Sunday, April 27, 2014

சற்று முன் கிடைத்த தகவல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!

சற்று முன் கிடைத்த தகவல் - திரைப்பார்வை
முன் குறிப்பு: இந்த படம் தக்காளி சீனிவாசன் அவர்களால் 60% எடுக்கப்பட்டு, அவர் எடுக்கப்பட்பின்னர் எனது சமீபத்திய நண்பர் இயக்குனர் திரு.புவனை கண்ணன் அவர்களால் முழுமை செய்து வெளியிடப்பட்ட படம்.
திரையில் ஓடிக்கொண்டிருக்கும் யாரோ முகம் தெரியாத இயக்குனரின் படங்களுக்கு விமரிசனம் எழுதிவிட்டு போவது எளிது. ஆனால் சில மாதங்கள் பழகிய ஒரு இயக்குனரின் வேண்டுகோளின் பெயரில் ஏற்கனவே வந்து போன திரைப்படத்திற்கு கருத்து சொல்வது என்பது எனக்கு புது அனுபவம்தான். அவர் மீது நான் கொண்டிருக்கும் ’ஸாஃப்ட் கார்னர்களை’ உடைத்தபடி என்னுள் உறங்கிக் கொண்டிருந்த ’திரைவிமர்சகன்’ புறப்பட்டு தன் எழுத்தாணியின் முனையினை கூர்தீட்டிய சம்பவம் இது.  
மெய்யாகவே புதிய கோணத்தில் சொல்லப்பட்ட அக்மார்க் சைக்கோ த்ரில்லர். பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாவிடினும்.. ’அடச்சே!’ என அலுத்துக்கொள்ளும்படியான காட்சிகள் படத்தில் அபூர்வம். ஆனாலும் படம் பெரிதாக பேசப்படாமல் போன காரணம் என்னவாக இருக்கும்?.
சரி கதைக்கு உள்ள்ள்ளே ஒரு ரைட் குழம்பலாம்.. ஸார்ர்ரி கிளம்பலாம்..
கதையின் அவுட்லைன்., நகரில் ஆங்காங்கே ’ஒரேவிதமாய்!?’ சில கொலைகள் நடக்கிறது. சைக்கோ கொலைகள்னாலே அப்படித்தான் பாஸ்!. இதைப்பற்றி A.C.மாணிக்கவேல் (கே.எஸ்.ரவிக்குமார்) ஒருபுறம் விசாரிக்கிறார். இதனிடையே நகரில் ஆங்காங்கே இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதாகவும் போலீஸ் எச்சரிக்கிறது. கடைசியில் சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தார்களா இல்லையா!? - அவ்வளவுதாங்க கதை.
தெளிவா சொல்லிட்டேனா??.. ஆனா இந்த வழக்கமான அரதப்பழசான லைனில் சில இடங்களில் ஒரு ’ரெட்ரோ க்ரேட்’(RA) அம்னீஷியா’வால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் ஃப்ளாஷ்பேக்.. கதை நாயகனின் ’ஏணிப்படிகள்’ ரேஞ்சிலான ஒரு ஃப்ளாஷ்பேக்குகளை சொல்லி.. அதன் தொடர் சம்பவங்களை ஏறுக்குமாறான கால இடைவெளிகளில் செருகிவிட்டால் என்னவாகும்!? பெரும் குழப்பம்தான் மிஞ்சும்.
இந்த குழப்பம் தீர கடைசிவரை படம் பார்த்தே ஆகவேண்டும்.  ஆனால் அவ்வளவு பொறுமை யாருக்கு இருக்கிறது!. இடையிலேயே உருவாகும் ஒரு வித சலிப்புத்தன்மை கடைசியில் இயக்குனர் புத்திசாலித்தனமாக கோர்த்த விஷயங்களில் லயிக்கவிடாமல் செய்துவிடுகிறது.
கதையின் முன்பாதியில் படம் பார்ப்பவர்களை குழப்புவதற்கென்றே நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.  அதுவே படத்தின் பெரிய மைனஸ் பாய்ண்ட்டும் கூட. போதாக்குறைக்கு கதைக்குள் வரும் ஒவ்வொரு கேரக்டர்கள் மீதும் சந்தேகத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட காட்சிகள்.. உஸ்ஸ்.. ஸப்பா!!!
ரெட்டைக்கொலையை துப்பறிய வரும் கே.எஸ்.ரவிக்குமார் தடயங்களை மறைப்பது, அங்கே சுற்றியிருப்பவர்கள் பதுங்குவது.. அவரே தனது மேலதிகாரியிடம் பேசும்போது ஏதோ அவர்களே கூட்டுக்களவாணிகள் என்கிற ரேஞ்சில் வசனம் பேசுவது.. போஸ்ட்மார்ட்டம் டாக்டரையே சம்பந்தமில்லாத தோரணையில் மிரட்டி நமக்கு டாக்டர் மீதே சந்தேகத்தை வரவழைப்பது.. என வேண்டுமென்றே திரிக்கப்பட்ட காட்சிகள் ஆச்சர்யத்திற்கு பதிலாக அலுப்பையே தருகின்றன. (டாக்டர் கேரக்டருக்கு காஸ்டிங் யாருப்பா??? அவரையே ஸைக்கோ கில்லராக விட்டிருக்கலாம்.. அஷ்ட அவதானங்களிலும் பொருந்தியிருப்பார்..) 
‘பரபர’வென சுழலும் காட்சிகளின் நடுவே அனல் வீசும் ஆக்‌ஷனுடன் கனல் கண்ணன் கதையின் நாயகனாக ’பறந்தபடி’ உலாவியிருக்கும் படம். மனுஷன் ஃப்ரேமிற்குள் அடங்க மறுக்கிறார். அவரது ஆக்‌ஷனில் இருக்கும் தன்னம்பிக்கை ஜனங்களிடம் தன் முகத்தை நேரடியாக காட்டுவதில் இல்லை போலும். ஆனால் ஹீரோயினை ’ஃபாலோ மீ’ என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளை ‘குருவி’ விஜய் ரேஞ்சுக்கு தாவித்தாவி ஏறுவது போன்ற குசும்புக் காட்சிகளில் ரசிக்கவும் வைக்கிறார்.
குஷ்பு!?..  தேர்ந்த நடிப்பில்  தன் இடத்தினை நிறைவு செய்திருக்கிறார்., வெளிநாடு சென்ற அவர்  இந்தியாவிற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்படும் கால அவகாசங்களும் ஹீரோயின் - கனல் கண்ணன் நிகழ்வுகளுக்குமான கால அவகாசங்களும் ஏழாம் பொருத்தமாக ஆகிப்போவதால் நமக்கு கடைசிவரை தெளிய வைத்து தெளிய வைத்து அடிவாங்கிய அவஸ்தைதான்.
ஹீரோயின் குஷ்புவின் வளர்ப்புமகள்தான் ஹீரோயின். அவர் கனல் கண்ணனால் ஹராஸ் செய்யப்படும் வீடே குஷ்புவினுடையது அல்ல என்பதும்.., அது கனலார் தேடிவந்த இயக்குனர் லிவிங்ஸ்டன்னின் வீடு என்பதும் பிந்தைய செய்தி. தன்னை தேடி வந்து ரேப் பண்ண முயற்சிப்பவர்களைத்தான் ஹீரோயின் கொல்லுவார் என்பது கதை..எனில் லிவிங்ஸ்டன் எப்படி அவரிடம் சிக்கி கொலையுண்டார் என்பதில் தெளிவில்லை..
இன்னும் கொஞ்சம் தெளிவாக கோர்த்து.. சில ஓட்டைகளை அடைத்திருந்தால் படம் ஜெயித்திருக்கும்.
கேமரா மற்றும் இசை படத்தினை பல இடங்களில் காப்பாற்றியிருக்கின்றன.
எது எப்படியோ.. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபமாக இருக்கலாம்.. ஆனால் அதில் கதையை பிடிப்பது சிரமம்தான் இயக்குனரே..
இன்னும் நிறைய பேசலாம்.. நேரில்!

இணைய நண்பர்களின் கமெண்ட்டுக்காக இந்த பதிவு...

நன்றிகளுடன்..

கணேஷ் நாராயணஸ்வாமி

No comments:

Post a Comment