லாம் கவிழ்த்தும் கண்கள்.என்னமோ இருக்கிறது!!இந்தப் பெண்ணிலும்.. அமெரிக்காவாழ் இந்திய வம்சாவளி.. நல்ல இரக்கமான மனதுடையவர் போல தெரிகிறது..  மேடம் உங்க ’இடை’விடா சேவை எங்களுக்கு தேவை!!.. 

படத்தை இரண்டுமுறை பார்த்தேன், குமுளியிலும்,சிட்டூரிலும்..சிட்டூரில் டிக்கெட் எடுக்க வதைபட்ட கதை என்னோடு போகட்டும். ஃபோட்டோவில் காணும் கூட்டத்தை வைத்தே  முடிவு செய்துக்கொள்ளுங்கள்.நான் இனி தமிழக ரிலீஸுக்காக வெய்ட்டிங்!

குமுளியில்.. (இடுக்கி..)













பாலக்காடு சிட்டூரில்..