Saturday, March 30, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - ஜாலி பார்ட்னர்ஸ்


திரைப்பார்வை..

மகன் விமல் பிறந்தது நாள்முதல் இன்றுவரை ஆன செலவுகளை பைசாவிடாது நோட்டு போட்டு எழுதும் அப்பா, மகன் சிவ கார்த்திகேயன் என்ன செய்தாலும் சத்தமில்லாது ஆமோதிப்புடன் நகர்ந்து செல்லும் (இந்த காலத்துலயும் இப்படி ஒரு அப்பனா?? ) அப்ப்ப்பா..  என்ற இரு நண்பர்களின் கதை.


”நம்ம ப்ளஸ்ஸே இந்த மைனஸ்ஸ ப்ளஸ்ஸாக்கறதுதான்” என்று ஆவூன்னா பாஸிட்டிவ் பன்ச் அடிக்கும் இந்த இரு நாயகர்களுக்கும் தலா ஒரு நாயகிகள் பிந்து மாதவி, விமலுக்கு ரெஜினா கஸ்ஸாண்ட்ரா,, (காசு எண்ணுறா இல்ல.. )  கழுகுல கண்ணை கொத்துன பிந்துவே இந்த படத்துல சுமாராதான் தெரியுறாங்க.. அப்ப சப்பின மாங்கொட்டை மாதிரி இருக்கும் இந்த புதுப்பொண்ணோட அப்பியரன்ஸ் பத்தி நோ அபிப்ராயம்.. மேட்டர் என்னன்னா  கேமரா அந்தளவுக்கு மெனக்கெடல. 

ரெண்டு ஹீரோக்களும் அப்பப்போ சப்பை மேட்டருக்கெல்லாம் அடிச்சிக்கிற நண்பர்கள். உள்ளூர் கட்சித்தலைவரோட கூட்டத்துக்கு  கூட்டம் சேக்குற அல்லக்கை வேலை பாக்கும் இவுங்க ரெண்டு பேருக்கும் தங்களொட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னாடி இருக்கறது ஓட்டுக் கணக்குதான்.  

விமல் அப்பாவோடு கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்து அப்பா நோட்டில் எழுதி வைத்திருக்கும் கணக்கை வட்டியின்றி செட்டில் பண்ணுவதாக சூளுரைத்து வந்து மீண்டும் கட்சி பணி அது இதுவென ஊர்சுற்றுகிறார்.  கடைசியில் கடனை அடைத்தாரா, காதலியை கைப்பிடித்தாரா என்பதுதான் கதை என்று சொல்விட்டு விட்டுவிட்டாலும் கதை கண்டமேனிக்கு திரிந்து அப்பா செண்டிமெண்ட்டோடு ஒரு வழியாக முடிகிறது. 

இயக்குனர் பாண்டிராஜ் ஆரம்பத்திலேயே "நாங்கள் சமூகத்திற்கு எதுவும் கருத்து சொல்ல வரவில்லை, நீங்களாகவே எதுவாவது புரிந்துக்கொண்டால் கம்பேனி அதற்கு பொறுப்பேற்காது"  என்று ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தால் சுதாரித்திருக்கலாம்.

எஸ்.எம்.எஸ் களை தொகுத்து அதற்கு காட்சிகளை உருவாக்கிய செயற்கைத்தனத்துடன் தொடங்கும் படம்.. பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் அதைவிட அதிகமான இடங்களில் கடுப்பு ரகமாய் திணிக்கப்பட்ட வசனமாய் துருத்திக்கொண்டு இருக்கிறது.




ஒவ்வொரு காட்சியும் ட்ராமா ஸ்டேஜ் போல் எப்போதும் ரயில்வே ஸ்டேஷனிலேயே தொடங்குவதால் மேடை நாடகம் பார்க்கிறோமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

தியேட்டரில் ஆங்காங்ககே மொக்கை ஜோக்குகளுக்கும் அதிரடியாக விடாமல் சிரிக்கும் உருப்படிகள் இருந்ததால், தியேட்டரே சிரிப்பதுபோல ஒரு மாயத்தோற்றம் எனக்கு இருந்ததென்னவோ உண்மைதான்.

நிஜமாகவே பல காட்சிகள் சிரிக்கும்படியாக இருந்தாலும், காட்சிகளின் கோர்வையில் பிசிறடிக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாது திடுமென தொடங்கும் காட்சிகள்தான்  நம்மை கதை ரயிலில்  ஏறவிடாமல் ப்ளாட்ஃபாரத்திலேயே இருத்திவிடுகின்றன.

விமல் குரலில் இன்னும் புதுக்கோட்டை பக்கத்து கிராமத்து வாசம், இவர் டைமிங்கில் சொதப்பினாலும், அங்கங்கே சிவ கார்த்திகேயன் மட்டப்பலகை வைத்து பூசிவிடுகிறார்.   

  (..மட்டப்பலகை என்ற உடன் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.. போன ’பரதேசி’ பதிவில் சொல்ல மறந்தது..  சமீப காலம் முன்புவரை, ஏன் இன்றும் சில இடங்களில கைகளால் தேயிலை பறிப்பவர்கள் பயன்படுத்திய ’மட்டக்குச்சி’ என்ற முக்கிய விடயத்தை எப்படி சேர்க்காமல் விட்டார் பாலா??.  ஏனெனில் தேயிலை பறிப்பவர்கள் அந்தக் குச்சியின் மட்டத்திற்கு மேலுள்ள இலைகளைதான் பறிப்பார்கள்.. அது ஒரு குறிய்யீடு.. ஹும்ம்.. )

Over to KBKD Review..

வரவர பாண்டிராஜ் சேகர் போல ஆனார் (வி.சேகர் தான்.. ) அப்படின்னு அடுத்த படத்துல சொல்லிடலாம் போல.. காட்சிகள் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

பிந்து மாதவியின் அம்மா பாட்டி அம்மம்மா என அனைவரும் தத்தமது கணவன்மார்களை அடித்து  புரட்டிய புர்ச்சிப் பெண்கள் என பிந்துவின் அப்பா விமலி(?) அண்ட் கோவிடம் கூச்சமின்றி குமுறும் காட்சி தியேட்டரில் அல்லோல கல்லோலப்படுகிறது.. அப்புறம் வழக்கம்போல் டாஸ்மாக் காட்சிகளும்தான்..


 கதைப்படி விமல் அப்பா டெல்லி கணேஷ் மகனை கல்யாணம் செய்யச் சொல்லும் பெண் யாரென்று தெரியாமலே மறுத்து சண்டை போட்டுவிட்டுதான் வீட்டை வருகிறார்.  பெண் வீட்டாரிடம் அட்வான்ஸ் ஒரு லட்சம் வேறு வாங்கிவிட்டதாக வேறு டெல்லி கணேஷ் சொல்கிறார், ஆனால் அந்த பெண் தான் பிந்து என தெரியாது அவரையே காதலித்து அவரின் அப்பாவிடம் பெண் கேட்க செல்லும்போது அவர் விமலிடம் மகளை கல்யாணம் செய்து தர தட்சிணை கேட்கிறார். இது கொஞ்சம் குழப்பம்.. போதாக்குறைக்கு விமலுக்கு பிந்து தன் பள்ளி ஸ்நேகிதி என்ற திணிப்பு வேறு.. நல்லாச் சொல்லுறீங்கய்யா கதைய..

’கேடி’ ’கில்லாடி’ என்றவுடன் அவர்கள் பயங்கர மூளையுடன் எதாவது அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது செய்வார்கள் என்று நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான எடிட்டிங், அமெச்சூர்தனமான கேமரா என இதையெல்லாம் தவிர்த்து பார்த்தால் படம் நிச்சயம் ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்டுதான்.

பெரிய எதிர்பார்ப்பின்றி போனால் நிறைய சிரித்துவிட்டு வரலாம்..

நன்றி.

Wednesday, March 20, 2013

பரதேசி - சைக்கோவின் சந்துச்சுவர் கிறுக்கல்கள்..


சமர்ப்பணம்!. 

ஒரு தலைமுறை பட்ட அவலங்களையும் கஷ்டங்களையும் பிரதானமாக சொல்லாது, அதிலிருக்கும் அசிங்கங்களை மட்டுமே அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதற்கு, இந்த வெகுஜன ஊடகமான சினிமாவை பயன்படுத்திய பாலா மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு..

*****



 முதலில், இந்த பதிவிற்கு இந்த படத்தின் போட்டோக்களையே பயன்படுத்தக்கூட அருவருக்கும் மனநிலையில் இருக்கிறேனே  என்ற குற்ற உணர்ச்சியுடன் தொடங்குகின்றேன்


 உங்களில் பலர் கொண்டாடுவது போல்பாலாஎன்பவர் யதார்த்த சினிமாவின் பிதாமகனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..  ஆனால் அதற்கான முழுத்தகுதியும் இருக்கிறதா என்பதில் எனக்கு பெருத்த சந்தேகம் இன்னமும் இருக்கிறது.  
நல்லவேளை அவன் இவனில்உவ்வேசொல்லும்படியான வசனங்களும் காட்சிகளும் கொடுத்த அருவருப்பினை மறந்து அவரின் நல்ல படங்களின் பாதிப்பை மட்டுமே சுமந்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்னை SSR பங்கஜத்தில்.. 


பலருக்கும் கதை இந்நேரம் தெரிந்திருக்கும்படியாதலால் அதனை சுருங்கச் சொல்லிவிடுகிறேன். 1939வாக்கில் சாலூர் என்கிற கிராமத்தில் இருந்து வறுமையில் உழலும் மக்கள் கங்காணி ஒருவனின் வார்த்தைகளை நம்பி நெடுந்தொலைவு கடந்து  ’பச்சைமலைதேயிலை (வால்பாறை அருகில் நான்கு கி.மீ உள்ள) தோட்டத்திற்கு செல்கிறார்கள்அங்கு அவர்கள் படும் கஷ்டங்களும் அதிலிருந்து மீண்டனரா என்பது பின்பாதி பதிவு

இந்த படம் ஒரு சிறந்த முயற்சி.. மட்டுமல்ல கலைஞர்களின் குறிப்பாக அதர்வாவின் பாட்டியாக நடித்தவர் போன்ற அருமையான நெஞ்சில்  பதிந்து தடம் பதிக்கும் பாத்திரங்களும் கணிசமானோர் படத்தில் உண்டு!!


ஆனால் மொத்த படமும் பார்த்து முடிக்கையில் கனத்த மனதுடன் தியேட்டரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது.. ”பார்.. முழுதும் சைக்கோவாகிப்பொன பாலாவைப் பார்!!” என்று அசரீரி எனக்குள் இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.  

போதாக்குறைக்கு அவர் வியாபார தந்திரத்துடன் வெளியிட்ட ரியாலிட்டி டீஸரின் கடைசியில் அவர் அடிவாங்கிய ஆர்ட்டிஸ்டுகளின் நடிப்பில் திருப்தியாகி வக்ரத்துடன் புன்னகைக்கும் ஸ்டில்லும் என் கண்முன்னே 360 டிகிரியில் வட்டமடிக்கின்றன



சாலூர் கிராமத்தில் வாழும் மக்கள் என்ன பிரிவினர்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்று பார்க்கும் இன்றைய தலைமுறையினர்க்கு புரியவைக்க வேண்டும் என கொஞ்சம்கூட மெனக்கெடவில்லை. வட்டு மயிர்களோடு அலையும் ஆண்களை வைத்து நாமே நமக்கு இருக்கும் அரைகுறை அறிவின் மூலம் அவர்களின் சமூகவியல் கஷ்டங்களை  அனுமானித்துக் கொள்ளவேண்டும் போல.. 


படத்தின் முக்கிய பாத்திரமானஒட்டுப்பொறுக்கி ()  ’_சுப்பொறுக்கி’ மட்டுமே படத்தில் தண்டோரா அடித்து தகவல் சொல்லும் வேலைப்பார்க்கிறார். மற்றவர்கள் என்ன வேலை அய்யா செய்கிறார்கள்??  (நான் இரண்டாவதாக சொன்னதைப் போன்ற நாற்றமடிக்கும் பெயர் பதிவுகள் பாலாவின் ட்ரேட்மார்க்காக ஆகிவிட்டதுதான் வேதனை..)  இதையெல்லாம் விளக்கமாகச் சொல்ல இரண்டு காட்சிகள் போதுமே?!  (நல்ல படைப்பாளிக்கு!!). 


நான் வெகுவாக ரசித்த நாஞ்சில் நாடனின்இடாலக்குடி ராசாகதை இங்கு முதல் பாதியில் பிணைக்கப்பட்டு  நாம் மனதில் உருவகப் படுத்தியிருந்த பாத்திரம் நம் கண் முன்னேயே பழைய இரும்புக்கடையில் நசுக்கப் படும் ஈய பாத்திரம் போல தட்டையாகி விடுகிறது.


அடுத்து  நாயகி வேதிகாவின் அங்க அசைவுகளும் நடன செய்கைகளும் கடுப்பு ரகம். ஒருவேளை வேதிகாடைம் மிஷின்ல் ஏறிவந்து பாலா படங்கள் பார்த்திருப்பார் போல!! .  போதாக்குறைக்கு அரைலூசு கதாநாயகனை அந்த முழு லூசு இழுத்துச் சென்று காட்டுக் குடிசையில் வைத்து கற்பழிக்க வேறு (??) செய்கிறது

எல்லா படங்களிலும் நாயகியை லூஸுப்பெண்ணாகவே (அது கதைக்கு தேவையே படவில்லை என்றாலும்கூட..) வர்ணிப்பது என்ன வகையான மனநோய்??!!!. அம்மணி  ஓவர் ஆக்டிங். இதற்கும் இயக்குனரே பொறுப்பேற்க வேண்டும்


ஜாலியாகத்தானே மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே.. திடீர் ஞானத்துடன் பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்லும்ஒட்டுப்பொறுக்கிஅதர்வா.. செய்த வேலைக்கு கூலியை கேட்டு அடி உதைப்பட்டு அழுகிறார். தாழ்த்தப்பட்டவர்கள் வேலை செய்தால் அந்த காலத்தில் கூலி கொடுக்க மாட்டார்கள் போல!!. அப்போது வந்து சேரும் கங்காணி ஊருக்குள் வந்து  மக்களிடம் பணத்தைக் காட்டி எஸ்டேட் வேலைக்கு அழைக்கிறார்


சாலூர் கிராம மக்களும் பணத்தாசையில் மயங்கி.. பல ஜென்மங்களாக அடிமையாக வாழப் பழகிக்கொண்ட மனநிலையுடன் அடுத்த நாளே கிளம்பிச்செல்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணைவிட்டு புலம் பெயர ஆதார காரணியாக  பணத்தாசை ஒன்று போதுமா??. ஆமாம் எனில் அந்த மக்கள் பட்ட கஷ்டங்கள் அதற்குண்டான  தண்டனை என்று கொள்ளலாமா??. 


பெருங்கூட்டமாக இடம் பெயர்ந்து தமிழ் நாட்டின் இன்னொரு மூலைக்கு அவர்கள் 48 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்ஒரு நாளைக்கு சராசரியாக நாற்பது கி.மீ என்று வைத்துக்கொண்டாலும்கூட 1600 கி.மீ.. பாலா சார் அவர்களை அஸ்ஸாமுக்கே கூட்டி சென்று இருக்கலாம்.  


ஒரே பொட்டல் வெளிப்பயணம்.. இதுவே ஒரு அபத்தம்!!   போகிற வழியில்  அவர்களில் ஒருவர் இறக்கும் தருவாயில் சோர்ந்து விழ.. எதோ கந்தல் துணி விழுந்து விட்டது போல் அவரை அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள்..  அவரும் கஷ்டப்பட்டு கையை அசைத்து அழைக்க.. அந்த கையை மட்டும் க்ளோஸப்பில் காட்டி அனுதாபம் தேடும் அசல் சினிமாத்தனத்தை பிரதிபலித்திருக்கிறார்என்னைப் பொறுத்தவரை கதையின் நாடி அந்த ஜீவனோடு  அந்த காட்சியிலேயே செத்துவிட்டது


அவர்கள் போய் சேருவதாக சொல்லப்படும் பச்சை மலை எஸ்டேட்டில் 1917 களிலேயே TATA நிறுவனம் தனது ப்ளாண்ட்டேஷன்களை துவங்கி  பணியாளர்களுக்கு முறையான திட்டமிடப்பட்ட சம்பள விகிதங்களை கடைபிடித்தது என்பது உபரித்தகவல்


கடும் வெயிலில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து பழகிய இனம் ஆனைமலை தொடரின் குளிருக்கு தங்களை வழக்கப்படுத்திக் கொள்ள என்ன பாடுபட்டிருக்கும்?. இதை உணரவேண்டுமானால் திடுமென ஒரு நாள் போட்டிருக்கும் சட்டையுடன் ஊட்டிவரை போய்வாருங்கள். அப்போது உணரலாம் அந்த கஷ்டங்களை!. 

ஆங்கிலேயர்கள் கொடுங்கோலர்களாகவே சித்தரிக்கப் பட்டாலும் அதில் பல நல்லவர்களும் இருந்தனர் என்பதனை பாலா மறந்தும்கூட சொல்லவில்லை என்பது  வருத்தமே (உதாரணமாக படத்தின் மூலக்கதையின் (ரெட் டீ ) ஆசிரியர்  பி.ஹெச்.டானியல் போன்றோர்கள.. ரெட் டீ நாவலின் ஆசிரியர் பி.ஹெச்.டானியல் போன்றவர்களால்தான் பல நல்லதுகள் நிகழ்ந்தன என்பது வரலாறு. மேலும்  Carwer Marsh போன்றவர்கள் மக்களிடையே நல்ல புரிந்துணர்வுடன் பழகி நன்மதிப்பை பெற்றனர். எந்த அளவிற்கென்றால், இவர் நிர்மாணித்த கவரக்கல் எஸ்ட்டேட்டில் இவருக்கு நினவுச்சிலை அமைக்கப் படுமளவிற்கு!!  

 ( மதராஸ பட்டினம், காலாபானி, நாடோடிதென்றல் போன்ற படங்கள் அதை சொல்லியிருக்கின்றனவே என்று நினைத்து பாலா விட்டுவிட்டார் போல..)


இன்னும் சொல்வதானால் 1920களில் ஆங்கிலேயர்களால்  கட்டப்பட்ட தேயிலை தொழிலாளர்கள் குடியிருப்புகள் படத்தில் காட்டப்படுவதுபோல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கவில்லை. இன்றும் அவை புழக்கத்தில் இருப்பது நிகழ்காலச் சான்று. மலை சாதியினர் மட்டுமே தங்களை வெளிக்கொணர மறுத்து இயல்பு மாறாமல் வாழ்ந்தனர் என்பதுதான் உண்மை


இங்கிலாந்தில் இருக்கும் தங்கள் கம்பெனிகளுக்கு லாபம்  ஈட்ட கடுமையாக வேலை வாங்கினார்கள் என்பதும் அதை ஏவலாக ஏற்றுக்கொண்டு கங்காணிகளும் பிழைப்பு நடத்தினார்கள் என்பதும் மட்டுமே படத்தில் சொல்லப்பட்டது போல உண்மை


எல்லாவற்றிற்கும் மேலாக, அற்றைய நாட்களிலேயேஅஸ்ஸாம்’ல் இருந்தது போன்ற ”Wage System"  இங்கேயும் பல இடங்களில் அமலில் இருந்தன என்பது பதிவுகளில் உள்ளதுநான் எதற்கும் ஒருமுறை பச்சை மலை எஸ்டேட்டிற்கு ஒரு பயணம் மேற்கொண்டு வரலாம் என இருக்கிறேன்.  


இந்த ஆவணப்படத்தில் எதற்காக எதிர்க்க திராணியின்றி தன் மனைவியையே விட்டுக்கொடுக்கும் ஒரு கையாலாகாதவனின் வரலாறு?.   ஒரு தலைமுறையின் வடுக்களையோ வீரத்தினையோ சொல்லமுனையும் படம் மட்டுமே ஒரு நல்ல ஆவணப் பதிவாக இருக்க முடியும். அதை விடுத்து அதன் அழகான பக்கங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அச்சு மையினை திரட்டி எடுத்து இன்று வாழும் அவர்களின் சந்ததியினர் முகத்தில் அறைந்து அப்பிவிடும் காரியத்தை பாலா போன்ற குரூர க்ரியேட்டர்களால் மட்டுமே தர இயலும்!


வழக்கமான பாலா பட நாயகன் போல அதர்வாவும் கங்காணியை மலைவெளிகளில் உருட்டி.. மிதித்து.. சவட்டி... எடுத்து கொடூரமாக கொல்லவில்லை என்பது மட்டுமே உச்சப்பட்ச ஆறுதல்!!


மளிகை கடை வைத்து ஏமாற்றும் முஸ்லிம் பாய், மந்திரித்த தாயத்துகளை விற்கும் போலிபூசாரி (இவர் அதர்வாவிற்கு தாயத்தினை எங்கு கட்டவேண்டுமென ஆத்தா மகமாயியிடம் கூவுவது நரகளை மிதித்த அனுபவத்தை தருகிறது.,) அடுத்து, மருத்துவர் என்ற போர்வையில் கிறிஸ்தவத்தை பரப்பும் டாக்டர் என்பது போன்ற தேசிய ஒருமைப்பாடுகளும் படத்தில் உண்டு நியா…….யமாரே!! அதிலும் டாக்டரும் அவரது இங்கிலீஷ் மனைவியும் அடிக்கும் குத்தாட்டக் கூத்து பாலா படங்களுக்கான கேவல அடையாளங்கள்!


பின்னணி இசை மற்றும் இதர டெக்னிக்கல் சமாச்சாரங்களை குறித்து பேச இது சமயமல்ல என்று நினைக்கிறேன். ஆனால் இந்த பூஞ்சை பூத்தாற்போன்ற கல்ர் டோன் எதற்கு என்றுதான் எனக்கு இன்னமும் விளங்கவில்லை, அந்த அரைவட்டு மயிர் வெட்டைப் போலவே..   

இன்னும் என்னென்னவோ எழுத நினைக்கிறேன்.. ப்ச்.. ஆற்றாமை என்னை தடுக்கிறது.


அப்பாவி தியேட்டர் ரசிகன்..

கணேஷ் நாராயணஸ்வாமி

குறிப்பு: பின்னூட்டங்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்!! ம்.. ஸ்டார்ட் மூஜிக்..