Monday, February 18, 2013

வனயுத்தம் - திரை’மறைவுகள்’குறித்த விமர்சனம்


இது வெறும் விமர்சனம் அல்ல.. இந்த படம் எனக்குள் உண்டாக்கிய சில அதிர்வுகளின் வெளிப்பாடு.


வனயுத்தம், வீரப்பனை குறி(வை)த்த கதை என்பது தெரிந்த விஷயம்.  ஆனால் வீரப்பன் உலவிய காடுகளில் ஒரு அடர் வனம்தான் முதுமலை வனச்சரகம். அங்கு ஒரு மின்முகாமில் வளர்ந்தவன். (சிங்காரா (http://singaracamp.blogspot.in/) என்பது  தமிழ் நாடு மின்சார வாரியதிற்கு சொந்தமானது).  அங்கே எனக்கு நேர்ந்த சில வீரப்பன் தொடர்பான நிகழ்வுகள், மற்றும் அறிந்த விஷயங்கள் இந்த படத்தோடு என்னை ஒன்றச்செய்யவில்லை  என்பதே உண்மை. 

உண்மைக்கு வெகு அருகில் நின்று சொல்ல வேண்டிய வரலாறு..ஆனால் இப்படம் அரசாங்கத்தின் ’ஆக்க’ப்பட்ட ஆவணங்களுக்கு சப்பைக்கட்டு வேலையை மட்டுமே செய்துள்ளது..

சின்னத்திருடனாக இருந்த வீரப்பனை பாலூற்றி வளர்த்தது வேறு யாருமல்ல, இதே அரசாங்கத்தின் ஊழல் பெருச்சாளிகளும், மற்றும் பல வனசெல்வங்களை விற்று வயிறு வளர்த்த பன்றிகளும்தான்.  சும்மா சுள்ளி பொறுக்க காட்டுக்கு சென்ற பெண்கள் தலைதெறிக்க காட்டிலிருந்து ஓடி வருவது வாடிக்கை. சில சமயம் துரத்தியது காட்டு மிருகங்கள், பல சமயம் கொள்ளையர்களுக்கு தடம் உண்டாக்கித்தரும் வன ஊழியர்கள்தான். 

ஒரு நிலையில் இந்த மொத்த வணிகத்தை தன் கையிலெடுத்துக் கொண்டது மட்டுமே வீரப்பன் செய்த பிழை. 

அதற்காக வீரப்பன் காட்டு மிருகங்களை கொன்று குவித்தது ஞாயம் என்று சொல்லவில்லை. அதையும் ஒரு கட்டத்தில் அவன் கைவிட்டுவிட்டு ஆட்களை கடத்தும் வேலையில் இறங்கிவிட்டான். அப்போதுதான் அரசுக்கு வீரப்பன் ஒரு பெருந்தொல்லையாக மாறினான்.  காட்டை சூரையாடும்வரை தேமேயென்று இருந்த அரசு.. வீரப்பன் நாட்டை உலுக்கத்தொடங்கியதும்

என் நண்பனின் அப்பா காட்டுக்குள்  விறகு வெட்ட சென்றவர்.. நல்ல திடகாத்திரமான உடல் கொண்டவர்.  முதல் சுமையை (ஒரு கட்டு விறகு) கொண்டு வந்து வீடு சேர்த்துவிட்டு சென்றவர், இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. நாங்கள் புதைகுழி மற்றும் காட்டின் பலபகுதிகளில் தேடி கிடைக்கவில்லை. இன்று வரையிலும் அவர் திரும்பவில்லை. (மிருகங்கங்கள் அடித்தால் உடலின் பகுதியாவது கிடைக்கும். மேலும் புதைகுழிகள் எங்கெங்கு உள்ளன என்பது அவருக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அத்துபடி..) கடைசியில் நாங்கள் நினைத்தது, அவர் வீரப்பனுடன் சேர்ந்துவிட்டார் என்பதே.  கடைசியில் வீரப்பன் சுடப்பட்ட பின்னர் அந்த கூட்டத்தில் அவர் இல்லை. அவர் என்ன ஆனார் என்பது எங்களுக்கு இன்றும் புதிர்தான். இப்போதும் அவர் குடும்பத்தினர் மசினகுடியில் வசித்து வருகின்றனர். அவரை எதிர்பார்த்த வண்ணம்.

அதற்கு பின்னர் நான் (1994 என நினைக்கிறேன்) அன்றைய ஆப்பிள் கம்ப்யூட்டர் எஜுகேஷனில் மூன்றுவருட கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். வாரத்தில் மூன்று நாட்கள்தான் க்ளாஸ்.  அரசு ஊழியரேயானாலும் சொற்ப சம்பளத்தில் என் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத அப்பா. என் அப்பாதான், அதனால் நான் திருப்பூரில் இருந்து சில முகமதிய நண்பர்கள் முன்பணம்கூட வாங்காமல் தரும் பனியன் துணிகளை தருவார்கள். அதை ஓய்வு நாட்களில் பக்கத்தில் உள்ள மின்வாரிய முகாம்களில் சென்று விற்று வருவேன்.  ஒரு நாளைக்கு நான்கு முறைதான் பேருந்து ஊருக்குள் வரும்.  


அன்று பஸ் வராததால் சாலை வழியாகவே காட்டினுள் நடந்துக் கொண்டிருந்தேன்.  வழியில் ஓரிடத்தில் ஒரு ஆள் காட்டுப்பகுதியில் இருந்து வந்து என் எதிரே நின்றான். ’தம்பி மாடு விழுந்து கிடக்கு, தூக்கி விடனும் வந்து உதவி பண்ணுறியா?’  என்று அழைத்தான். அந்த ஆள் வைத்திருந்த கத்தியின் வடிவம் அந்த ஏரியா காட்டுவாசிகள் பயன்படுத்தும் வடிவில் இல்லை. (இதைப் போன்ற நுட்பமான விஷயங்களை படத்தில் கருத்தி கொள்ளவில்லை.. ஏனோ தானோவென்று.. )  எனக்கு அந்த ஆளை முன்பின் பார்த்த ஞாபகம் இல்லை..  இருந்தும் உதவி எனக்கேட்டதால் கிளம்பிக் காட்டினுள் சற்று நடந்தோம். அங்கு வற்றிய காட்டு ஓடை ஒன்றின் மணற் பரப்பினைக் காட்டி இங்கதாம்பா மாடு படுத்திருந்துச்சு.. காணொமே, என்றவன் வா கொஞ்சம் உள்ளே போய் பார்க்கலாம் என அழைத்தான். அங்கு மாட்டின் கால்டித்தடம் எதுவும் இல்லை. மேலும் மாட்டிற்கு காயம் ஏதேனும் பட்டிருந்தால் வேப்பெண்ணை தடவியிருப்பார்கள். வாசம் வரும், அது மட்டுமல்லாமல் எழுந்து போன மாட்டினை ’மறுபடியும் எழுப்ப போவானேன்’ என்று சந்தேகமாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் மரத்தின் பின்னாலிருந்து இருவர் எட்டி பார்ப்பது தெரிந்தது.. சந்தேகம் வலுவானவுடன் அந்த ஆள் என்னை கூப்பிட கூப்பிட  நான் தெறித்து ஓடி சாலைக்கு வந்துதான் வேகத்தைக்குறைத்தேன். யானை துரத்தும்போதுக் கூட அப்படி ஓடியது இல்லை. அப்புறம்தான் அந்த டீஷ்ர்ட் பேக் ஐ காட்டுக்குள் வைத்துவிட்டது ஞாபகம் வந்தது. 

அதற்கு பின் வீரப்பன் வீடியோ கேசட் அனுப்பும்போது நீங்களெல்லாம் எதை தேடியிருப்பீர்கள் தெரியாது. நான் என் டீ ஷர்ட்டுகள் தெரிகிறதா என்றுதான் பார்ப்பேன். 

அதற்கு முன்பு ஒருமுறை,  எங்கள் மின்வாரிய முகாமில் மூன்று ஷகிலாவை ஒன்றாய் கட்டிவைத்த சைஸுக்கு ஒரு பெரிய சநதன மரம் இருந்தது. அதை ஒரு நாள் ஒரே இரவில் வீரப்பனின் கும்பல் வந்து அறுத்துச்சென்றது. அதன் அருகில் உள்ள குவாட்டர்ஸில் குடியிருந்த சீனிவாசன் என்பவர் அவரது பாத்ரூம் வழியாக மூக்கை நுழைத்து பார்க்க.. சற்றைக்கெல்லாம்  ஒரு துப்பாக்கியை இவருக்கு நேராக நுழைத்த ஒருவன் சொன்னானாம் “பேசாம இருந்தீங்கன்னா.. அறுத்திட்டு போயிட்டே இருப்போம்..இல்லன்னா..’ என்று மிரட்டியதில் காய்ச்சல் வந்து படுத்தவர் ஒருமாதம் கழித்து தான் எழுந்தார். என் ஆச்சரியம் எல்லாம், அவ்வளவு பெரிய மரத்தை எடுத்துச்செல்ல எத்தனைபேர் வந்திருப்பார்கள் என்பதுதான். இன்னும் அதன்  சிறிய துண்டுகள் பலர் வைத்திருக்கிறார்கள். அரைத்துப்பூச. வழக்கமாக மரத்தின் ஆணிவேர்தான் முக்கிய பகுதியாக தோண்டிச்செல்லும் வீரப்பன் இந்த மரத்தின் தரைப்பகுதியிலிருந்து ஒன்றரை அடி உயரம் வரை விட்டுச் சென்று விட்டான் என்றால், அந்த மரத்தின் அளவு எவ்வளவு பெரிதாய் இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்..

அதன் பின்னர் எங்கள் கேம்பின் ’க்ளப் டே’ வுக்கு சற்று ஒதுக்குப்புறமான தூரத்தில் இருந்த ‘ரெக்ரியேஷன் க்ளப்’ல்  நாடக ப்ராக்டிஸ் முடித்துவிட்டு வீட்டிற்கு இரவு சுமார் ஒரு மணியளவில் தனியாக திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென கேம்பின் கீழ்பகுதியின் தெருவிளக்குகள் ஒருசேர அணைந்தன. நான் தடுமாறியபடி வீட்டின் அருகில் வந்தேன்..(வீடுகளின் மின் இணைப்பு வேறு லைன்..)  என் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் இருந்த வீட்டிற்கு நேராக பச்சை பனியன் அணிந்து லுங்கியுடன் ஒருவன் நீண்ட தடியுடன், பாறை ஒன்றின் மேல் கால் ஊன்றியபடி நின்றிருந்தான்.  என்னை பார்த்தும் விட்டான். ஆனால் அவனிடம் எந்த பதற்றமும் இல்லை..  நான் சத்தமில்லாமல் வீட்ட்டின் கதவை தட்ட அம்மாதான் திறந்தாள். வாலைச்சுருட்டிக் கொண்டு படுத்தவன் காலையில் இன்னொரு சந்தன மரம் வெட்டிட்டு போயிட்டானுக என்ற செய்தியை கேட்டுதான் எழுந்தேன்.   

இப்படியாக பல நிகழ்வுகள். ஆனால் இவை எதிலும் வீரப்பனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவன் கொன்றது எல்லாம் அவன் தொழில் முறை விரோதிகளைதான்(?!) .

இதுபோல் ஏராளமான அனுபவங்கள். சரி.. இப்போது என் அனுபவங்களை கொஞ்சமேனும் உள் வாங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.   இனி படத்தினை கவனிக்கலாம். 

முதலில் படம் எடுக்கப்பட்ட காடு.. அதை காடு என்று சொல்ல முடியாது.. வீரப்பன் உலவியது ‘ட்ராப்பிகல் எவர்க்ரீன் வெஜிட்டேஷன்’ வகைக் காடுகள்.. படத்தில் உள்ளது ‘ட்ராபிகல் தார்னி (thorn) வெஜிட்டேஷன்’ என்று வரையறுக்கலாம்.  கதையின் காலக்கட்டம் 2000தின் முன் பின்னான ஆண்டுகள்.. அதில் அர்ஜூன் (விஜியகுமாராக..) இன்றைய நவீன எல்சிடி மானிட்டர்களும், ஸ்லிம் லாப்டாப்புகளுடன் வலம் வருகிறார்..

வ.ஐ.ச ஜெயபாலன் மட்டும் மிலிட்டரி பெரியவராக (போட்டுக்கொடுக்கும்..)வரும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.   வீரப்பன் (கிஷோர்) உட்பட மீதம் எல்லாம் பக்கா சினிமாத்தனம்.

காவல்துறையினர்,அரசு ஊழியர்கள் வீரப்பனை தேடுகிறேன் பேர்வழிகள் என்று வீரப்பன் சார்ந்த கிராமங்களில் கொட்டாட்டம் போட்ட நிகழ்வுகள் சித்தரிக்கப்படவில்லை.. (உண்மையை சொல்ல பயந்தவன் எதுக்கு படமெடுக்கணும்.. )  

இன்னும் பல சிரத்தையில்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள்.. என்று படம் முழுக்க அற்பத்தனங்களும் சினிமாத்தனங்களும் நிறைந்த காட்சிகளே.  

க்ளைமாக்ஸில் வீரப்பன் கொல்லப்பட்ட காட்சி மட்டுமே போலிசாரின் வஞ்சக வெற்றியை சொல்லாமல் சொல்லுகின்றது. 

வீரப்பன் திரிந்தசமயத்தில் வேறு திருடர்கள் காட்டினுள் செல்ல பயப்பட்டதால் பல சிற்றுயிர்கள், விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. இன்று கண்டவனெல்லாம் காட்டில் களவாடும் பொழுதுகளை தினமும் கேட்கிறோம்.  இன்னும் என்னவெல்லாமோ தொன்றுகிறது.. 

ஞாபகங்களுக்கு காடுகளைப் போல் எல்லை இல்லையே.. 

ஆட்டமா தேரோட்டமா போன்ற குத்துப்பாட்டுகள் எதுவும் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல்.

நல்ல நேர்மையான பதிவாக இந்தப்படம் இல்லை என்ற குற்றச்சாட்டுடன்.. 

கணேஷ் நாராயணஸ்வாமி.
Ph: 98432 11228.







5 comments:

  1. அருமையான பதிவு தல. . . நேரில் பார்த்தது போல் இருந்தது தங்கள் எழுத்து நடை . . .#ஐ லைக் ஷகிலா டச்

    ReplyDelete
    Replies
    1. ஷகிலா மல்லுவுட்ல வளர்ந்த ஒரு ஸாண்டல் உட்’ன்னு சொல்லவர்றீங்களோ..

      Delete
  2. நல்லா எழுதியிருக்கீங்க தோழர். வீரப்பன் கதையை நீங்க குறைகளற்ற படமாக எடுக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு வாய்ப்புக்கிடைத்தால் பெரும் மகிழ்ச்சிதான் தோழர்.. ஆனா அதுக்குள்ள நம்ம சிந்தனை உலகளாவியதா மாறி இருக்குமே.. அதானே கொடுமை.

      Delete
  3. அருமையான பதிவு தோழர்!!

    ReplyDelete