Tuesday, February 26, 2013

ஹரிதாஸ் - சபாஷ்தாஸ்!

Director: G.N.R. Kumaravelan (கதையும் எழுத்தும் இவருடையதே..)

Cast: Kishore, Sneha,Prithviraj Das, Yugi Sethu, Soori, Pradeep Singh Rawat, 

Music: Vijay Antony    Lyrics: Arvind Annamalai   Cinematography: R. Rathnavelu  Editing: Raja Mohammed

சிலாகிப்பதற்கென்றே சில படங்கள் தியேட்டரில் அத்தி பூத்தாற்போல் வருவதுண்டு.. சில சமயம் அவை பூப்பது தெரியாதது போலவே காய்ப்பதும் கவனிக்கப்படாமல் போவதுண்டு.  என் கவலை, அதுபோல இந்த ஹரிதாஸ் படத்திற்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதுதான்.



 இயக்குனர் குமரவேலன்  ’நினத்தாலே இனிக்கும்’, ’யுவன் யுவதி’ (2011 மே)  படங்களுக்குபின்னர் இந்த ஹரிதாஸ்'ஐ களம் இறக்கியுள்ளார்.

இன்னுமொரு ’ஆட்டிஸம்’ குறித்த படம் என சாதாரணமாக ஒதுக்கிவிட்டு சென்றுவிட முடியாது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 88:1 என்ற விகிதத்தில் குழந்தைகள் ஆட்டிஸத்தால் பாதிக்கபடுவதைக்குறித்தும் அவர்களுக்கான சமூக விழிப்புணர்வு குறித்தும் பேசுகிறது.

ஆதி என்ற ரவுடியை என்கவுண்ட்டர் செய்ய உருவாக்கப்படும் தனிப் படைக்கு தலைமை தாங்குகிறார் ’சிவதாஸ்’ (கிஷோர்). மனைவி இல்லாத காரணத்தால் ‘ஆட்டிஸ’த்தால் பாதிக்கப்பட்ட தன் மகனை அது இன்ன வியாதி என தெரியாமலே(!?) (இது மட்டுமே கொஞ்சம் நெருடல்..) கிராமத்தில் தன் தாயின் பராமரிப்பில் விட்டுவிடுகிறார். திடுமென தாய் இறந்துவிட மகனை சுமக்கும் பொறுப்பு கூடுதலாக வந்து சேர்கிறது.

மகனை புரிந்துக்கொள்ள முயற்சிப்பவர் பின்னர் அவனது உலகத்திற்கே சென்று அவனுடன் வாழ ஆசைப்படுகிறார். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு  பள்ளியில் மகனை சேர்க்கிறார். அங்கு ஆசிரியையாக ஸ்நேகா. அரசு விதிப்படி ஒரு கார்டியன் பள்ளியில் மாணவனுடன் இருக்கலாம் என்பதால் மகனுடனே தானும் வகுப்பிலேயே அமர்ந்துக்கொள்கிறார்.

அதன் பின் வரும் நிகழ்வுகளும், மகனின் சிறப்புத்தகுதி எது என தெரிந்துக்கொள்ள அவர் எடுக்கும் சிரத்தைகளும்,  தன் போலீஸ் டீமினால் தேடப்படும் ஆதி என்கிற ரவுடியை என்ன செய்தார் என்பதும் மீதிக்கதை.

கிஷோரின் மகனாக மாஸ்டர்.ப்ரித்விராஜ் ’ஹரிதாஸ்’ கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறான். முதல் அரைமணி நேரத்திற்குப்பின் பள்ளியில் கதை நகரத்துவங்கும்போது நம்மை ஸ்க்ரீனுக்குள் இழுத்துப்போடும் இயக்குனர் படம் முடிந்த பின்னரே நம்மை வெளிவிடுகிறார்.
 முதல் நாள் பள்ளியில் சிறுவர்கள் மத்தியில் கிஷோரை வைத்துக் கொண்டு சிறுவர் பாடலை ஸ்நேகா ’நடனபாவ’த்துடன் சொல்லித்தர கூச்சப்படும் காட்சி குட்டி ஹைக்கூ தான்.  
 ஸ்நேகா நாம் எதிர்பார்த்தது போலவே ஒரு அனுதாபத்தில் ஹரியின் அம்மாவாக ஆசைப்பட அதை கிஷோர் நாகரிகமாக மறுக்கும் காட்சி அத்தனை அழகு.

பள்ளிக்காட்சிகள் படத்தின் காமெடி கலந்த ரிலாக்ஸுக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அதன் காட்சிகளை மையக்கதையுடன் இரண்டறக் கலந்திருப்பது அட்டகாசம். ரியல் பிரில்லியன்ஸ்!!. 

இயக்குனர் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சிறு வசனங்களிலும் தகவல்கள் சரியானதாக தரப்பட்டிருக்கவேண்டும் என மெனக்கெட்டிருப்பார் போல.. இரு டோல்கேட்டுகளுக்கு இடையேயான தூரம் ஐம்பது கிலோ மீட்டர் என்பது போன்ற தரவுகளும் சரி.,  கோச்’சாக வரும் இயக்குனர் ராஜ்கபூர் பேசிக் கொண்டே மாணவர்கள்  ஓடும் சுற்றுக்களை கவனிப்பதில் உள்ள சூட்சுமங்கள் ஆகட்டும் என பல இடங்களில் நகாசு வேலை பார்த்திருப்பது உண்மையிலேயே சபாஷ் போட வைக்கிறது. செலக்‌ஷன் கமிட்டியின் தலைவர் ’க்யூபை’ கையில் வைத்துக்கொண்டே திரிவதை வசனத்தால் சப்பைக் கட்டு கட்டி, அதை காட்சிப் படுத்தியது கொஞ்சம் நாடகத்தனமாகவே இருந்தாலும் அது அவசியமானதாகப் படுகிறது. 


தேவையில்லாமல் ஒரு குத்துப்பாட்டு வைத்துவிட்டாரோ என நினைத்த போது, அதையும்  போலீஸாரின் வேலைக் கஷ்டங்களை எடுத்துச்சொல்ல பயன்படுத்திக்கொண்டார். பாடல் வரிகள் நிஜமாகவே வளம் நிறைந்தவைதான். க்ளைமாக்ஸ் வில்லன் போர்ஷன் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம்.  வேறு குறைகள் சொல்லும்படி  இல்லை.

இன்னும் கொஞ்சம் சமரச முயற்சிகளை தவிர்த்திருந்தால் இதைவிட சிறப்பாக இருந்திருக்கும்.. கமர்ஷியல் சமாச்சாரம் இல்லையென்றால் இந்தக் கதை மக்களைப்போய் சேராதோ என இயக்குனர் எண்ணியிருக்கலாம்.. என்ன செய்ய  ஏ, பி, சி என அனைத்து செண்டர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய அவலமான கட்டாயத்தில்  இருக்கிறது தமிழ் சினிமா. 

அப்படி தியேட்டரில் அம்போவென விடப்பட்ட படங்களுக்கு சிறந்த உதாரணம் 'ஆரண்ய காண்டம்’.  இந்தப்படமும் அதைப்போலவே அநாதவரவாக விடப்பட்டால் அதற்கு இரண்டே காரணம்தான் இருக்கும்.. ஒன்று ’ஸ்டார் வேல்யூ’, இன்னொன்று நமது மந்தமான ரசனை. 

ரத்னவேலு ஒளிப்பதிவு கதையின் போக்கில் எந்தவிதமான இடையூறும் செய்யாது நம் கண்களின் ஃப்ரேம்களாக மட்டுமே இருந்து கடமையாற்றுகிறது.  கோர்வையான கண்களை உறுத்தாத எடிட்டிங் இவையெல்லாம் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்கள்.  

திடும் திடுமென ஜாஸ் கிடார் வந்து உதார் விடும்போது நாம், விஜய் ஆண்டனி தன் இருப்பைத் தெரிவிக்கிறார் என புரிந்துக்கொள்ளலாம். பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

கமர்சியல் காரணங்களால் காவு கொடுக்காது காப்பாற்றப்படவேண்டிய படம்..

நன்றி..




3 comments:

  1. நல்ல விமர்சனம். எப்படியும் படத்தைப் பார்த்துவிடுவேன். நல்ல படங்களை பாராட்டி நம் ஆதரவைத் தெரிவிப்பது நம் கடமை.

    amas32

    ReplyDelete