Saturday, March 22, 2014

குக்கூ - செல்லுலாய்ட் குயில்!




இளங்காலைப் பொழுதுகளில், ஆளற்ற வனங்களில் உலவும் அரவங்களை துயில் எழுப்பிவிட சுப்ரபாதம் இசைக்கும் குயில்களின் குரலினை கேட்டிருக்கிறீர்களா?!.. எனக்கு கால் சத வாழ்க்கை அப்படித்தான் கழிந்தது. நான் நடக்கும் பாதையை சற்று நழுவி அந்த குயிலின் முகம் காண விழையும்போது., தன் குரலை நிறுத்தி அடையாளங்களை மறைத்து காணாமல் போகும்


ஆனால் ராஜுமுருகனின் குக்கூவிற்கு நிலைமை நேர்மாறானது. கண்கள் கிடையாது, கேட்டலிலும் தழுவலிலும் மட்டுமே முன் நிற்பவரை உணர முடியும். பகலில் ரயிலில் வழிகாட்டும்ஒளிவிளக்கு விற்பதும், மாலை நாடக குழுவில் ராஜாவின் குரலில் பாடல் பாடுவதுமாய் நகர்கிறது வாழ்வு. இந்நிலையில் இவனது பயணத்தில் வந்து சேரும் இன்னொரு கண்ணற்ற படித்த(!?) குக்கூவுடன் இவர் சேர்ந்தாரா என்பது திரைக்கதை.


ராஜுமுருகன் விகடன் நிருபராய் இருந்த நாட்களில் தான் கடந்து வந்த மனிதர்களில் மறக்கமுடியாதவர் என அடையாளம் காட்டி, தினேஷின் கதையை சொல்லத்துவங்குகிறார். சங்கரின் ’S’ பிக்சர்ஸில் கதை சொல்லி அங்கே துவங்க இருந்த அவரது சினிமா பயணம் தாமதமாய் இந்த படத்தில் துவங்குகிறது. தனது முதல் வாய்ப்பையே கமர்ஷியல் பேக்கேஜுக்கு காவு கொடுக்காத இயக்குனரின் தைரியம் கொஞ்சம் ஆச்சர்யம்தான்.  

வட்டியும் முதலும்தொடரில் மனித உளவியல்களை வார்த்தைகளில் கோர்த்தவர்., செல்லுலாய்டில்கண்அற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைஒளிஓவியமாய் வரைந்திருக்கிறார். நல்ல தரமான படைப்பை தர முயன்றிருக்கிறார்.  ஆனால் தனக்கு தெரிந்த    பல விஷயங்களைஇன்னொரு படம் மூலம் சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் போனால் என்னவாகுமோ?!’ என்ற பதைபதைப்புடன் பல விஷயங்களை திணிக்க முயன்ற தொனி அங்கங்கே தெரிகிறது. ரசிக்கும்படியாகவே இருந்தாலும் சில இடங்களில் அவசியமின்றி காட்சிக்கு பொருந்தாமல் வந்துவிழும் அரசியல் வசனங்கள்  இதற்கு உதாரணம்.


இந்த சிறு நெருடல்களை மறக்கடிக்க வைப்பவைசந்திரபாபுஅண்டு கோவின் அட்ராசிட்டி அலப்பறைகளே. போனஸாக தினேஷின் நண்பராக வரும் அந்த மாற்றுத்திறனாளியின் கருத்து குத்துக்கள் பல இடங்களில் சிரிக்க வைத்துவிடுகிறது.


நல்லவர் என நினைப்பவரை கெட்டவராகவும், கெட்டவர் நினைப்பவரை நல்லவராகவும் சில இடங்களில் நேர்மாறாகவும் காட்டும் வழக்கமான சினிமா உத்திகள் சில இடங்களில் மட்டுமேவொர்க் அவுட்ஆகிறது.


நாயகி மாளவிகா, அலட்டலில்லாத நடிப்பில் முட்டைக் கண்களுடன் அழகாக வந்து போகும் அவருக்கு சினிமா உலகம் குட்டைப் பாவாடை மாட்டிவிட்டு அல்ட்ரா மாடர்னாக மாற்றும் வரை நிச்சயம் ரசிக்கலாம்.


குக்கூ பாடல்கள் அழகிய ஹைக்கூ கவிதைகள்தாம். அவைகளை இயக்குனர் நெருடலின்றி சரியான இடத்தில் பொதிந்திருக்கிறார். இளையராஜாவின் பாடல்களும் அப்படித்தான்.., அதிலும் அந்த ஆத்தாடி பாவாடை பாடலை முடித்தவிதம் மட்டும் இயக்குனரின் குசும்புக் கவிதை.


பெரிய பதற்றங்கள் எதுவுமின்றி நகைச்சுவையோடு நன்றாகவே கடந்துபோகும் முன்பாதியின் நிறைவு பின் பாதியில் சற்றுக் குறைவுதான். எல்லாம் சுமுகமாக நடந்துவிடுமென்று நினைக்கும் நிலையில் நாயகி நாயகனுக்கு என்ன நடந்திருக்கும் என்றுகூட தெரிந்துக்கொள்ள பொறுமையின்றி  தான் இருக்கும் பாதுகாப்பான சூழலை உடைத்து திடுமென காணாமல் போகிறார்.


இந்த சினிமாத்தனமான ட்விஸ்ட் திரைக்கதை அதுவரை கட்டிக்காத்த இயல்பான ஓட்டத்தை குலைக்கத்தவறுவதில்லை. ஒருவேளை இது உண்மைக் கதையாகவே இருக்கும் பட்சத்தில் அதற்கான காரணத்தை அசட்டையாக சொன்ன வகையில் இயக்குனரின் அனுபவ அளவீடாக எடுத்துக்கொள்ளலாமா?!


பல இயக்குனர்களை தனது மதிப்பெண்களால் மதிப்பீடு செய்யும் உத்தியின் மூலம் பல இயக்குனர்களின் கருவல்களை மார்பில் தாங்கும் விகடனின் செல்ல இயக்குனருக்கு அவர்கள் வைக்கப்போகும் விமரிசனத்தை விமரிசனம் செய்ய ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது!   


முதல் படைப்பு என்ற வகையில் நிறைகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் சாமானியனின் ரசிப்புத்தன்மை இருந்தால் இந்த கூவல் பரவசமாகும், என்னளவில் எனது பால்யங்களில் நான் கானகத்துள் கேட்டு கடந்த கணங்களின்  பரவசம் இந்த குக்கூவில் கொஞ்சம் குறைவுதான்.

  
  

1 comment: