Wednesday, August 15, 2012

அட்டைக்கத்தி -ஒரு மொன்னைப் பார்வை


         மதுபானக்கடையின் ஹேங் ஒவர்  தீரும் முன்னர்  ’ஒரு படம் பார்த்துவிடலாமே’ என்ற யோசனை உச்சிவெயில் நேரத்திலேயே ஊற்றெடுக்க, மாலை  தனிக்குழு கூட்டி அப்புறம் தனியாக  நிற்கிறோமே என்ற ஞானம் ஊற்றெடுக்க நேராக போய் நின்ற இடம்.. கோவை கே.ஜி.. ஸ்க்ரீன் 3.

பல நாட்களுக்கு பின்னர் நமக்கிருக்கும் ரிலையன்ஸ்* அலர்ஜியை சட்டை செய்யாது இந்த முறை தியேட்டருக்குள் நுழைந்தால், இருக்கைகள் பல இரு கைகளையும் இழந்து எண்ணை தலைகள் உரசிய
அட்டுடலுடன் காட்சியளித்தன. வெளிய என்னதான்  செக்யூரிட்டி பில்டப் கொடுத்தாலும்.. உள்ளே உரல்லதான் இடிச்சிகிட்டு இருக்கிறார்கள் பில்டப் பெருமாள்கள். (* ரிலையன்ஸ் எடுத்த புதுசுல இவங்க போட்ட ஆட்டம்.. சாமீ.. )

ஒரு வழியாக சரியான நேரத்திற்கு சற்று பின்னர் படம் துவங்கியது.

2000மாவது ஆண்டில் (கி.பி லதான்..) கதை துவங்குகிறதே அதனால் ஏதேனும் ஸ்பெஷலாக இருக்குமோ என்று கண்ணை உருட்டி எதையும் தேடவேண்டாம்.. கொஞ்சம் பழய அட்மாஸ்பியர் அவ்வளவே.

அச்சு அசலாக, அந்த நாட்களில் சென்னையின் அசலூராக இருந்து, இன்று ரியல் எஸ்டேட்  ’,’ க்களால் மத்திய சென்னைக்கு வெகு அருகில் சுமார் அறுபது கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமம்..

அங்கிருந்து தினமும் அட்டெம்ட்டுக்கு டுடோரியல் போகிறேன் என்று ’’காட்சி’’  கொடுத்துவிட்டு பஸ்ஸில் கிளம்பி  கண்ணில் கிடைக்கும் சுமாரான பெண்களை எல்லாம் காதல் வலைக்குள் வீழ்த்த பிரயத்தனம் செய்யும் சுமாரான இளைஞன் தினகரன். கடைசிவரை அவர் டுடோரியலை கண்ணில் காட்டாதது ஒரு ஆறுதல்.  கிளிஷேக்கள் தவிர்ப்பிற்காக இருக்கலாம். (புதுமுகம் தினேஷ் - நடிப்பில் அறிமுகம் என்பது கொஞ்சம்
ஆச்சரியம்தான். தம்பி நல்லா வருவே.. போகும்போது ஒரு டீ சொல்லிட்டு போ!)

எல்லா விஷயங்களிலும் ஓவர் பீலா.. கொஞ்சம் புருடா என கையாளும் பார்ட்டி மண்ணைக்கவ்வும் விஷயங்களில் கூட  வானளாவ ராக்கெட் விடும்போது ரசிக்கவைக்கிறார்.

இவர் பஸ்ஸில் வரும் பெண்களை மடக்க மேற்கொள்ளும்  அதிகப்பட்ச சாகஸமே ஃபுட்போர்டு அடிப்பதுதான். அதனையே  குலத்தொழில் போல செய்து வருகிறார்.

அதிலும் சில பல இடர்கள்.  திலும் வந்து சிக்குகிறார் உருட்டும் விழிகளுடன், தாவணியில், இயல்பான அவசியமான அழகுடன் பள்ளி மாணவி பூர்ணிமா.
பூரணியிடம் காதலை இன்றாவது சொல்லிவிடுவேன் என்று கிளம்பி பக்கதில் சென்றதும் அவள் ’அண்ணா’ என்று அழைக்க,  வெறுத்துப்போய் நிற்பவன் கொஞ்சம் வினாடிகளிலே டேக் இட் ஈஸி என கிளம்பியவுடன் அடுத்து தன்னை லுக்கு விடும் பெண்ணை டார்கெட் செய்ய..  மனசாட்சி மணியடிக்கிறது. அதனால் வாலண்டியராக சோகத்தை வரவழைக்க முயற்சி செய்து, தோற்றுப்போய், சிரித்து,  நான் ’இப்படி’த்தான் என நம்மிடம் சொல்லிவிடுகிறான்.

படத்திற்கு ஏன்  ’அட்டகத்தி’  என யோசிப்பவர்களுக்கு இயக்குனர் வைத்திருக்கும் ஒரு மொக்கையான காரணத்தை உங்களிடம் சொல்லி சுவாரஸ்யத்தை குலைக்க விரும்பவில்லை.

அதன் பின் ஒரே போல் உடையணிந்து வேலைக்கு செல்லும்  நதியா திவ்யாக்களை தன் அடுத்த வலைவீச்சில் இழுத்துபோட கிளம்புகிறார். அவர்களில் ஒருவரை மனமார(ற) தேர்வுசெய்து அவர்கள் ஊரிலேயே சொல்லப்போய் அடிவாங்கி பிழைத்து ஓடி வருகிறார். அப்படிஓடி வரும் வேகத்திலேயே உள்ளூர் கராத்தே மாஸ்டரிடம் சேர்ந்து  அவரிடம் பயிற்சி எடுக்கும் காட்சி அதகளம்.  அப்புறம் அங்கிருந்தும் பேக் அப். 

கடைசியில் ஒருவழியாக இருந்த ஒரு ஆங்கிலத்தை பாஸ் செய்து கல்லூரியில் சேர்ந்து ரூட்டு தல ஆகிறார்.

அங்கே மீண்டும் பூர்ணிமாவே வந்து நிற்க அதிர்ச்சி, சந்தொஷம், ஆச்சர்யம்.  நமக்கும்தான். அப்புறம்  அவருக்கும் பூர்ணிமாவுக்கும் காதல் வந்ததா இல்லையா என்பது மீதிப்படம். 


நாயகனின் அப்பா, அம்மா, அண்ணன் நண்பர்கள் என அனத்துக் பாத்திரங்களும் யதார்த்ததை வழியச்சுமந்து இருக்கின்றன. அளவு, அழகு.

இயக்குனர் யாரும் எதிர்பாராத விஷயங்களையே காட்சிகோர்வையாக வைக்கவேண்டுமென மெனக்கெட்டு அமைத்திருப்பார் போல.  படம் முன்பாதி ஜெட்டு போல் கிளம்பி  ஏரோப்ளேனாக மாறி கடைசியில் நம் பொறுமையை சோதித்து கட்டைவண்டியாக வந்து சேர்கிறது.

புனைவுகளும், சினிமாத்தனமும் இல்லாத அருமையான உணர்ச்சி பதிவுகள்,  விடலைக்காதல், எல்லாவற்றையும் அழகாய் சொன்ன இயக்குனர் கதைய ட்விஸ்ட்டு பண்ணுகிறேன் பேர்வழி என ஹீரோவை

ஒருதலையாக காதலிக்கும் பெண்ணை அயிட்டம் ரேஞ்சுக்கு உரசவிட்டு.. (அயிட்டமே இப்படி ஓசியில் உரசுமா? என அனுபவசாலிகள் பின்னூட்டம் போட்டா தேவலாம்..) குழப்பியடித்து மட்டுமல்லாது
அதன் பின்னான காட்சிக்கோர்வைகளை காற்றில்  விட்டுவிட்டார்.

கல்யாணமாகி இன்று ஓரிரு குழந்தைகளுக்கு அப்பனாகியிருக்கும் ஆளா நீங்கள்.. அப்படியென்றால் இந்த ஹீரொவின் செயல்களின் சாயல் உங்களிடம் கொஞ்சமேனும் இருக்கும்.

தலைப்புக்கு நியாயம் செய்தாலும், கிளைமாக்ஸை இன்னும் கவனமாக செதுக்கியிருந்தால் ஒரு சூப்பர் ’சூரிக்கத்தி’ கிடைத்திருக்கும்.

பின்னணி இசை ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். (கம்ப்யூட்டரில் இசைக்கும் காலத்திலும் பின்னணி இசை என்பது சரிதானா? ).  'ஆசை ஒர் புல்வெளி , 'ஆடி போனா ஆவணி' பாடல்கள் நன்று.  நடுக்கடலிலே.. கானா தாளம் போடவைக்கும்.

தாராளமாய் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.. ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது .

Monday, August 6, 2012

மதுபானக்கடை - குப்பை அலசல்


ஒரு குவாட்டர் அடிக்காம தியேட்டருக்குள்ள போனா அப்புறம் உங்க உசுருக்கு உத்திரவாதமில்ல..

ரொம்ப ராவா இருக்கு சார்..     படத்த சொன்னேன்.

 அட! டைட்டில வித்தியாசமா போடுறானுங்களேன்னு நிமிந்து ஒக்காந்தேன் சார்.. இடுப்பு புடிச்சுகிச்சு.. பக்கத்து சீட்ல உள்ளவரு, நான் என்னமோ ஒரு ஆர்வக்கோளாறு மாதிரியும்.. ஆசப்பட்டு நுனி சீட்டுல ஒக்காந்து படம் பாக்குற மாதிரியும் கடுப்புல என்னை பாத்துட்டே இருந்தாரு.. அத விடுங்க சார்..

கதையதான் தேடாதீங்கன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாங்க.. ஆனா என்ன சொல்ல வர்றாங்கன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்லன்றேன்..

கதயத்தான் சொல்லவரலியே.. தண்டக்கருமாந்திரம் காதலயாவது உருப்படியா சொன்னானுங்களா..

பல நேரங்கள்ல மூஜிக் போடுறவரு போடனுமா வேண்டாமான்னு கன்ஃப்யுஷன்ல போடாம விட்டது, படம் நீளமா இழுக்குதோன்னு ஃபீல் பண்ண வெக்குது..


 கலந்துக்கட்டி கில்லி மாதிரி சொல்ல வேண்டிய லொக்கேஷன்ல படம் நொண்டியடிச்சிகிட்டு இருக்கு.

ஆரம்பத்துல ஊரவுட்டு ஓடிப்போற காதல் சோடிக்கு பின்னாடி டி பெருசா ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு பதற வெச்சுட்டு படத்த ஆரம்பிச்சு என்னன்னமோ சொல்ல வந்து எதயுமே முழுசா சொல்லாம போயிட்டாங்க..

அச்சு அசலா பல குடிமகன்களை காட்டி படம் முழுக்க நெரப்பி வெச்சிருக்காங்க. ஆனா அதுனாலயே ரசிகர்களுக்கு யார்மேல ஏறி படத்துக்குள்ள போறதுன்ற கொழப்பம் தீர்றதுக்குள்ள படம் பொசுக்குன்னு முடிஞ்சு போயிடுது.

 நல்ல விஷயம் நெறய சொல்லியிருக்காங்க.. ஆனா ஒரு கோர்வையா  சொல்லாதது சீக்கு விழுந்த கோழித்தல மாதிரி அப்படி இப்படின்னு ஆடிக்கிட்டே இருக்கு.

சரியா சொல்லனும்னா பெரிய குப்பத்தொட்டிக்குள்ள பிச்சக்காரன ஏத்திவிட்டுபுட்டு ஏதாவது எனக்கும் வீசுறான்னு கெஞ்சிட்டு கீழ நின்னா வந்து விழுமே...   அது மாதிரிதான் நாமளும் ஸ்க்ரீன பாத்துகிட்டு இருக்கோனும்..தெவப்பட்டது வரும்போது பிடிச்சுக்கனும்..

கேமரா நல்லாருக்கே சார்? ஸோ வாட்.. அத எங்க கொண்டுபோயி வெச்சுக்கறது..  நெறயா டயாலாக் சூப்பரா இருக்கே சார்? அத வேணா தஞ்சாவூர் கல்வெட்டுல குறிச்சு வெச்சுக்கலாம் சார்..

ஆனா ஒன்னு சார்,  ஆ.. ஊன்னா டர்ர் புர்ர்ன்னு டெர்ரரா மூஜிக் போட்டு என்னவோ பயங்கரமா நடக்கபோறா மாதிரி கிலிய கெளப்பிவிட்டுட்டு.. பொளக்கட்டீர்னு சீனை மொக்கயா முடிச்சுடுறாங்கோ.. 

கெவுர்மெண்ட்ட்ட நெறய கேள்வி கேக்குறாங்கோ.. கம்யூனிசம் சோஷலிசமெல்லாம் பேசுறாங்கோ.. ஆனா மலப்பாம்புமாதிரி எடுக்கப்படவேண்டிய படம் நத்தை மாதிரி நம நமன்னு ஆயிடுது.

போதும் சார் இதுக்குமேல எனக்கு பொறுமையில்ல.. 

இன்னும் வெலாவரியா வசனம் முதற்கொண்டு தெரியனும்னா கீழே உள்ள லின்க்க க்ளிக்குங்கோ.. தெரிஞ்சுக்கலாம்..

http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html    

 நன்றி: சென்னிமலையார்


மச்சி இன்னொரு கோட்டர் சொல்லேன்.... 



ப்ளாக்லயாவது சொல்லேன்..  

Saturday, June 2, 2012

மனம் கொத்தி பறவை - Olympia Movies


கிச்சு கிச்சு மூட்டும் இறகுகள்..


டிஜிட்டல் படங்களின் நான்-ஸ்டாப் வருகைக்கு பின்னர் பலமுறை பலமாக பத்து இன்ச் ரிவிட்டுகளை பின்னால் வாங்கிய அனுபவங்களால்,  பறவை எதுவானாலும் இரை நாம் ஆகி விடக்கூடாது என்கிற மேலான சிந்தனையின் வெளிப்பாடாக,  சமீப காலமாக (சுமார் ஒன்றரை வாரமாக..)   மொக்கை ஃபிலிம் க்ளப்பு (@athisha @narain @kingvishwa @lucky @louiscrandel... ) நண்பர்களிடம்கூட கூட்டு, பொரியல் என எதுவும் வெக்காம சுற்றிக்கொண்டிருந்தேன். இந்நிலையில் நேற்று திடீரென ஞானம் பெற்று, ”இப்படி கடமை உணர்ச்சி செத்துபோயி.. தியேட்டருக்கு போகாமலிருந்தா என்னவாகும்..”  தங்க தமிழ் திரை உலகை யார்தான் காப்பாற்றுவது?”  என என் விரதத்தை கைவிட்டு தஞ்சமடைந்த இடம்.. கோவை காவேரி திரை அரங்கம்..  
                                                (ஏ.சி போட்டாமட்டும் போதாது..  மூட்டை பூச்சி மருந்தும் போடுங்கப்பா.    நைட்டு ஷோ டைம் 10:10pm லிருந்து 9.40க்கு மாத்திட்டாங்களாம்.. )

  நமக்கு மட்டும் லேட் ஷொ ஆகிடுச்சே.. என்று அவசரமாக டிக்கட் வாங்கி..   வைகுண்டத்துக்கே டிக்கட்டு வாங்கும் வேகத்தில் மூன்றவது மாடிக்கு படியேறி மூச்சு முட்டும் வேகத்துல உள்ளே வலதுக்காலை வெச்சு நுழைந்தேன்..

         நான் நுழைவதற்குள் ரசிகர்கள் கதைக்குள் நுழைந்து இருப்பார்கள் போல..  கொத்து கொத்தாய் கோரஸாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். 

கதை ................................................................?                

       அப்படியெல்லாம் ஒன்றும் புதிதாக தென்படவில்லை.. காதலும் காதலைச்சார்ந்த மரியாதைகளின் கலவையான சமாச்சாரம்தான் படத்தின் கதைக்களம் .  
           கட்டிட காண்டிராக்டர் இளவரசுவின் மகன் கார்த்திகேயன்
எதிர்வீட்டில் உள்ள வசதி படைத்த முரட்டு அப்பாவையும் ,கடா மீசை சித்தப்பாக்களையும் கொண்ட, தாயை சிறுவயதில் இழந்த ரேவதியை காதலிக்கத்துவங்குகிறார்.  பன்னெடுங்காலமாக தமிழ் படங்களில் வருவது போல திடீரென்று ரேவதிக்கும் இன்னொரு முரட்டுபயலுக்கு நிச்சயம் செய்கிறார்கள்.. 
          இப்போதுதான் சிவ கார்த்...(பேர சுருக்கச்சொல்லனும்..) ..திகேயனுக்கு காதல் பொத்துக்கொண்டுவர கோவில் மொட்டைமாடியில் தன் ஒருதலைக்காதலை காதலி ரேவதியிடம் (புதுமுகம்.. ஆத்மியா..?  ) சொல்லி,  ஒரு எதிலும் சேராத மந்தமான ரியாக்‌ஷனை பதிலாக வாங்குகிறார். 
  
         அப்புறம் திடீரென வரும் பாம்பே பாய்ஸ் (நந்து, சாம்ஸ்) சிவகார்த்தியின் உள்ளூர் நண்பர் சூரி அண்ட் கோவின் தகவல் உபயத்தால் ஒரு புது உபாயத்துடன்(?) மப்படித்து மட்டையாகிப்போன கார்த்திகெயனையும்.. ஆத்மியாவையும் கடத்திச்செல்ல அப்புறம் நடப்பதெல்லாம்...  உங்களுக்கே புரிந்திருக்கும். 


படம் எப்படி?

        உங்களின் அதிமேதாவித்தனத்தை அஞ்சு ரூவா கோணிப்பையில் வைத்து அக்குளுக்குள் சுருட்டிக்கொண்டு தியேட்டருக்குள் போனால்..  தாராளமாய் போய் ஏராளமாய் சிரித்துவிட்டு வரலாம்.

           இடை இடையே ’கொல பண்ண ஆள் ஈசியா கெடச்சுடறானுக கொத்தனார் வேலைக்குத்தான் நாயா அலைய வேண்டிகெடக்கு’  போன்ற அர்த்தபுஷ்டியான!!!  வ்சனங்களும் தென்படலாம்.

           சிங்கம்புலி, சூரி கூட்டணியினரின் காமெடி முன்பாதி நகர்வுக்கு பயன்படுவது போல..  பின் பாதி காதல்காட்சிகள் கவனம் ஈர்ப்பது இல்லை. இதற்கு ஆத்மியாவின் ஆன்மா இல்லாத ரியாக்‌ஷன்கள் காரணமா? என சி.பி.ஐ வைத்துதான் விசாரிக்க வேண்டும் 
                                    (புண்ணாக்கு ஊழலுக்கெல்லாம் சி.பிஐ வைக்கும்போது.. இதுக்கெல்லாம் வெச்சா குடியா முழுகிடும்??) 
      
       மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாது தியேட்டருக்குள் போனால்.. ’கொஸாக்ஸி பசப்புகல்’ பார்த்த பரவசம் கிடைக்கும்.. 

       காமெடிக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்..    கதைக்கு இன்னும் வினைக்கெட்டு இருக்கலாம். (’வினைக்கெட்டு’ Courtesy by: புதிய தலைமுறை TV)

நடிப்பு:
       
        சிவகார்த்திகேயனை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.. அல்லது அவரது அவுட்புட்டே அவ்வளவுதானா..??  
       
         ’மறுபடியும் ஹீரோவா நடிக்கனும்னா அவர் தன் முகத்தில் பஞ்ச ஸ்தானத்தில் அலகு குத்தி, குத்தின அலகுகள் தெரிச்சுப் போகுமளவுக்கு தேர் இழுத்தால் மட்டுமே முக உணர்ச்சிகளில் கொஞ்சமேனும் முதிர்ச்சி தெரிய வரும்’ னு காசிமேடு வெட்னரி டாக்டர் அட்வைசியிருக்கார். 

         ஆத்மியா..  ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..  ரெண்டு பாட்டு ஒரு அய்ட்டம் ஸாங்குன்னு நெனச்சிட்டு வந்த அம்மினிய நடிக்கச்சொல்லி நச்சரிச்சிருப்பாங்க போலிருக்கு.. 

         இமானின் பாடல்கள் பருவாயில்லை.. பிண்ணனி இசை அவ்வப்போது முன்னணியில் வந்து இம்சிக்கிறது. மற்றபடி நேர்த்தி(கடன்).

  அப்புறம்....     எல்லாம் சுபம்! 


ட்ரெயிலர இங்க கொத்துங்க.. 
http://www.cinemaindya.com/south-movies/manam-kothi-paravai



Sunday, December 25, 2011

சிறுகதை

                                                           
அம்மாவுக்கு எல்லாம் தெரியும்
   “டேய், சின்னவனே, மேல போயி சம்முகண்ணன் வீட்டு மாதுளை செடியில இருந்து கொழுந்தா பாத்து அஞ்சாறு கிளை ஒடிச்சுட்டு வாடா”, வயிற்றுவலி காரணம் காட்டி அன்று பள்ளிக்கு மட்டம் போட்டிருந்த எனக்கு அம்மா சொல்லும் வேலை சலிப்பை உண்டாக்கியது. ‘புதிதாய் வாங்கிய ஆட்டுக்குட்டிக்குத்தான் பறித்துவரச்சொல்கிறாளோ?’ என்று ஓர் நொடி தோன்ற விருட்டென்று கிளம்பினேன்.
     மலைக்கிராமம் எங்கள் ஊர். ‘பக்கம்..’ ‘தூரம்..’ என்பதெல்லாம் கிடையாது, மேலே.. கீழே என்பதே பெரும்பான்மை உபயோகம். நான் பறித்து வந்து கொடுத்ததில் கொழுந்தாக ஆய்ந்து அம்மா பக்குவமாக அரைப்பதை குத்துக்காலிட்டு அருகில் இருந்து கவனித்தேன்,
 ”கொஞ்சம் சக்கரை போடும்மா.. ஆடு நல்லா சாப்பிடும்” என் அறிவிற்கெட்டிய ஆலோசனை அவளை மெல்ல சிரிக்க வைத்தது. நான் என் அம்மாவை அவள் தூங்கி பார்த்தது அபூர்வம் என்றால் அவள் சிரித்து பார்த்தது அதனினும் அரிதுதான். மாடுகள், கோழி, இப்போது ஆடு மற்றும் எப்போதும் அப்பா என்று எல்லோருக்குமான தேவைகளே அவள் உலகம் என்றானப்பின் சிரிப்பினை சிக்கனப்படுத்த பழகிவிட்டாள்.
“இது ஆட்டுக்கில்லைடா, உனக்குத்தான்.. சின்ன சின்னதா ரெண்டு உருண்டை மட்டும் சாப்பிட்டு பாரு அப்புறம் உன் வயத்துவலி காணாமப்போயிடும்”, சதியினை புரிந்துக்கொண்டு நான் ஊரின் எல்லைக்கு தப்பி வந்து ஒற்றைக்கண்ணால் குறிபார்த்து உடும்பின் மீது கல்லெறிய துவங்கும்போதுதான் அம்மா நான் காணாததை உணர்ந்து என்னை தேட துவங்கியிருப்பாள்.
மாலை நான் வீடு திரும்பியபொழுது அந்த ஆட்டுக்குட்டி மீதமான மாதுளைத்தழைகளை தின்று முடித்து மென்று அசை போட்டுக்கொண்டிருந்தது. ‘‘சொல்பேச்சு கேட்க நீயாவது இருக்கிறாயே’’ என்று என் அம்மா ஆசுவாசப்பட்டிருப்பாள் போல.
ஊருக்குள் மருத்துவமனை கிடையாது, அருகில் உள்ள மின்வாரிய முகாமிற்கு வாரம் ஒருமுறை  வரும் ‘டாக்’டர்தான் சினிமாவிலன்றி நாங்கள் பார்த்திருந்த டாக்டர். வெளியே அவரது வண்டியில் கண்ணாடி ஜன்னலுக்குள் காத்திருக்கும் அவர் நாயும், மருத்தவமனைக்கு உள்ளே அவரும் எழுப்பும் சப்தங்களுக்குள் வேறுபாடு கண்டறிதல் கடினம்.  அவர் கைராசிக்காரரா என்று தெரியாது ஆனால் ரகம் பிரிக்க இயலாத ஒரே மாதிரியான த’னா/அ’னா மாத்திரைகளை மட்டுமே எல்லோருக்கும் தருவதனால் பத்திரிக்கைகளில் நான் படிக்கும் ‘டாக்டர்’ ஜோக்குகளில் அவரை பொருத்திப்பார்ப்பது எனக்கு சௌகர்ய மாகிப்போனது.
சில சமயம் அம்மா கொடுக்கும் அதிரடி கைவைத்தியத்திற்கு இந்த டாக்டரின் மாத்திரைகளே பரவாயில்லை என்று தோன்றும். ஒருநாள் அம்மாவின் மென்முறை வைத்தியத்தில் புளங்காகிதம் அடைந்து ‘அம்மா நீ எப்படிம்மா இவ்வளவு மருந்து தெரிஞ்சு வச்சுருக்க?..’ என்றபோது ‘‘எல்லாம் எங்கம்மா சொல்லிக்கொடுத்ததுதான்டா’’ என்று சுருக்கமாக பதில் சொன்னாள்.காலில் சேற்றுப்புண் என்றால் தேங்காய் எண்ணையும் மஞ்சளும் ஒருசேர குழப்பி பூசிவிடுவாள் மெல்லிய எரிச்சல்தான் எதிர்வினை, தப்பித்துவிடலாம். ஆனால் அடிபட்டகாயமென்றால் அம்மாடி! அதே தேங்காய் எண்ணையினை அடுப்பில் காயவைத்து கொதிக்க கொதிக்க உப்பு வைத்து கட்டிய சிறு துணி உருண்டையினை முக்கி எடுத்து காயத்தின் மீது வைக்கையில் ‘ஆ’ வென்ற அலறலுடன்தான் காட்சி முடியும்.
பனிவிழும் மாலை நேரங்களில் யானைகள் ஊருக்குள் நகர்வலம் வருவது குறைவு. அது போன்ற  நாட்களில் பக்கத்துவீட்டு பெண்களுடன் அம்மா பேசிக்கொண்டிருக்கையில் அவள் முந்தானையில் எனக்கு முக்காடு போட்டு கதகதப்பாய் அவள் மடியில் இருத்தி வைத்திருக்கும் சுகத்திற்கு இணையாக இன்குபேட்டர் சாதனம் இதுவரை பெட்டராக கண்டுபிடிக்கப்படவில்லை என்று உளமாற நம்புவோமாக.
 மருந்திற்கும் பள்ளியின் பக்கம் பார்த்திராத அவளுக்குள் ‘எப்படி இத்தனை நுணுக்கங்கள் பொதிந்த டி.என்.ஏ  சூத்திரம்?’ என்பது என் ஏழாம் அறிவிற்கு இன்றுவரை புரிபடவேயில்லை.
“எல்லாத்துக்கும் உனக்கு மருந்து தெரியுமாம்மா?” என்ற என் தீராத ஆச்சர்யத்திற்கும் எப்போதும் சின்னதாய் சிரிப்பொன்றே பதிலாய் கிடைக்கும். அப்பா ஊரில் உள்ளவர்களுக்கு சுளுக்கெடுப்பார். நிஜமாகத்தான், அவர் காட்டில் உழன்ற நேரம் போக மாலைநேரங்களில் ஊரில் உள்ளவர்களுக்கு சுளுக்கெடுப்பதில் தன் மூர்க்கத்தனத்தினை வடிகாலிட்டுக்கொள்வார். அதற்குப்பின் அம்மா மணலை வறுத்து துணியில் சிறு மூட்டையாக வைத்து சூடாக ஒத்தடம் கொடுக்கச்செய்வாள். அவர்களும் மறுநாள் வந்து “இப்போ பரவாயில்லம்மா” என்று சுகம் உரைக்கையில் நான் அம்மாவின் உப்பு வைத்தியம்தான் குணப்படுத்தியதாய் நம்பினேன்.
நான் பள்ளி செல்ல துவங்காத நாட்களில் ஒரு நாள் அம்மா குளித்துக்கொண்டிருக்கையில் என்னை அழைத்து அருகில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த நீரினை எடுத்து வாளியில் ஊற்றச்சொன்னதை தவறாக புரிந்து அவள் மீதே ஊற்றித்தொலைகத்துவிட்டேன். அம்மா அலற… பயத்தில் நான் வீட்டை விட்டு ஓடிவந்து மாலைவரை அப்பா வரும் வழியில் காத்திருந்தேன். மாலை அவர் துணையுடன் வீடு வந்து சேர்ந்தப்பின் அம்மாவை மெல்ல எட்டிப்பார்த்து அவளின் சிரிப்பினை கண்டுதான் விபரீதம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.
நான் நகர வாழ்க்கைக்கு ஆட்பட்டப்பின்னர் “ஏம்மா அந்த காட்டுலயிருந்து கஷ்டப்படுற.. என்கூட வந்திடும்மா” என்று பலமுறை அழைத்தும் “உங்கப்பாவை யாராவது பாத்துக்கணும்டா, என்னை திட்டிக்கிட்டாவது என்கையால சாப்பிட்டாத்தான் அவருக்கு நிம்மதி” என்று ஒரே மூச்சில் மறுத்துவிட்டாள்.
நேற்று ஊரிலிருந்து செல்போனிற்கு அழைப்பு  வந்தது.  ”தம்பி.. சுப்புதான பேசுறது.. நான் செல்வமணியண்ணன் பேசுறேன், உங்கம்மாவிற்கு சீரியஸ்.. உடனே கிளம்பி வாப்பா..” என்று அவர் முடிக்கும் முன்னர் யாரோ போனை அவரிடமிருந்து பிடுங்கி “டேய் தம்பி.. அதெல்லாமில்ல.. அவங்க இறந்துட்டாங்க.. நீ சீக்கிரம் கிளம்பி வாப்பா. குளிர் டைம்தான் ‘பாடி’ காலைலவரை தாங்கும், வெச்சிருக்கோம் வா” என்று கொச்சையாய் சொல்லிய வார்த்தைகள் மூளைக்குள் உறைக்க உணர்வுகள் சில்லிட்டுப்போனது.
தடுமாறி ஏதேதொ வண்டிகளை பிடித்து மாலை ஊர் சென்று சேர்ந்தேன்.  என் வாழ்வின் மிக கொடிய நீண்ட பயணமாக அது மாறிப்போனது. வீட்டினை அடைந்தபொழுது அக்காள்தான் என்னை ஆற்றாமையுடன் பார்த்து அரற்றலுடன் அழத்துவங்கினாள். “எப்படிக்கா?.. என்னாச்சு?” குளிரையும் மீறி வார்த்தைகள் துண்டுத் துண்டாய் வெளிவந்தது.   “அப்பாக்கூட சின்ன சண்டைடா. எப்பவும் போல அழுதுட்டு ‘நான் செத்தாத்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’னு சொல்லிட்டு வெளிய போய் உக்காந்து இருந்தாங்க.. அப்புறம் காணோமின்னு தேடும்போது… ”  சொல்லிக்கொண்டே வீட்டின் பின்புறம் அழைத்துச்சென்று காட்டினாள்.
 வீட்டிற்கு பின்புறம் இருந்த பெரிய எருக்கஞ்செடியில் இருந்து நிறைய இலைகள் உடைத்து எடுக்கப்பட்டு அதன் பால் எல்லாம் ஒரு தொட்டாங்குச்சியில் சேகரித்து பாதி குடித்த நிலையில் மீதம் கொஞ்சம் வைக்கப்பட்டிருந்தது. “மயங்கி விழுந்தாங்கன்னு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போகும்போதே எல்லாம் முடிஞ்சுடுச்சுடா” என்று முடித்தாள். நான் இன்னும் அழத்துவங்கியிருக்கவில்லை.
எனக்குத்தான் தெரியுமே… என் அம்மாவின் கைமருந்தின் பக்குவம். நிரந்தர மனநிம்மதிக்கு சரியான கைவசமுள்ள மருந்து எருக்கம்பால்’தான் என்று அவள் முடிவு செய்திருக்கலாம். ஆனால் ஒரு மருந்தினை தயாரிக்க அவள் எவ்வளவு சிரத்தையுடன் செயல்படுவாள் என்பதை நேரில் இருந்து அதிகம் பார்த்தவன் நான்தானே.
“தம்பி.. உங்கண்ணனுக்கு தகவல் சொல்ல முடியல.. அதனால நீயே கொள்ளி வச்சுடு” என்று எரியும் கட்டை என் கையில் கொடுக்கப்பட்டு பணிக்கப்பட்டேன். அன்று வெறும் சுடுநீருக்கே அம்மா அலறிய காட்சி கண்முன்னர் விரிந்து நான் பெருங்குரலில் அழுவதைத்தான் என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்த முறை நான் வீடு திரும்புகையில் அம்மா புன் சிரிப்புடன் காத்திருக்கப்போவது இல்லை. இழப்பு என் மீது தீராக்காயங்களை உண்டாக்க துவங்கியிருந்த்து.
*******

Saturday, December 3, 2011

சசிகுமரின் ’போராளி‘ - திரைவிமர்சனம்

சமுத்திரகனியின் போராளி... மிகப்பெரிய தர்ம நியாய ங்களுக்காக போராடுவார் என்ற மிதமிஞ்சிய கற்பனைகளை கடாசி விட்டு முழுக்கவே அக்மார்க் சசிக்குமாரின் படத்தினை பார்க்கவே  தியேட்டருக்கு செல்லலாம்.


 நகரத்தில் வசிக்கும்  நண்பன் கஞ்சா கருப்புவின் வீட்டில் அவரது பாணியிலே தஞ்சம் புகும் சசிக்குமார் அல்லரி (குறும்பு) நரேஷ் சகாவினர் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச்சேர்ந்து பங்க் ஓனர் அண்ணாச்சியின் அபிமானத்துடன் அங்கேயே சுயதொழில் தொடங்கி... என்று ஸ்முத்தாக  செல்லும் திரைக்கதை... இவர்களை ஒரு கும்பல் தேடிவரும்போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்க துவங்குகிறது. யார் இந்த கும்பல் என யோசிக்கவைத்து இடைவரும் இடைவேளைக்குப்பின், திரைக்கதை
ஸுப்பர் ஸானிக் வேகம்தான்...

‘பிரச்சினை எதுவானாலும் முடிவை நான்தான் எடுப்பேன்‘ என்னும்  ஹவுஸ் ஓனர், கொஞ்சி‘க்‘கொஞ்சி பேசும் குடிகாரர் பேச்சிலர்,  சாந்தியை கட்டிக்கொண்டு ஷாந்தியின்றி தவிக்கும் ‘படவா’ கோபி, மற்றும் படம் நெடுக கஞ்சா கருப்பு, பின்பாதியில் ‘பரோட்டா’ சூரி என அனைவரும் காமெடியில் தோரணம் கட்டி கதகளி ஆடியிருக்கிறார்கள்.


மறுத்தும் சிபாரிசுகளுடன் வரும் ஸ்வாதியின் காதலை ஏற்றுக்கொள்வதற்கு நாயகனுக்கு காரணங்கள் பெரிதாக எதுவும்  தேவைப்படவில்லைதான்... ஆனால் அதற்கான ஞாயங்கள் மிகச்சரியாகவே கையாளப்பட்டிருக்கின்றன. குறைசொல்ல வைக்காத பாத்திரபடைப்புகள். சமுக அக்கறையுடன் கூடிய யதார்த்தங்களை இறைத்துப்போடும் பளிச்சென்ற வசனங்கள்  என கச்சிதமான படைப்பு.

சுந்தர் C பாபுவின் இசையும் தன் கடமையாற்றியுள்ளது.


விலாநோகும்படியான  பெருங்குரலெடுத்த சிரிப்புக்களும்,  தியேட்டரின் கோரஸான கைத்தட்டல்களும்,  போராளியின் வெற்றிக்குறிக்கான அறிகுறிகள்.