Wednesday, March 20, 2013

பரதேசி - சைக்கோவின் சந்துச்சுவர் கிறுக்கல்கள்..


சமர்ப்பணம்!. 

ஒரு தலைமுறை பட்ட அவலங்களையும் கஷ்டங்களையும் பிரதானமாக சொல்லாது, அதிலிருக்கும் அசிங்கங்களை மட்டுமே அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதற்கு, இந்த வெகுஜன ஊடகமான சினிமாவை பயன்படுத்திய பாலா மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு..

*****



 முதலில், இந்த பதிவிற்கு இந்த படத்தின் போட்டோக்களையே பயன்படுத்தக்கூட அருவருக்கும் மனநிலையில் இருக்கிறேனே  என்ற குற்ற உணர்ச்சியுடன் தொடங்குகின்றேன். 


 உங்களில் பலர் கொண்டாடுவது போல் ’பாலா’ என்பவர் யதார்த்த சினிமாவின் பிதாமகனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..  ஆனால் அதற்கான முழுத்தகுதியும் இருக்கிறதா என்பதில் எனக்கு பெருத்த சந்தேகம் இன்னமும் இருக்கிறது.  
நல்லவேளை அவன் இவனில் ”உவ்வே” சொல்லும்படியான வசனங்களும் காட்சிகளும் கொடுத்த அருவருப்பினை மறந்து அவரின் நல்ல படங்களின் பாதிப்பை மட்டுமே சுமந்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்னை SSR பங்கஜத்தில்.. 


பலருக்கும் கதை இந்நேரம் தெரிந்திருக்கும்படியாதலால் அதனை சுருங்கச் சொல்லிவிடுகிறேன். 1939வாக்கில் சாலூர் என்கிற கிராமத்தில் இருந்து வறுமையில் உழலும் மக்கள் கங்காணி ஒருவனின் வார்த்தைகளை நம்பி நெடுந்தொலைவு கடந்து  ’பச்சைமலை’ தேயிலை (வால்பாறை அருகில் நான்கு கி.மீ உள்ள) தோட்டத்திற்கு செல்கிறார்கள்.  அங்கு அவர்கள் படும் கஷ்டங்களும் அதிலிருந்து மீண்டனரா என்பது பின்பாதி பதிவு. 

இந்த படம் ஒரு சிறந்த முயற்சி.. மட்டுமல்ல கலைஞர்களின் குறிப்பாக அதர்வாவின் பாட்டியாக நடித்தவர் போன்ற அருமையான நெஞ்சில்  பதிந்து தடம் பதிக்கும் பாத்திரங்களும் கணிசமானோர் படத்தில் உண்டு!!


ஆனால் மொத்த படமும் பார்த்து முடிக்கையில் கனத்த மனதுடன் தியேட்டரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது.. ”பார்.. முழுதும் சைக்கோவாகிப்பொன பாலாவைப் பார்!!” என்று அசரீரி எனக்குள் இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.  

போதாக்குறைக்கு அவர் வியாபார தந்திரத்துடன் வெளியிட்ட ரியாலிட்டி டீஸரின் கடைசியில் அவர் அடிவாங்கிய ஆர்ட்டிஸ்டுகளின் நடிப்பில் திருப்தியாகி வக்ரத்துடன் புன்னகைக்கும் ஸ்டில்லும் என் கண்முன்னே 360 டிகிரியில் வட்டமடிக்கின்றன. 



சாலூர் கிராமத்தில் வாழும் மக்கள் என்ன பிரிவினர்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்று பார்க்கும் இன்றைய தலைமுறையினர்க்கு புரியவைக்க வேண்டும் என கொஞ்சம்கூட மெனக்கெடவில்லை. வட்டு மயிர்களோடு அலையும் ஆண்களை வைத்து நாமே நமக்கு இருக்கும் அரைகுறை அறிவின் மூலம் அவர்களின் சமூகவியல் கஷ்டங்களை  அனுமானித்துக் கொள்ளவேண்டும் போல.. 


படத்தின் முக்கிய பாத்திரமான ‘ஒட்டுப்பொறுக்கி (எ)  ’_சுப்பொறுக்கி’ மட்டுமே படத்தில் தண்டோரா அடித்து தகவல் சொல்லும் வேலைப்பார்க்கிறார். மற்றவர்கள் என்ன வேலை அய்யா செய்கிறார்கள்??  (நான் இரண்டாவதாக சொன்னதைப் போன்ற நாற்றமடிக்கும் பெயர் பதிவுகள் பாலாவின் ட்ரேட்மார்க்காக ஆகிவிட்டதுதான் வேதனை..)  இதையெல்லாம் விளக்கமாகச் சொல்ல இரண்டு காட்சிகள் போதுமே?!  (நல்ல படைப்பாளிக்கு!!). 


நான் வெகுவாக ரசித்த நாஞ்சில் நாடனின் ‘இடாலக்குடி ராசா’ கதை இங்கு முதல் பாதியில் பிணைக்கப்பட்டு  நாம் மனதில் உருவகப் படுத்தியிருந்த பாத்திரம் நம் கண் முன்னேயே பழைய இரும்புக்கடையில் நசுக்கப் படும் ஈய பாத்திரம் போல தட்டையாகி விடுகிறது.


அடுத்து  நாயகி வேதிகாவின் அங்க அசைவுகளும் நடன செய்கைகளும் கடுப்பு ரகம். ஒருவேளை வேதிகா ’டைம் மிஷின்’ல் ஏறிவந்து பாலா படங்கள் பார்த்திருப்பார் போல!! .  போதாக்குறைக்கு அரைலூசு கதாநாயகனை அந்த முழு லூசு இழுத்துச் சென்று காட்டுக் குடிசையில் வைத்து கற்பழிக்க வேறு (??) செய்கிறது . 

எல்லா படங்களிலும் நாயகியை லூஸுப்பெண்ணாகவே (அது கதைக்கு தேவையே படவில்லை என்றாலும்கூட..) வர்ணிப்பது என்ன வகையான மனநோய்??!!!. அம்மணி  ஓவர் ஆக்டிங். இதற்கும் இயக்குனரே பொறுப்பேற்க வேண்டும். 


ஜாலியாகத்தானே மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போதே.. திடீர் ஞானத்துடன் பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்லும் ’ஒட்டுப்பொறுக்கி’ அதர்வா.. செய்த வேலைக்கு கூலியை கேட்டு அடி உதைப்பட்டு அழுகிறார். தாழ்த்தப்பட்டவர்கள் வேலை செய்தால் அந்த காலத்தில் கூலி கொடுக்க மாட்டார்கள் போல!!. அப்போது வந்து சேரும் கங்காணி ஊருக்குள் வந்து  மக்களிடம் பணத்தைக் காட்டி எஸ்டேட் வேலைக்கு அழைக்கிறார். 


சாலூர் கிராம மக்களும் பணத்தாசையில் மயங்கி.. பல ஜென்மங்களாக அடிமையாக வாழப் பழகிக்கொண்ட மனநிலையுடன் அடுத்த நாளே கிளம்பிச்செல்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணைவிட்டு புலம் பெயர ஆதார காரணியாக  பணத்தாசை ஒன்று போதுமா??. ஆமாம் எனில் அந்த மக்கள் பட்ட கஷ்டங்கள் அதற்குண்டான  தண்டனை என்று கொள்ளலாமா??. 


பெருங்கூட்டமாக இடம் பெயர்ந்து தமிழ் நாட்டின் இன்னொரு மூலைக்கு அவர்கள் 48 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்.  ஒரு நாளைக்கு சராசரியாக நாற்பது கி.மீ என்று வைத்துக்கொண்டாலும்கூட 1600 கி.மீ.. பாலா சார் அவர்களை அஸ்ஸாமுக்கே கூட்டி சென்று இருக்கலாம்.  


ஒரே பொட்டல் வெளிப்பயணம்.. இதுவே ஒரு அபத்தம்!!   போகிற வழியில்  அவர்களில் ஒருவர் இறக்கும் தருவாயில் சோர்ந்து விழ.. எதோ கந்தல் துணி விழுந்து விட்டது போல் அவரை அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள்..  அவரும் கஷ்டப்பட்டு கையை அசைத்து அழைக்க.. அந்த கையை மட்டும் க்ளோஸப்பில் காட்டி அனுதாபம் தேடும் அசல் சினிமாத்தனத்தை பிரதிபலித்திருக்கிறார்.  என்னைப் பொறுத்தவரை கதையின் நாடி அந்த ஜீவனோடு  அந்த காட்சியிலேயே செத்துவிட்டது. 


அவர்கள் போய் சேருவதாக சொல்லப்படும் பச்சை மலை எஸ்டேட்டில் 1917 களிலேயே TATA நிறுவனம் தனது ப்ளாண்ட்டேஷன்களை துவங்கி  பணியாளர்களுக்கு முறையான திட்டமிடப்பட்ட சம்பள விகிதங்களை கடைபிடித்தது என்பது உபரித்தகவல். 


கடும் வெயிலில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து பழகிய இனம் ஆனைமலை தொடரின் குளிருக்கு தங்களை வழக்கப்படுத்திக் கொள்ள என்ன பாடுபட்டிருக்கும்?. இதை உணரவேண்டுமானால் திடுமென ஒரு நாள் போட்டிருக்கும் சட்டையுடன் ஊட்டிவரை போய்வாருங்கள். அப்போது உணரலாம் அந்த கஷ்டங்களை!. 

ஆங்கிலேயர்கள் கொடுங்கோலர்களாகவே சித்தரிக்கப் பட்டாலும் அதில் பல நல்லவர்களும் இருந்தனர் என்பதனை பாலா மறந்தும்கூட சொல்லவில்லை என்பது  வருத்தமே (உதாரணமாக படத்தின் மூலக்கதையின் (ரெட் டீ ) ஆசிரியர்  பி.ஹெச்.டானியல் போன்றோர்கள.. ரெட் டீ நாவலின் ஆசிரியர் பி.ஹெச்.டானியல் போன்றவர்களால்தான் பல நல்லதுகள் நிகழ்ந்தன என்பது வரலாறு. மேலும்  Carwer Marsh போன்றவர்கள் மக்களிடையே நல்ல புரிந்துணர்வுடன் பழகி நன்மதிப்பை பெற்றனர். எந்த அளவிற்கென்றால், இவர் நிர்மாணித்த கவரக்கல் எஸ்ட்டேட்டில் இவருக்கு நினவுச்சிலை அமைக்கப் படுமளவிற்கு!!  

 ( மதராஸ பட்டினம், காலாபானி, நாடோடிதென்றல் போன்ற படங்கள் அதை சொல்லியிருக்கின்றனவே என்று நினைத்து பாலா விட்டுவிட்டார் போல..)


இன்னும் சொல்வதானால் 1920களில் ஆங்கிலேயர்களால்  கட்டப்பட்ட தேயிலை தொழிலாளர்கள் குடியிருப்புகள் படத்தில் காட்டப்படுவதுபோல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கவில்லை. இன்றும் அவை புழக்கத்தில் இருப்பது நிகழ்காலச் சான்று. மலை சாதியினர் மட்டுமே தங்களை வெளிக்கொணர மறுத்து இயல்பு மாறாமல் வாழ்ந்தனர் என்பதுதான் உண்மை. 


இங்கிலாந்தில் இருக்கும் தங்கள் கம்பெனிகளுக்கு லாபம்  ஈட்ட கடுமையாக வேலை வாங்கினார்கள் என்பதும் அதை ஏவலாக ஏற்றுக்கொண்டு கங்காணிகளும் பிழைப்பு நடத்தினார்கள் என்பதும் மட்டுமே படத்தில் சொல்லப்பட்டது போல உண்மை. 


எல்லாவற்றிற்கும் மேலாக, அற்றைய நாட்களிலேயே ’அஸ்ஸாம்’ல் இருந்தது போன்ற ”Wage System"  இங்கேயும் பல இடங்களில் அமலில் இருந்தன என்பது பதிவுகளில் உள்ளது.  நான் எதற்கும் ஒருமுறை பச்சை மலை எஸ்டேட்டிற்கு ஒரு பயணம் மேற்கொண்டு வரலாம் என இருக்கிறேன்.  


இந்த ஆவணப்படத்தில் எதற்காக எதிர்க்க திராணியின்றி தன் மனைவியையே விட்டுக்கொடுக்கும் ஒரு கையாலாகாதவனின் வரலாறு?.   ஒரு தலைமுறையின் வடுக்களையோ வீரத்தினையோ சொல்லமுனையும் படம் மட்டுமே ஒரு நல்ல ஆவணப் பதிவாக இருக்க முடியும். அதை விடுத்து அதன் அழகான பக்கங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அச்சு மையினை திரட்டி எடுத்து இன்று வாழும் அவர்களின் சந்ததியினர் முகத்தில் அறைந்து அப்பிவிடும் காரியத்தை பாலா போன்ற குரூர க்ரியேட்டர்களால் மட்டுமே தர இயலும்!


வழக்கமான பாலா பட நாயகன் போல அதர்வாவும் கங்காணியை மலைவெளிகளில் உருட்டி.. மிதித்து.. சவட்டி... எடுத்து கொடூரமாக கொல்லவில்லை என்பது மட்டுமே உச்சப்பட்ச ஆறுதல்!!


மளிகை கடை வைத்து ஏமாற்றும் முஸ்லிம் பாய், மந்திரித்த தாயத்துகளை விற்கும் போலிபூசாரி (இவர் அதர்வாவிற்கு தாயத்தினை எங்கு கட்டவேண்டுமென ஆத்தா மகமாயியிடம் கூவுவது நரகளை மிதித்த அனுபவத்தை தருகிறது.,) அடுத்து, மருத்துவர் என்ற போர்வையில் கிறிஸ்தவத்தை பரப்பும் டாக்டர் என்பது போன்ற தேசிய ஒருமைப்பாடுகளும் படத்தில் உண்டு நியா…….யமாரே!! அதிலும் டாக்டரும் அவரது இங்கிலீஷ் மனைவியும் அடிக்கும் குத்தாட்டக் கூத்து பாலா படங்களுக்கான கேவல அடையாளங்கள்!


பின்னணி இசை மற்றும் இதர டெக்னிக்கல் சமாச்சாரங்களை குறித்து பேச இது சமயமல்ல என்று நினைக்கிறேன். ஆனால் இந்த பூஞ்சை பூத்தாற்போன்ற கல்ர் டோன் எதற்கு என்றுதான் எனக்கு இன்னமும் விளங்கவில்லை, அந்த அரைவட்டு மயிர் வெட்டைப் போலவே..   

இன்னும் என்னென்னவோ எழுத நினைக்கிறேன்.. ப்ச்.. ஆற்றாமை என்னை தடுக்கிறது.


அப்பாவி தியேட்டர் ரசிகன்..

கணேஷ் நாராயணஸ்வாமி

குறிப்பு: பின்னூட்டங்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்!! ம்.. ஸ்டார்ட் மூஜிக்..

Tuesday, February 26, 2013

ஹரிதாஸ் - சபாஷ்தாஸ்!

Director: G.N.R. Kumaravelan (கதையும் எழுத்தும் இவருடையதே..)

Cast: Kishore, Sneha,Prithviraj Das, Yugi Sethu, Soori, Pradeep Singh Rawat, 

Music: Vijay Antony    Lyrics: Arvind Annamalai   Cinematography: R. Rathnavelu  Editing: Raja Mohammed

சிலாகிப்பதற்கென்றே சில படங்கள் தியேட்டரில் அத்தி பூத்தாற்போல் வருவதுண்டு.. சில சமயம் அவை பூப்பது தெரியாதது போலவே காய்ப்பதும் கவனிக்கப்படாமல் போவதுண்டு.  என் கவலை, அதுபோல இந்த ஹரிதாஸ் படத்திற்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதுதான்.



 இயக்குனர் குமரவேலன்  ’நினத்தாலே இனிக்கும்’, ’யுவன் யுவதி’ (2011 மே)  படங்களுக்குபின்னர் இந்த ஹரிதாஸ்'ஐ களம் இறக்கியுள்ளார்.

இன்னுமொரு ’ஆட்டிஸம்’ குறித்த படம் என சாதாரணமாக ஒதுக்கிவிட்டு சென்றுவிட முடியாது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 88:1 என்ற விகிதத்தில் குழந்தைகள் ஆட்டிஸத்தால் பாதிக்கபடுவதைக்குறித்தும் அவர்களுக்கான சமூக விழிப்புணர்வு குறித்தும் பேசுகிறது.

ஆதி என்ற ரவுடியை என்கவுண்ட்டர் செய்ய உருவாக்கப்படும் தனிப் படைக்கு தலைமை தாங்குகிறார் ’சிவதாஸ்’ (கிஷோர்). மனைவி இல்லாத காரணத்தால் ‘ஆட்டிஸ’த்தால் பாதிக்கப்பட்ட தன் மகனை அது இன்ன வியாதி என தெரியாமலே(!?) (இது மட்டுமே கொஞ்சம் நெருடல்..) கிராமத்தில் தன் தாயின் பராமரிப்பில் விட்டுவிடுகிறார். திடுமென தாய் இறந்துவிட மகனை சுமக்கும் பொறுப்பு கூடுதலாக வந்து சேர்கிறது.

மகனை புரிந்துக்கொள்ள முயற்சிப்பவர் பின்னர் அவனது உலகத்திற்கே சென்று அவனுடன் வாழ ஆசைப்படுகிறார். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு  பள்ளியில் மகனை சேர்க்கிறார். அங்கு ஆசிரியையாக ஸ்நேகா. அரசு விதிப்படி ஒரு கார்டியன் பள்ளியில் மாணவனுடன் இருக்கலாம் என்பதால் மகனுடனே தானும் வகுப்பிலேயே அமர்ந்துக்கொள்கிறார்.

அதன் பின் வரும் நிகழ்வுகளும், மகனின் சிறப்புத்தகுதி எது என தெரிந்துக்கொள்ள அவர் எடுக்கும் சிரத்தைகளும்,  தன் போலீஸ் டீமினால் தேடப்படும் ஆதி என்கிற ரவுடியை என்ன செய்தார் என்பதும் மீதிக்கதை.

கிஷோரின் மகனாக மாஸ்டர்.ப்ரித்விராஜ் ’ஹரிதாஸ்’ கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறான். முதல் அரைமணி நேரத்திற்குப்பின் பள்ளியில் கதை நகரத்துவங்கும்போது நம்மை ஸ்க்ரீனுக்குள் இழுத்துப்போடும் இயக்குனர் படம் முடிந்த பின்னரே நம்மை வெளிவிடுகிறார்.
 முதல் நாள் பள்ளியில் சிறுவர்கள் மத்தியில் கிஷோரை வைத்துக் கொண்டு சிறுவர் பாடலை ஸ்நேகா ’நடனபாவ’த்துடன் சொல்லித்தர கூச்சப்படும் காட்சி குட்டி ஹைக்கூ தான்.  
 ஸ்நேகா நாம் எதிர்பார்த்தது போலவே ஒரு அனுதாபத்தில் ஹரியின் அம்மாவாக ஆசைப்பட அதை கிஷோர் நாகரிகமாக மறுக்கும் காட்சி அத்தனை அழகு.

பள்ளிக்காட்சிகள் படத்தின் காமெடி கலந்த ரிலாக்ஸுக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அதன் காட்சிகளை மையக்கதையுடன் இரண்டறக் கலந்திருப்பது அட்டகாசம். ரியல் பிரில்லியன்ஸ்!!. 

இயக்குனர் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சிறு வசனங்களிலும் தகவல்கள் சரியானதாக தரப்பட்டிருக்கவேண்டும் என மெனக்கெட்டிருப்பார் போல.. இரு டோல்கேட்டுகளுக்கு இடையேயான தூரம் ஐம்பது கிலோ மீட்டர் என்பது போன்ற தரவுகளும் சரி.,  கோச்’சாக வரும் இயக்குனர் ராஜ்கபூர் பேசிக் கொண்டே மாணவர்கள்  ஓடும் சுற்றுக்களை கவனிப்பதில் உள்ள சூட்சுமங்கள் ஆகட்டும் என பல இடங்களில் நகாசு வேலை பார்த்திருப்பது உண்மையிலேயே சபாஷ் போட வைக்கிறது. செலக்‌ஷன் கமிட்டியின் தலைவர் ’க்யூபை’ கையில் வைத்துக்கொண்டே திரிவதை வசனத்தால் சப்பைக் கட்டு கட்டி, அதை காட்சிப் படுத்தியது கொஞ்சம் நாடகத்தனமாகவே இருந்தாலும் அது அவசியமானதாகப் படுகிறது. 


தேவையில்லாமல் ஒரு குத்துப்பாட்டு வைத்துவிட்டாரோ என நினைத்த போது, அதையும்  போலீஸாரின் வேலைக் கஷ்டங்களை எடுத்துச்சொல்ல பயன்படுத்திக்கொண்டார். பாடல் வரிகள் நிஜமாகவே வளம் நிறைந்தவைதான். க்ளைமாக்ஸ் வில்லன் போர்ஷன் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம்.  வேறு குறைகள் சொல்லும்படி  இல்லை.

இன்னும் கொஞ்சம் சமரச முயற்சிகளை தவிர்த்திருந்தால் இதைவிட சிறப்பாக இருந்திருக்கும்.. கமர்ஷியல் சமாச்சாரம் இல்லையென்றால் இந்தக் கதை மக்களைப்போய் சேராதோ என இயக்குனர் எண்ணியிருக்கலாம்.. என்ன செய்ய  ஏ, பி, சி என அனைத்து செண்டர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய அவலமான கட்டாயத்தில்  இருக்கிறது தமிழ் சினிமா. 

அப்படி தியேட்டரில் அம்போவென விடப்பட்ட படங்களுக்கு சிறந்த உதாரணம் 'ஆரண்ய காண்டம்’.  இந்தப்படமும் அதைப்போலவே அநாதவரவாக விடப்பட்டால் அதற்கு இரண்டே காரணம்தான் இருக்கும்.. ஒன்று ’ஸ்டார் வேல்யூ’, இன்னொன்று நமது மந்தமான ரசனை. 

ரத்னவேலு ஒளிப்பதிவு கதையின் போக்கில் எந்தவிதமான இடையூறும் செய்யாது நம் கண்களின் ஃப்ரேம்களாக மட்டுமே இருந்து கடமையாற்றுகிறது.  கோர்வையான கண்களை உறுத்தாத எடிட்டிங் இவையெல்லாம் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்கள்.  

திடும் திடுமென ஜாஸ் கிடார் வந்து உதார் விடும்போது நாம், விஜய் ஆண்டனி தன் இருப்பைத் தெரிவிக்கிறார் என புரிந்துக்கொள்ளலாம். பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான்.

கமர்சியல் காரணங்களால் காவு கொடுக்காது காப்பாற்றப்படவேண்டிய படம்..

நன்றி..