Sunday, March 30, 2014

இனம் - ஒட்டுபோட்ட இடமும் கிழிபடுகிறது!



இலங்கையில் துடிதுடிக்க கொல்லப்பட்ட தமிழ் இனத்தின் வலியை ஒரு மலையாளி (’தமிழனல்லாதவன்’ என்ற சொல்லாடல் இங்கே பொருந்தி வரவில்லை..) சொல்ல முயன்றால் எத்தனை உண்மைகள் திரிக்கப்படும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
தான் விதைக்கப்பட்டு வாழ்ந்து பின்னர் அங்கேயே சாகக்கடவது என்று சபிக்கப்பட்ட ஒரு இனத்தின் கொஞ்சம் ஜீவன்கள் தன் கூட்டைவிட்டு நகர மறுத்து அங்கேயே செத்துபோவதுதான் கதை.        


தன் திரைக்கதைக்கு வாகாய், ஈழப் புலிகளின் வாழ்வியலையும் நெறிமுறைகளையும் சொல்லாமல் தவிர்த்ததுதான் இந்த சினிமா இழைத்த முதல் அநீதி.

ஈழத்தவர், மலையகத்தமிழர்கள் இவர்களின் முன் பின் வரலாறு குறித்த பறைசாற்றல் ஏதுமின்றி பொளேரென ஹாஃப்வேயில் துவங்குகிறது கதை. செல்லடி பட்டு அழியும் உயிர்களின் கூக்குரல் வான்வழியே ’டிஜிட்டல் சிக்னல்’களாய் இம்மண்ணில் இறங்கிய நொடிகளில் நாம் செவிடர்களாய் வாழ்ந்திருந்தோம் என்ற குற்ற உணர்ச்சி நமக்குள் இன்னும் தீய்ந்து போய்விடவில்லைதான். 

ரஜினி என்ற பெண்ணின் அனுபவத்தை சொல்வதாக படத்தை துவங்குகிறார் இயக்குனர். ஒரு கடலோர கிராமத்தில் ’சுனாமியக்கா’ என்ற (சரிதா) பெண்ணின் அரவணைப்பில் வாழும் சில ’முதிர்ந்த!?’ சிறுவர் சிறுமியர்களிடமிருந்து கதையை சொல்கிறார். கதையும் ’செல்லடி’க்கு பயந்துவிட்டது போலும்! கடைசிவரை அங்கிருந்து நகரமாட்டேன் என்கிறது. ஒழுங்கற்ற திரைக்கதையின் போக்கில் கொஞ்சம் கவனம் ஈர்ப்பவன் ‘நந்தன்’ என்னும் மன்வளர்ச்சி குன்றிய சிறுவன்தான்.

தன் மனைவிக்கு கர்ப்பிணி வேஷம் போட்டுவிடும் கருணாஸின் வசனம் ஒன்று இப்படி ஒலிக்கிறது, “பத்து ஆம்பிளைக கூடும் இடத்தில் ஒரு சிலரின் பார்வை தப்பாகத்தான் இருக்கும், இந்த வேஷம் உனது பாதுகாப்பிற்குத்தான்” என்பதாக வருகிறது.  இது சிங்களவன் தமிழ் அப்பாவி பெண்களுக்கு இழைத்த வன்கொடுமைக்கு சப்பைக்கட்டு கட்டுவதாக அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?. கற்பழிக்கப்பட்டது இயக்குனரின் குடும்பப்பெண்கள் இல்லையே என்ற இறுமாப்புதான்.

தமிழன் தன்னை எதைச் சொன்னாலும் சுரணையின்றி இளித்துக் கொண்டிருப்பான் என்பது அண்டை மாநில இயக்குனருக்கு தெரிந்திருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள படையின் கேப்டன் தன் படைவீரர்கள் வன்புணர்ச்சி செய்வதை தன்னால் தடுக்க முடியாமல் புலம்புவது போன்ற கேவலமான காட்சி ஒன்றும் இருக்கிறது. இதைக்கூட எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி பார்த்துவிட்டுதான் தியேட்டரிலிருந்து வெளியேறினேன்.   

இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு பார்த்தால் இயக்குனர் சொல்ல வருவதன் சாராம்சம் பின் வரும் வடிவில் இருக்கலாம்.
  ”ஈழப்பெண்கள் கர்பிணியரோ, முதியோரோ அல்லாது இருப்பின், அவர்கள் கற்பழிப்புக்கு உகந்தவர்களே, எனவே தங்களை அவர்கள்தான் எப்படியாவது காத்துக்கொள்ள வேண்டும். சிங்கள போர் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துதான் நியாயத்தை நிலை நாட்டியுள்ளனர், புலிகளின் குழப்ப நடவடிக்கைதான் இதற்கு முழுமுதற்காரணம்... “ இதைப்போல இன்னும் நிறைய யோசித்துக்கொண்டே போனால் விரக்திதான் மிஞ்சுகிறது.

இது போன்ற படங்களை ஊக்குவித்து திரையரங்கம் வரை கொண்டுவந்து சேர்த்த ஒவ்வொருவனும் தமிழின துரோகிதான்.

இந்த படங்களின் அரசியல், இறையாண்மை பின்புலங்களை  புதியதலைமுறையின் ‘லக்கிகிருஷ்ணா’ போன்ற கூர்நோக்கும் எழுத்தாளர்கள் எழுதி அம்பலப்படுத்த காத்திருக்கிறேன்.

வருத்தங்களுடன்,
கணேஷ் நாராயணஸ்வாமி.

2 comments: