Wednesday, April 2, 2014

ஒரு ஊர்ல.. - ஒரு நெஞ்சை உலுக்கும் கதை


தேவதைகளை மகள்களைப் பெற்ற சித்தப்பாக்களுக்கும் ஒரு கதையுண்டு, தமிழ் சினிமாவில் இதற்கு முன் நம்மைக் கடந்து சென்ற ’கதைசொல்லி’களால் அதிகம் வாசிக்கப்படாத பக்கங்களில்
இதுவும் ஒன்று. புத்தம் புதிய கதைக்களம். 

வழமையான சினிமா பாணியில் ஊறித்தவிக்கும் என் சிந்தனையை கட்டி இழுத்து வந்து இந்த கதைக்களத்தில் கட்டிப்போட கொஞ்சம் மெனக்கெடத்தான்  வேண்டியிருந்தது.

தாயை இழந்து, இதுவரை கிடைத்த பாசமும் களவுபோய் தவிப்பவன் ’தேரி’ (பருத்திவீரன்- வெங்கடேஷ்), வசதியான குடும்பத்தில் இருந்து வந்து தனக்கு அண்ணியாக வாக்கப்பட்டவளிடமும் அந்த பாசமும் ஈடு செய்ய இயலாமல் போய்விடின் என்ன செய்வான்?. பழைய இரும்புக்கடையில் கூலிவேலைப் பார்த்து கிடைத்த காசில் ராப்பகலாக குடித்துவிட்டு   ’போதை’ அவன் ’மேனி’யை  இழுத்துக்கொண்டு போகும் போக்கில் தெருவிலும் குப்பை மேட்டிலும் பொழுதை கழிக்கிறான். போதை தெளிந்தால் தாயின் இழப்பும், வேலை முடிந்தால் போதையின் வனப்பும் தாலாட்ட காலம் கரைகிறது.

அண்ணன் கட்சி அரசியல் ஊர் பஞ்சாயத்து தலைவர் என்று திரிந்துக் கொண்டிருக்கிறார். அவன் அப்பாவும் வீட்டில் செல்லாக்காசாக கிடக்கிறார்.  கொஞ்சமேனும் பாசம் காட்டாத அண்ணிக்கு ஒரு மகள் பிறக்க, அதை பார்க்க வரும் சொந்தக்காரர் குழந்தை அப்படியே இறந்துபோன தேரியின் அம்மாவைப்போலவே இருப்பதாக சொல்லிவிட்டு போகிறார். இந்த ஒரு நிகழ்வுதான் அவன் தாய்பாசத்திற்கு வடிகாலாய் கிடைத்துவிடுகிறது. அண்ணியின் உதாசீனத்தையும் மீறி குழந்தையை நெஞ்சில் சுமக்க துவங்கிவிடுகிறான்.

குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்று வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு அவனது பொறுப்புணர்ச்சி கூடித்தான் போய்விடுகிறது.

இந்நிலையில் அண்ணன் வைத்துக்கொண்ட ஒரு ‘தொடுப்பு’ குடும்பத்தை சீர்குலைப்பதுதான் மீதிக்கதையும், நெஞ்சத்தை கனக்கச்செய்யும் க்ளைமாக்ஸும். குடியும் முரட்டு உருவமுமாக அலையும் நாயகன் ’தேரி’ குழந்தை பாசத்தில் குழைந்து தானும் குழந்தையாகவே மாறுகிறார். இதை, அந்த குழந்தை எதிர்வீட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கும் ’டெங்கு அவேர்னஸ் கேம்ப்’ பெண்ணின் பூந்தொட்டியை உடைத்துவிட்டு திட்டு வாங்கும் ஒரு காட்சியிலேயே உணர்த்தி விடுகிறார்.

’டெங்கு கேம்பின்’ ஒரு பெண்ணாக வரும் நாயகி நேஹாவிற்கு தேரியின் குழந்தைப் பாசம் ஒரு
நெகிழ்வை உண்டாக்கிவிடுகிறது.  இங்கு காதல் என்ற வஸ்துவை நுழைத்து கமர்ஷியல் கலவை பூச
இடமிருந்தும் அதை லாவகமாக தவிர்த்து, கதையின் ஓட்டத்தை சீர்குலைக்காத இயக்குனர் நிச்சயமாய் ஒரு சிறந்த படைப்பாளிதான். விரசமில்லாத கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே கோர்த்ததில் இயக்குனர் வசந்தகுமாரின் படைப்பு நேர்த்தி தெரிகிறது.


படத்தின் போக்கினை கெடுக்காத சின்ன சின்ன நகைச்சுவைகளும் படத்தின் நகாசு நர்த்தனம்தான்.  அதிலும் அந்த ‘முகம்’ காட்டாத டிவிக்கு 15 ரூபாய் விலை நிர்ணம் செய்யும் பொடியனின் அசால்ட்டான பதில் உற்று கவனித்தால் மட்டுமே புலப்படும் நகைச்சுவை. இன்னும் பல இடங்களில் இதுபோன்ற ஜோக்குகள் வந்தாலும் ஒரு சில ஜோக்குகள் வொர்க் அவுட் ஆகாமல் வெறுமனே கடந்து போகிறது.   

’கனவில் ஈசன் சொன்னான்!’ என்று அடிக்கடி அரற்றும் உள்ளூர் ‘ஆதீனம்’(!?) போன்ற சில சுவாரஸ்யமான கேரக்டர்களும், படத்தில் உண்டு.  

இளையராஜாவின் இசையமைப்பில் ’999’வது படம் என்ற முத்திரையை சுமந்திருப்பதால் எதிர்பார்ப்பு கூடத்தான் செய்கிறது. ’தாயே வந்தாயே..’ பாடல் அக்மார்க் ராஜராகம்.  மட்டுமல்ல.., ’தேவதை போலொரு பெண்ணிங்கு..’ பாடல் குழந்தையின் காதுகுத்துவிழாவில் ஒலிக்க விடுவதுபோல் சிற்சில இடங்களில், பின்னணியில் பொருத்தமான இளையராஜாவின் பழைய பாடல்கள் ஒலிப்பதும் இயக்குனரின் நுட்ப சிந்தனைதான்.

எனதருகில் அமர்ந்திருந்த ஒரு ஹோட்டல் ’மாஸ்டர்’ கதையின் ஓட்டத்தை அவ்வப்போது சிலாகித்துக் கொண்டிருந்தார். இந்த படம் போய் சேரவேண்டிய சமூகத்தின் நிஜ முகம் அவரிடம் பிரதிபலித்தது உண்மை.

சென்னையில் மட்டுமே ரிலீஸாகியிருக்கும்.., கமர்ஷியல் மசாலா கொஞ்சமும் கலக்காத இந்த படம் சினிமா சந்தித்திருக்கும் பிரச்சினைகள் தமிழ் திரை உலகின் இன்னுமொரு ’கோர’ முகத்தின் நவரசம்தான். இதையெல்லாம் ஆழமாக சென்று அலசினால் சினி மாஃபியாக்கள் ’டூப்’ இல்லாமல் நம்மை போட்டும் புரட்டும் காட்சிதான் அடுத்த நிகழ்வாக இருக்கும். நல்லா இருங்கடே! 

இதைப்போன்ற நல்ல படங்களும் பெரிய ஸ்டார்களின் படங்களின் வசூலுக்கு சவால் விடும் நிலை வரும்போது, தமிழ் சினிமா உலக சினிமாக்களுக்கு சவால் விடும் உயரத்தை தொட்டிருக்கும்.
முன்பாதியில் இருக்கும் சின்ன ’வெறுமை’யை ஒரு அயிட்டம் ஸாங்கிலும், பின்பாதியின் ‘கீப்’ காட்சிக்கு ’6க்கு-8ல்’ ஒரு கானாவும் போட்டு நிறைத்திருந்தால் இந்த படம் இன்றைய தமிழ் சினிமாவின் வசூல் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கும்.

தாயெனும் கோயிலை காக்க மறந்திட்டு, மகள்களின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு கிடைத்து ரட்சிக்கப்படும் அப்பாக்களுக்கு இந்த படம் ஒரு படிப்பினை.
நன்றிகளுடன்,

கணேஷ் நாராயணஸ்வாமி.,
+91-98432-11228 

8 comments:

  1. ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எழுதியுள்ளீர்கள். உங்களை இந்தப் படம் ஈர்த்ததற்கானக் காரணங்களை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மை! நல்லப் படங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் இதைப் போலப் புதுக் களங்களை எடுத்துக் கையாள மற்ற இயக்குநர்களுக்கும் ஆர்வமும் துணிச்சலும் வரும்.

    amas32

    ReplyDelete
  2. too good. Great Ganesh. ( sorry for my silence for the other issue)

    ReplyDelete
  3. Nice ganesh. Also write the review for Mohanlal in dhrisyam movie also.

    but we cant see this movie bcas it released only in Chennai.

    so another thanks for ur review.

    ReplyDelete
  4. #டைனோசர்_களம்_இறங்கிடுச்சே

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தமிழ் சினிமா விமர்சனம் எழுதும் நண்பர்களாகிய Jackie Sekar Yuva Krishna Athisha Vino Saravanan Savadamuthu Rajesh Da Scorp Cable Sankar மற்றும் ஹாலிவுட் பாலா போன்றோருக்கு ஒரு “பயங்கரமான எச்சரிக்கையை” விடுத்திருந்தேன்.

    அந்த “பயங்கரமான எச்சரிக்கை” என்னவெனில் மேற்கூறிய அனைவருமே இனிமேல் சினிமா விமர்சனம் எழுதுவதை கைவிட்டுவிடவேண்டும் என்பதே.

    இதற்க்கு சரியானதொரு காரணமும் உண்டு: பாட்ஷாவுக்கெல்லாம் பாட்ஷாவாகிய தோழர் தியேட்டர் டைம்ஸ் கணேஷ் நாராயணசாமி அவர்கள் இனிமேல் தொடர்ந்து சினிமா விமர்சனம் எழுதுவது என்று எடுத்த முடிவுதான் அது.

    எப்போதுமே ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது. அதைப்போலவே ஃபேஸ்புக்கில் / பிளாக்கில் / ட்விட்டரில் இனிமேல் சினிமா விமர்சனங்கள் என்றால் அது பாட்ஷாவுக்கெல்லாம் பாட்ஷாவாகிய தோழர் தியேட்டர் டைம்ஸ் கணேஷ் நாராயணசாமி Ganesh Narayanaswami அவர்கள் எழுதும் விமர்சனமாகவே இருக்கவேண்டும்.

    இது அவரது உத்தரவு இல்லை,,,,,,, கட்டளை!!!!!!!!!!!!!!!!

    மேலே குறிப்பிட்ட நண்பர்கள் அனைவருமே இணையதளம் என்னும் காட்டில் சிங்கம், புலி சிறுத்தை, யானை போன்றவர்கள்.

    ஆனால் இப்போது வந்து இருப்பதோ டைனோசர்.

    ஒரு சிங்கம் வேட்டையாடும் காட்டில் ஒரு சிறுத்தை வேட்டையாடலாம்!

    ஒரு புலி வேட்டையாடும் காட்டில் ஒரு யானை வேட்டையாடலாம்!

    ஆனால்.... ஒரு டைனோசர் வெட்டையாடும் காட்டில்?

    புல், பூண்டு கூட கிடைக்காது.

    #டைனோசர்_களம்_இறங்கிடுச்சே

    தேவை இல்லாத ஒரு பின்குறிப்பு: நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என் பேச்சை கேட்கவில்லையெனில்..........இந்தாங்க... இந்த விமர்சனத்தை படியுங்கள்! படித்து தொலையுங்கள்!

    http://theatre-times.blogspot.com/2014/04/blog-post.html

    ReplyDelete
  5. கலக்குங்க ஜி..! பட்டாசா இருக்கு..! நம்ம டான் சொன்ன மாதிரி, டைனோசர் தான் நீங்க..! செம ரைட் அப்..!

    ReplyDelete