Thursday, February 5, 2015

என்னை அறிந்தால்.. திரைப்பார்வை


கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம்.. வேட்டையாடு விளையாடு.. 

இருங்க தப்பா சொல்லிட்டேன்.. படம் பேரு காக்க காக்க.. ச்சே.. அதுவும் தப்பு என்னை அறிந்தால்'தான் சரி.. பட் ஏன் இவ்ளோ குழப்பம்..?! .


வேட்டையாடு விளையாடுல 'பார்த்த முதல் நாளில்' பாட்டை கட் பண்ணிட்டு கொஞ்சம் காக்க காக்க'வுல இருந்து சில எபிஸோட்ஸ தூக்கி சொருகுனாப்ல இருந்துச்சு. 

இதுல அப்க்ரேட் என்னன்னா.. 
தி ஒன் அண்ட் ஒன்லி அஜீத்.. தல வெளுத்து வாங்குறார். ஆக்‌ஷன்லயும், சால்ட் அண்டு பெப்பர்லயும்..
 
அப்பப்ப 48 FRAMES' ல WIDE SHOT'ல ஒவ்வொரு கெட்டப் மாத்தும்போதும் ஒரு Walk கொடுத்து அப்ளாஸ் அள்ளுறார். அவர் ரசிக சிகாமணிகள் விசிலடிக்க இதப்போல கணிசமான சந்தர்ப்பங்கள் உண்டு. 

ஆனா வில்லன் ஆட்கள பொரட்டி எடுத்து உக்கிரம் அடையும்போது வக்கிரமா கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசுறார்.. ம்யூட்லதான்னாலும் அதுக்கும் கைதட்டுற இளைய சமுதாயத்தை நெனச்ச்ச்சா...

சரி கதைக்கு வருவோம்..  ஆன் தி வே ஆக்‌ஷன்ல நாட்டிய 'பேரொளி' திரிஷாவ அவசர உதவியா டெலிவரிக்கு  ஹாஸ்பிடல்ல விடுறார். அப்புறம் அவங்க கைக்குழந்தையோட டிவொர்ஸ் ஆய்ட்டாங்கன்னதும் அவங்க மேல கல்யாண வயப்படுறார்.
  
ஒரு நன்னாள் காலைல கல்யாணம்னு இருக்கசொல்ல முந்தய நாள் ராத்திரில யாரொ வில்லன் ஒருத்தன்  திரிஷாவ போட்டு தள்ள.. தல தள்ளாடிப்போய்டுறார். 
அப்புறம் அந்த குழந்தைக்காகவே வாழ்ந்தாரா..? இல்ல திரிஷா இல்லன்னா அனுஷ்கான்னு ஐக்கியமானாரான்றது மீதி கதை!

அட்டகாசமான வில்லனா அருண்விஜய். வந்த வேலைய சொந்த வேலையா நெனச்சு களமாடியிருக்கார். 

அவருக்கு ஜோடியா பார்வதி நாயர். அவங்களும் நடமாடியிருக்காங்க.

அஜித் நிறைய உழைச்சிருக்கார். பர்ஃபாமன்ஸ் உச்சம். அதுலயும் வாய்ஸ் டப்பிங் செம்ம ஸ்பெஷல். மாடுலேஷன் பிட்ச் மாறாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு இருப்பார் போல.

படத்தின் எல்லா ஃப்ரேமும் அஜித் மயம். திரிஷாவுக்கு இந்த க்ளாஸிக்கல் லுக்கும் அழகாத்தான் இருக்கு.

சினிமாட்டோக்ராஃபி.. டேன் மெக்கார்தர்.. ஆஸ்ட்ரேலியாக்காரர். கண்ணுல ஒத்திக்கிறா மாதிரியான லைட்டிங் ஸென்ஸ். பர்ஃபெக்ட் க்ரியேட்டர். சீன்ல பிரமாண்டம் காட்டாம வேலைல சீனுக்கு ஸீன் பிரமாண்டம் காட்டியிருக்கார்.

ஹாரீஸ் BGM ஸ்கோரிங்ல தேறிட்டார்னு சொல்லலாம். முந்தைய படங்களுக்கு இது தேவலாம்.

வழக்கமான அஜித் படம் போல கலக்‌ஷன் ரெக்கார்ட் பண்ணினாலும்.. ஒரு புதுசா நிறைவான கதையா 'என்னை அறிந்தால்' இல்லை. அதேபோல வசனங்களும் சில இடங்களில் கொழந்தபுள்ளத்தனமாதான் இருக்கு.

இதய மாற்று சிகிச்சைக்கு பல கோடிகள் செலவு பண்ண தயாரா இருக்கும் ஒரு பணாக்கார  வில்லன் ஏன் தேவையில்லாம இல்லீகலா வாங்க துடிக்கிறார்..!? 

திடீர்னு நாலஞ்சு வருஷம் வேலைய விட்டுட்டு போகும் ஹீரோ.. சட்டுனு வந்து பதவிய ஏத்துக்குறார். இதெல்லாம் சாத்தியமா..!? எப்டி..எப்டி.. எப்டி???

அப்பாவ கொன்ன கேங்க்ஸ்டர் ஒருத்தனை ஏன் ஹீரோ  பழிவாங்கல..!? அட்லீஸ்ட் தேடக்கூட முயற்சி செய்யல..!?

திடீர் திடீர்னு யார் யாரொட வாய்ஸ் ஓவர்ல கதை நகருது. இந்த குழப்பம் ஏன்?!

இப்படி பல ஏன்.. எப்படிகள்.. இருக்கத்தான் செய்யுது.

மொத்தத்துல இது டிபிகல் கவுதம் மேனனின் ஸெண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் ட்ராமா.

அதிகாலை FDFS 4 மணிக்கே.. சென்னை விருகம்பாக்கம் தேவி கருமாரி தியேட்டர்ல கூட்டம் குவிஞ்சு கிடந்தது.  வாழ்க தியேட்டர்ஸ்..
 
அப்புறம் ஒரு சின்ன விஷயம். உதவி இயக்குனர் வேலை பாத்துட்டு திரைவிமர்சனம் எழுதறது பல அசௌகரியங்கள் கொடுத்ததால பதிவு போடாமலே இருந்தேன். சரி முதல் ஷோ பாத்ததால எழுதலாம்னு வந்தா.. இது இந்த இணைய பக்கத்தின் 50வது பதிவு..! சின்ன சந்தோஷம்! அவ்வளவே! 

எழுத்தும் & கருத்தும்..
 கணேஷ் நாராயணஸ்வாமி

Sunday, April 27, 2014

சற்று முன் கிடைத்த தகவல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!

சற்று முன் கிடைத்த தகவல் - திரைப்பார்வை
முன் குறிப்பு: இந்த படம் தக்காளி சீனிவாசன் அவர்களால் 60% எடுக்கப்பட்டு, அவர் எடுக்கப்பட்பின்னர் எனது சமீபத்திய நண்பர் இயக்குனர் திரு.புவனை கண்ணன் அவர்களால் முழுமை செய்து வெளியிடப்பட்ட படம்.
திரையில் ஓடிக்கொண்டிருக்கும் யாரோ முகம் தெரியாத இயக்குனரின் படங்களுக்கு விமரிசனம் எழுதிவிட்டு போவது எளிது. ஆனால் சில மாதங்கள் பழகிய ஒரு இயக்குனரின் வேண்டுகோளின் பெயரில் ஏற்கனவே வந்து போன திரைப்படத்திற்கு கருத்து சொல்வது என்பது எனக்கு புது அனுபவம்தான். அவர் மீது நான் கொண்டிருக்கும் ’ஸாஃப்ட் கார்னர்களை’ உடைத்தபடி என்னுள் உறங்கிக் கொண்டிருந்த ’திரைவிமர்சகன்’ புறப்பட்டு தன் எழுத்தாணியின் முனையினை கூர்தீட்டிய சம்பவம் இது.  
மெய்யாகவே புதிய கோணத்தில் சொல்லப்பட்ட அக்மார்க் சைக்கோ த்ரில்லர். பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாவிடினும்.. ’அடச்சே!’ என அலுத்துக்கொள்ளும்படியான காட்சிகள் படத்தில் அபூர்வம். ஆனாலும் படம் பெரிதாக பேசப்படாமல் போன காரணம் என்னவாக இருக்கும்?.
சரி கதைக்கு உள்ள்ள்ளே ஒரு ரைட் குழம்பலாம்.. ஸார்ர்ரி கிளம்பலாம்..
கதையின் அவுட்லைன்., நகரில் ஆங்காங்கே ’ஒரேவிதமாய்!?’ சில கொலைகள் நடக்கிறது. சைக்கோ கொலைகள்னாலே அப்படித்தான் பாஸ்!. இதைப்பற்றி A.C.மாணிக்கவேல் (கே.எஸ்.ரவிக்குமார்) ஒருபுறம் விசாரிக்கிறார். இதனிடையே நகரில் ஆங்காங்கே இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதாகவும் போலீஸ் எச்சரிக்கிறது. கடைசியில் சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தார்களா இல்லையா!? - அவ்வளவுதாங்க கதை.
தெளிவா சொல்லிட்டேனா??.. ஆனா இந்த வழக்கமான அரதப்பழசான லைனில் சில இடங்களில் ஒரு ’ரெட்ரோ க்ரேட்’(RA) அம்னீஷியா’வால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் ஃப்ளாஷ்பேக்.. கதை நாயகனின் ’ஏணிப்படிகள்’ ரேஞ்சிலான ஒரு ஃப்ளாஷ்பேக்குகளை சொல்லி.. அதன் தொடர் சம்பவங்களை ஏறுக்குமாறான கால இடைவெளிகளில் செருகிவிட்டால் என்னவாகும்!? பெரும் குழப்பம்தான் மிஞ்சும்.
இந்த குழப்பம் தீர கடைசிவரை படம் பார்த்தே ஆகவேண்டும்.  ஆனால் அவ்வளவு பொறுமை யாருக்கு இருக்கிறது!. இடையிலேயே உருவாகும் ஒரு வித சலிப்புத்தன்மை கடைசியில் இயக்குனர் புத்திசாலித்தனமாக கோர்த்த விஷயங்களில் லயிக்கவிடாமல் செய்துவிடுகிறது.
கதையின் முன்பாதியில் படம் பார்ப்பவர்களை குழப்புவதற்கென்றே நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.  அதுவே படத்தின் பெரிய மைனஸ் பாய்ண்ட்டும் கூட. போதாக்குறைக்கு கதைக்குள் வரும் ஒவ்வொரு கேரக்டர்கள் மீதும் சந்தேகத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட காட்சிகள்.. உஸ்ஸ்.. ஸப்பா!!!
ரெட்டைக்கொலையை துப்பறிய வரும் கே.எஸ்.ரவிக்குமார் தடயங்களை மறைப்பது, அங்கே சுற்றியிருப்பவர்கள் பதுங்குவது.. அவரே தனது மேலதிகாரியிடம் பேசும்போது ஏதோ அவர்களே கூட்டுக்களவாணிகள் என்கிற ரேஞ்சில் வசனம் பேசுவது.. போஸ்ட்மார்ட்டம் டாக்டரையே சம்பந்தமில்லாத தோரணையில் மிரட்டி நமக்கு டாக்டர் மீதே சந்தேகத்தை வரவழைப்பது.. என வேண்டுமென்றே திரிக்கப்பட்ட காட்சிகள் ஆச்சர்யத்திற்கு பதிலாக அலுப்பையே தருகின்றன. (டாக்டர் கேரக்டருக்கு காஸ்டிங் யாருப்பா??? அவரையே ஸைக்கோ கில்லராக விட்டிருக்கலாம்.. அஷ்ட அவதானங்களிலும் பொருந்தியிருப்பார்..) 
‘பரபர’வென சுழலும் காட்சிகளின் நடுவே அனல் வீசும் ஆக்‌ஷனுடன் கனல் கண்ணன் கதையின் நாயகனாக ’பறந்தபடி’ உலாவியிருக்கும் படம். மனுஷன் ஃப்ரேமிற்குள் அடங்க மறுக்கிறார். அவரது ஆக்‌ஷனில் இருக்கும் தன்னம்பிக்கை ஜனங்களிடம் தன் முகத்தை நேரடியாக காட்டுவதில் இல்லை போலும். ஆனால் ஹீரோயினை ’ஃபாலோ மீ’ என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளை ‘குருவி’ விஜய் ரேஞ்சுக்கு தாவித்தாவி ஏறுவது போன்ற குசும்புக் காட்சிகளில் ரசிக்கவும் வைக்கிறார்.
குஷ்பு!?..  தேர்ந்த நடிப்பில்  தன் இடத்தினை நிறைவு செய்திருக்கிறார்., வெளிநாடு சென்ற அவர்  இந்தியாவிற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்படும் கால அவகாசங்களும் ஹீரோயின் - கனல் கண்ணன் நிகழ்வுகளுக்குமான கால அவகாசங்களும் ஏழாம் பொருத்தமாக ஆகிப்போவதால் நமக்கு கடைசிவரை தெளிய வைத்து தெளிய வைத்து அடிவாங்கிய அவஸ்தைதான்.
ஹீரோயின் குஷ்புவின் வளர்ப்புமகள்தான் ஹீரோயின். அவர் கனல் கண்ணனால் ஹராஸ் செய்யப்படும் வீடே குஷ்புவினுடையது அல்ல என்பதும்.., அது கனலார் தேடிவந்த இயக்குனர் லிவிங்ஸ்டன்னின் வீடு என்பதும் பிந்தைய செய்தி. தன்னை தேடி வந்து ரேப் பண்ண முயற்சிப்பவர்களைத்தான் ஹீரோயின் கொல்லுவார் என்பது கதை..எனில் லிவிங்ஸ்டன் எப்படி அவரிடம் சிக்கி கொலையுண்டார் என்பதில் தெளிவில்லை..
இன்னும் கொஞ்சம் தெளிவாக கோர்த்து.. சில ஓட்டைகளை அடைத்திருந்தால் படம் ஜெயித்திருக்கும்.
கேமரா மற்றும் இசை படத்தினை பல இடங்களில் காப்பாற்றியிருக்கின்றன.
எது எப்படியோ.. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபமாக இருக்கலாம்.. ஆனால் அதில் கதையை பிடிப்பது சிரமம்தான் இயக்குனரே..
இன்னும் நிறைய பேசலாம்.. நேரில்!

இணைய நண்பர்களின் கமெண்ட்டுக்காக இந்த பதிவு...

நன்றிகளுடன்..

கணேஷ் நாராயணஸ்வாமி

Saturday, April 26, 2014

வாயை மூடி பேசவும்! - திரைப்பார்வை

வாயை மூடி பேசவும்! - சிரிப்பதற்கு மட்டும் திறக்கலாம்!

தனக்கான உரிமைகளைக்கூட  வாய் திறந்து பேசி கேட்டு பெற தயங்கும் நாயகி, தர்மசங்கடமானதோ கலவரமோ.. எந்த சூழ்நிலையானாலும் தன் வாய் சாமர்த்தியத்தால் சமாளிக்கும் நாயகன். இருவரும் தங்கள் வாழ்வின் அதிமுக்கிய தருணத்தில் தங்கள் ’வாயால்’ சாதிக்க முடியாத விஷயத்தை சூழ்நிலையால் தங்களின் நேர் எதிர் குண ஸ்தானத்தில் நின்று பேசி ஜெயிப்பது தான் பாலாஜி மோகனின் வாய் மூடி பேசவும்!! 
இந்த ரொமாண்டிக் காமெடிக்  கதையின்  பக்க விளைவுகளாக கதையின் மாந்தர்கள் அனைவருக்கும் நல்ல / கெட்ட விளைவுகள் நடப்பதே கதைக்களத்துக்கான சூழல்.
பனிமலை என்ற மலைப்பிரதேசத்தில் திடீரென பரவும் ‘ஊமை(!?)க்காய்ச்சல்!’ செய்தி ரேடியோ ஜாக்கியாக ஆசைப்படும் அர்விந்திற்கு (தல்ஹெர் சல்மான்’) இடியாய் தொண்டையில் இறங்குகிறது., இதை சரி செய்ய ஹாஸ்பிட்டலுக்கு செல்ல அங்கு ஏற்கனவே ஒரு ’பொருந்தா’ உறவுடன் திருமணம் செய்யும் நிலையில் உள்ள நஸ்ரியாவை சந்திக்கிறார்.  பேசியே சாதிக்கும் ஹீரோ ’பேசா மடந்தை’யான நாயகிமேல் கொள்ளும் ஈர்ப்பு ஒரு அழகிய காதல் கவிதையாக பனிமலை பயணத்தை வழங்கிவிட்டு போகிறது. 
இதில் மலைப்பிரதேசத்திற்கு ’எட்டணா கொடு எங்கனா வுடு!!’ பட ஷூட்டிங்கிற்கு வரும் நடிகர் ‘நியூக்ளியர் ஸ்டார்’ பூமேஸ் (ஜான் விஜய்) அண்டு கோவிற்கும், அவரால் அவரது முந்தைய படங்களில் அவமானப்படுத்தப்பட்ட ‘குடிகாரர்கள்’ சார்பாக ஷூட்டிங்கை முறியடிக்க வரும் ‘மட்டை ரவி’ ரோபோ ஷங்கர் எபிஸோட் அட்டகாச காமெடி கிக்!. அதிலும் அந்த வாயை திறக்காத சமாதான ’பேச்சுவார்த்தையும்’, மோனொ ஆக்டிங்கில் நடக்கும் கனரக ஆயுத யுத்தமும் வெடிச்சிரிப்பை வரவழைக்கின்றன.
கதையில் இரண்டு நொடி கடந்த காரெக்டர்கள்கூட கதையின் உயிரோட்டத்தில் கிளைபிரிக்காமல் பயணித்திருப்பதுதான் படத்தின் பலம். நஸ்ரியாவின் ’மாற்றாந்தாய்’ மதுபாலா.., மகனின் காதல் திருமணத்தால் தனது சிரிப்பை மறந்துவிட்டப்பின் மறந்தும் சிரிக்காத ‘வினுச்சக்கரவர்த்தி’., பத்திரிக்கையாளர்களிடம் உளறிக்கொட்டும் சுகாதார அமைச்சர் ‘பாண்டியராஜன்’ என அனைவரும் கனகச்சிதமாக ‘அடக்கி வாசித்துள்ளனர்’! 
போதாக்குறைக்கு இயக்குனரே நியூஸ் ரீடர் அவதாரம் எடுத்து.. அரசியல்வாதிகள், சேனல்காரர்கள் என அனைவரையும் பல்முனைத் தாக்குதல் நடத்தி ’கத’கிழி. ஆடியுள்ளார்.     ஆங்காங்கே தமிழில் எழுத்துப்பிழைகளுடன் வரும் தொலைக்காட்சி ‘மார்க்கீஸ்’ களும் இவரின் குசும்பு கும்மாக்குகள்தான். ஒவ்வொரு செய்தியின் கடைசியில் அவர் காட்டும்  ’உடல்மொழி’ உச்சரிப்புகள்  ரவுசு பாஸ்!! 
ஸீன் ரோல்டனின் ’காதல் அலை ஒன்னு..’ பாடல் காதுக்குள் இன்னும் அலையடிக்கிறது. உருத்தாத பின்னணி இசையும், கண்ணை சலிப்படையச் செய்யாத மூணாறு மலைபிரதேசத்தின் ஒளிப்பதிவும் படத்தின் ’விண்ட்ஃபால்’ சமாச்சாரங்கள்.  
கலை இயக்கம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியாக உள்ளது. எல்லா தரப்பினையும் சரியாக வேலைவாங்கிய வகையில் இயக்குனரிடம் முந்தைய படத்திலிருந்து பெருத்த முன்னேற்றம் இருப்பது நிச்சயம்.
எடிட்டிங்.. ஜில்லெட்டை வாழைப் பழத்தில் வைத்தது போல்  ஆர்பாட்டமில்லாத ஸ்மூத் மிஸ்டர்.அபினவ்.
தேவையின்றி பெருத்த எதிர்பார்ப்புகளை கிளப்பாமல்.. குழப்பமான ஃபீட்பேக்குகள் கிளம்புமானால் நிச்சயம் இது ஓடும் படங்களில் ஒன்றாகிவிடும்.
தமிழ் சினிமாவின் மாற்று முயற்சிகளில் நிச்சயம்  இது வரவேற்கக் கூடிய படம்தான்.  இதற்கான ரசிகர்கள் எல்லா தரப்புகளில் இருந்தும் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நடக்கின்ற உண்மை.
வழக்கமான விஷயங்களாக இல்லாமல் ஒரு புதுமையான ஹில் பேக் கிரவுண்டில் விஷுவல் ட்ரீட்டாக படம் சிலாகிக்க வைக்கிறது . 
சில்லென்று ஒரு படம்!!

Sunday, April 6, 2014

மான் கராத்தே! – ஒயிலாய் ஒரு மயிலாட்டம்!



  
காமெடிக்கான ஒரு பேஸ்மெண்ட் ஸ்டவ்வு, அதற்கு லாஜிக்  கலக்காத ஒரு கதை, அதை கிண்டுவதற்கு கொஞ்சம் ’பாத்திர’ங்கள், அப்புறம் தேவையான அளவு காமெடி மசாலா போட்டு கடைசிவரை கிண்டினால் ’மான்’ கூட்டாஞ்சோறு ரெடி. 

எங்கோ மலைப்பிரதேசத்தில் தேமெயென்று அலைந்துக்கொண்டிருக்கும் சித்தரை ’சத்வம்’ கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் சதீஷ் உள்ளிட்ட அஞ்சு IT அடப்பாஸுகள் சீண்டுகிறார்கள். 

சித்தரும் இந்த வாலண்டியராய் வம்பிழுக்கும் பார்ட்டிகளிடம் தன் விட்டாலாச்சாரியார் திறமையை நிரூபிக்க எதிர்காலத்தில் வரும் தினத்தந்தி பேப்பரை கொடுத்து உதவுகிறார்(!?).இங்கே... இங்கமட்டும் ஏன் அப்படின்னு இங்கே கேள்வி கேக்காம விட்டுட்டீங்கன்னா நீங்க படத்தோட ஒட்டி ஒரு மாரத்தான் ரேஸ் ஓடலாம். 

அதன் பின்னர் பேப்பரில் போட்டிருக்கும் விஷயங்கள்  தவறாமல் நடந்துதானே வேண்டும்.  

இந்த நியூஸ் பேப்பரில் உள்ள விஷயங்கள் மூலம் ’பணம் சம்பாதிக்க வழியிருக்கா?’ என்று தேடுகின்றனர் இந்த கோஷ்டியினர்.  எதிர்காலத்தில் நடக்கும் பாக்ஸிங் போட்டியொன்றில் ராயபுரம் பீட்டர் 2 கோடி சம்பாதிக்க போகும் பணத்தில் பங்கு போட கிளம்புகின்றனர்.

’ஏழாம் அறிவு’ போதி தர்ம சித்தரின்  ஹேங்கோவர் குறையாத முருதாஸின் லைனை எடுத்துக்கொண்டு காமெடி கோதாவில் களமிறங்கியுள்ளார் புதிய இயக்குனர் திருகுமரன் அவர்கள். 

சிவகார்த்திகேயனுக்கு விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப்புக்கு நிகரான ஓப்பனிங் ஸாங்., ஆனால் அடுத்த ஸீனிலேயே தான் 10 ரூபாய்க்குக் கூட ஒர்த் இல்லாத வெறும் பயல் என்று ஸீன் வைத்தாலும் அது இவருக்கு நன்றாக பொருந்துகிறது.
இந்த இளம் ஹீரோக்கள் ‘மாஸ் ஹீரோ’ இமேஜ் ஒரு மாயை என்பதை அந்த சூப்பர்ஸ்டார் வந்து தன் திருவாய் மலரும்வரை ஓயமாட்டார்கள் போல!. 

 சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷிற்கு இதே மாதிரியான சிகையலங்காரம் சிங்காரிக்கப்பட்டு.. இப்போது அவர் அதை கலைத்துப் போடக்கூட முடியாமல் சிக்கு பிடித்த தலையுடன் அலைவது எல்லோருக்கும் தெரியும்.  வரலாறு முக்கியமாச்சே!.

சரி படம் எப்படி?, சித்தர், எதிர்கால நியூஸ்பேப்பர் என ஃபேண்ட்டஸி + காமெடி வகையறா படம் என்றானபின் தர்க்க வாதங்களை டிக்கெட் கவுண்ட்டரிலேயே வைத்துவிட்டு வந்துவிடுவதுதான் உத்தமம்.

சிவகார்த்திகேயன் முன்னெப்போதும்விட அழகாக இருக்கிறார் நன்றாக நடனமாடுகிறார்.. அப்புறம் முன்பைவிட டைமிங்கில் நல்ல முன்னேற்றம். ஆரம்பத்திலிருந்து காமெடி, ரொமான்ஸ் என்று ஜாலியாக ரெட்டைக்குதிரை சவாரி செய்யும் கதை, க்ளைமாக்ஸில் திடீரென காமெடி லகானை கழட்டிவைத்துவிட்டு சென்டிமென்ட் குதிரையை பூட்டிக்கொ’ல்’வதுதான் பொருந்தாமல் போகிறது.

மொக்கை ஜோக்குகளையும் அழகாக ப்ரெஸண்ட் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது.  படம் முழுக்கவே பல டயலாக்குகள் அப்ளாஸ் வாங்குகிறது.

கடந்த சில மாதங்களாக ’அஸோசியேட்’ இயக்குனராக சில டிஸ்கஷனில் உட்கார்ந்த பின்னர்தான் எனக்கு ஸ்க்ரிப்ட் ஐ டெவலப் செய்வதற்குள் தாவு தீர்வது புரிகிறது. 

இங்கே இணையத்தில் விமர்சனம் செய்யும்.. (நான் உட்பட) எல்லோரும் அட்லீஸ்ட் ஒரு ஷார்ட் ஃபில்மாவது எடுத்திருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றவேண்டும். 

இல்லாவிடினும் குறை சொல்வதில் உள்ள குற்ற உணர்ச்சியை உணர ஒரு சந்தர்ப்பத்தை இவர்கள் தானாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??(2014 தேர்தல் ஜுரம்..).        

ஃபீல் மாறாம நூல் பிடிச்சு... கோல் மாறாம ஸீன் பண்ணுறது.. எம்புட்டு கஷ்டம் தெரியுமா பாஸ்?!.  சிலவிஷயங்கள அனுபவிச்சாதான் தெரியும்.   

முதல் வார முன்பதிவுகளிலேயே படத்திற்கான செலவினை ஈடு செய்த வகையில், சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் கலெக்‌ஷனுக்கான மார்க்கெட் மீண்டும் ஒருமுறை தனது ஸ்திரத்தன்மையை உறுதிசெய்கிறது.

சுகுமாரனின் கேமரா, மலைவெளிகளில் கும்கியை கட்டிச்சுமந்தவருக்கு, டவுன் வெளிகளில் குட்டி கும்கி, அவித்து தோலுரித்த உருளைக்கிழங்கு ஹன்ஷிகாவை அழகாக காட்டுவதில் பெரிய சிரமம் இருந்திருக்காது. அட்டகாசமான வேலைப்பாடு.


அப்புறம்.. இந்த சினிமா கேமரா மேன்களுக்கு ஒரு பொதுவான வேண்டுகோள், ரூல் ஆஃப் தேர்ட்ல ஃப்ரேம் வைக்கிறீங்க.. அழகாத்தான் இருக்கு.. ஆனா அந்தக்கடைசீல ஒக்காந்து இந்தக் கடைசீல தலைய திருப்பி பாக்கசொல்ல கஷ்டமாத்தான் இருக்குது. இருந்தாலும் உங்களுக்கு அழகியல் முக்கியம்தானோ!?




பின்னணி இசையில் அனிருத் மெருகேறித்தான் இருக்கிறார், அப்படியே போகிற போக்கில் இரண்டு ஜிகிடிகளுடன் வந்து ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.. பாடல்கள் அதிரடி, நடன இயக்கம் சூப்பரப்பேய்!!

டபுள் மீனிங் வசனங்களையும், அந்த லிஃப்ட் ஸீனின் ‘ஃப்ளாவர்’ஐயும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.. அவ்வளவே..

முழு நீள கமர்ஷியல் ஸ்கேலில் முழம் போட வந்திருக்கும் மல்லிகைப்பூவிற்கு இதற்கு மேலும் வியாக்கியானம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

Ganesh Narayanaswamy.,
+91-98432-11228



Wednesday, April 2, 2014

ஒரு ஊர்ல.. - ஒரு நெஞ்சை உலுக்கும் கதை


தேவதைகளை மகள்களைப் பெற்ற சித்தப்பாக்களுக்கும் ஒரு கதையுண்டு, தமிழ் சினிமாவில் இதற்கு முன் நம்மைக் கடந்து சென்ற ’கதைசொல்லி’களால் அதிகம் வாசிக்கப்படாத பக்கங்களில்
இதுவும் ஒன்று. புத்தம் புதிய கதைக்களம். 

வழமையான சினிமா பாணியில் ஊறித்தவிக்கும் என் சிந்தனையை கட்டி இழுத்து வந்து இந்த கதைக்களத்தில் கட்டிப்போட கொஞ்சம் மெனக்கெடத்தான்  வேண்டியிருந்தது.

தாயை இழந்து, இதுவரை கிடைத்த பாசமும் களவுபோய் தவிப்பவன் ’தேரி’ (பருத்திவீரன்- வெங்கடேஷ்), வசதியான குடும்பத்தில் இருந்து வந்து தனக்கு அண்ணியாக வாக்கப்பட்டவளிடமும் அந்த பாசமும் ஈடு செய்ய இயலாமல் போய்விடின் என்ன செய்வான்?. பழைய இரும்புக்கடையில் கூலிவேலைப் பார்த்து கிடைத்த காசில் ராப்பகலாக குடித்துவிட்டு   ’போதை’ அவன் ’மேனி’யை  இழுத்துக்கொண்டு போகும் போக்கில் தெருவிலும் குப்பை மேட்டிலும் பொழுதை கழிக்கிறான். போதை தெளிந்தால் தாயின் இழப்பும், வேலை முடிந்தால் போதையின் வனப்பும் தாலாட்ட காலம் கரைகிறது.

அண்ணன் கட்சி அரசியல் ஊர் பஞ்சாயத்து தலைவர் என்று திரிந்துக் கொண்டிருக்கிறார். அவன் அப்பாவும் வீட்டில் செல்லாக்காசாக கிடக்கிறார்.  கொஞ்சமேனும் பாசம் காட்டாத அண்ணிக்கு ஒரு மகள் பிறக்க, அதை பார்க்க வரும் சொந்தக்காரர் குழந்தை அப்படியே இறந்துபோன தேரியின் அம்மாவைப்போலவே இருப்பதாக சொல்லிவிட்டு போகிறார். இந்த ஒரு நிகழ்வுதான் அவன் தாய்பாசத்திற்கு வடிகாலாய் கிடைத்துவிடுகிறது. அண்ணியின் உதாசீனத்தையும் மீறி குழந்தையை நெஞ்சில் சுமக்க துவங்கிவிடுகிறான்.

குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்று வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு அவனது பொறுப்புணர்ச்சி கூடித்தான் போய்விடுகிறது.

இந்நிலையில் அண்ணன் வைத்துக்கொண்ட ஒரு ‘தொடுப்பு’ குடும்பத்தை சீர்குலைப்பதுதான் மீதிக்கதையும், நெஞ்சத்தை கனக்கச்செய்யும் க்ளைமாக்ஸும். குடியும் முரட்டு உருவமுமாக அலையும் நாயகன் ’தேரி’ குழந்தை பாசத்தில் குழைந்து தானும் குழந்தையாகவே மாறுகிறார். இதை, அந்த குழந்தை எதிர்வீட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கும் ’டெங்கு அவேர்னஸ் கேம்ப்’ பெண்ணின் பூந்தொட்டியை உடைத்துவிட்டு திட்டு வாங்கும் ஒரு காட்சியிலேயே உணர்த்தி விடுகிறார்.

’டெங்கு கேம்பின்’ ஒரு பெண்ணாக வரும் நாயகி நேஹாவிற்கு தேரியின் குழந்தைப் பாசம் ஒரு
நெகிழ்வை உண்டாக்கிவிடுகிறது.  இங்கு காதல் என்ற வஸ்துவை நுழைத்து கமர்ஷியல் கலவை பூச
இடமிருந்தும் அதை லாவகமாக தவிர்த்து, கதையின் ஓட்டத்தை சீர்குலைக்காத இயக்குனர் நிச்சயமாய் ஒரு சிறந்த படைப்பாளிதான். விரசமில்லாத கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே கோர்த்ததில் இயக்குனர் வசந்தகுமாரின் படைப்பு நேர்த்தி தெரிகிறது.


படத்தின் போக்கினை கெடுக்காத சின்ன சின்ன நகைச்சுவைகளும் படத்தின் நகாசு நர்த்தனம்தான்.  அதிலும் அந்த ‘முகம்’ காட்டாத டிவிக்கு 15 ரூபாய் விலை நிர்ணம் செய்யும் பொடியனின் அசால்ட்டான பதில் உற்று கவனித்தால் மட்டுமே புலப்படும் நகைச்சுவை. இன்னும் பல இடங்களில் இதுபோன்ற ஜோக்குகள் வந்தாலும் ஒரு சில ஜோக்குகள் வொர்க் அவுட் ஆகாமல் வெறுமனே கடந்து போகிறது.   

’கனவில் ஈசன் சொன்னான்!’ என்று அடிக்கடி அரற்றும் உள்ளூர் ‘ஆதீனம்’(!?) போன்ற சில சுவாரஸ்யமான கேரக்டர்களும், படத்தில் உண்டு.  

இளையராஜாவின் இசையமைப்பில் ’999’வது படம் என்ற முத்திரையை சுமந்திருப்பதால் எதிர்பார்ப்பு கூடத்தான் செய்கிறது. ’தாயே வந்தாயே..’ பாடல் அக்மார்க் ராஜராகம்.  மட்டுமல்ல.., ’தேவதை போலொரு பெண்ணிங்கு..’ பாடல் குழந்தையின் காதுகுத்துவிழாவில் ஒலிக்க விடுவதுபோல் சிற்சில இடங்களில், பின்னணியில் பொருத்தமான இளையராஜாவின் பழைய பாடல்கள் ஒலிப்பதும் இயக்குனரின் நுட்ப சிந்தனைதான்.

எனதருகில் அமர்ந்திருந்த ஒரு ஹோட்டல் ’மாஸ்டர்’ கதையின் ஓட்டத்தை அவ்வப்போது சிலாகித்துக் கொண்டிருந்தார். இந்த படம் போய் சேரவேண்டிய சமூகத்தின் நிஜ முகம் அவரிடம் பிரதிபலித்தது உண்மை.

சென்னையில் மட்டுமே ரிலீஸாகியிருக்கும்.., கமர்ஷியல் மசாலா கொஞ்சமும் கலக்காத இந்த படம் சினிமா சந்தித்திருக்கும் பிரச்சினைகள் தமிழ் திரை உலகின் இன்னுமொரு ’கோர’ முகத்தின் நவரசம்தான். இதையெல்லாம் ஆழமாக சென்று அலசினால் சினி மாஃபியாக்கள் ’டூப்’ இல்லாமல் நம்மை போட்டும் புரட்டும் காட்சிதான் அடுத்த நிகழ்வாக இருக்கும். நல்லா இருங்கடே! 

இதைப்போன்ற நல்ல படங்களும் பெரிய ஸ்டார்களின் படங்களின் வசூலுக்கு சவால் விடும் நிலை வரும்போது, தமிழ் சினிமா உலக சினிமாக்களுக்கு சவால் விடும் உயரத்தை தொட்டிருக்கும்.
முன்பாதியில் இருக்கும் சின்ன ’வெறுமை’யை ஒரு அயிட்டம் ஸாங்கிலும், பின்பாதியின் ‘கீப்’ காட்சிக்கு ’6க்கு-8ல்’ ஒரு கானாவும் போட்டு நிறைத்திருந்தால் இந்த படம் இன்றைய தமிழ் சினிமாவின் வசூல் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கும்.

தாயெனும் கோயிலை காக்க மறந்திட்டு, மகள்களின் மூச்சுக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு கிடைத்து ரட்சிக்கப்படும் அப்பாக்களுக்கு இந்த படம் ஒரு படிப்பினை.
நன்றிகளுடன்,

கணேஷ் நாராயணஸ்வாமி.,
+91-98432-11228 

Sunday, March 30, 2014

இனம் - ஒட்டுபோட்ட இடமும் கிழிபடுகிறது!



இலங்கையில் துடிதுடிக்க கொல்லப்பட்ட தமிழ் இனத்தின் வலியை ஒரு மலையாளி (’தமிழனல்லாதவன்’ என்ற சொல்லாடல் இங்கே பொருந்தி வரவில்லை..) சொல்ல முயன்றால் எத்தனை உண்மைகள் திரிக்கப்படும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.
தான் விதைக்கப்பட்டு வாழ்ந்து பின்னர் அங்கேயே சாகக்கடவது என்று சபிக்கப்பட்ட ஒரு இனத்தின் கொஞ்சம் ஜீவன்கள் தன் கூட்டைவிட்டு நகர மறுத்து அங்கேயே செத்துபோவதுதான் கதை.        


தன் திரைக்கதைக்கு வாகாய், ஈழப் புலிகளின் வாழ்வியலையும் நெறிமுறைகளையும் சொல்லாமல் தவிர்த்ததுதான் இந்த சினிமா இழைத்த முதல் அநீதி.

ஈழத்தவர், மலையகத்தமிழர்கள் இவர்களின் முன் பின் வரலாறு குறித்த பறைசாற்றல் ஏதுமின்றி பொளேரென ஹாஃப்வேயில் துவங்குகிறது கதை. செல்லடி பட்டு அழியும் உயிர்களின் கூக்குரல் வான்வழியே ’டிஜிட்டல் சிக்னல்’களாய் இம்மண்ணில் இறங்கிய நொடிகளில் நாம் செவிடர்களாய் வாழ்ந்திருந்தோம் என்ற குற்ற உணர்ச்சி நமக்குள் இன்னும் தீய்ந்து போய்விடவில்லைதான். 

ரஜினி என்ற பெண்ணின் அனுபவத்தை சொல்வதாக படத்தை துவங்குகிறார் இயக்குனர். ஒரு கடலோர கிராமத்தில் ’சுனாமியக்கா’ என்ற (சரிதா) பெண்ணின் அரவணைப்பில் வாழும் சில ’முதிர்ந்த!?’ சிறுவர் சிறுமியர்களிடமிருந்து கதையை சொல்கிறார். கதையும் ’செல்லடி’க்கு பயந்துவிட்டது போலும்! கடைசிவரை அங்கிருந்து நகரமாட்டேன் என்கிறது. ஒழுங்கற்ற திரைக்கதையின் போக்கில் கொஞ்சம் கவனம் ஈர்ப்பவன் ‘நந்தன்’ என்னும் மன்வளர்ச்சி குன்றிய சிறுவன்தான்.

தன் மனைவிக்கு கர்ப்பிணி வேஷம் போட்டுவிடும் கருணாஸின் வசனம் ஒன்று இப்படி ஒலிக்கிறது, “பத்து ஆம்பிளைக கூடும் இடத்தில் ஒரு சிலரின் பார்வை தப்பாகத்தான் இருக்கும், இந்த வேஷம் உனது பாதுகாப்பிற்குத்தான்” என்பதாக வருகிறது.  இது சிங்களவன் தமிழ் அப்பாவி பெண்களுக்கு இழைத்த வன்கொடுமைக்கு சப்பைக்கட்டு கட்டுவதாக அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?. கற்பழிக்கப்பட்டது இயக்குனரின் குடும்பப்பெண்கள் இல்லையே என்ற இறுமாப்புதான்.

தமிழன் தன்னை எதைச் சொன்னாலும் சுரணையின்றி இளித்துக் கொண்டிருப்பான் என்பது அண்டை மாநில இயக்குனருக்கு தெரிந்திருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தமிழர்களை கொன்று குவித்த சிங்கள படையின் கேப்டன் தன் படைவீரர்கள் வன்புணர்ச்சி செய்வதை தன்னால் தடுக்க முடியாமல் புலம்புவது போன்ற கேவலமான காட்சி ஒன்றும் இருக்கிறது. இதைக்கூட எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இன்றி பார்த்துவிட்டுதான் தியேட்டரிலிருந்து வெளியேறினேன்.   

இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு பார்த்தால் இயக்குனர் சொல்ல வருவதன் சாராம்சம் பின் வரும் வடிவில் இருக்கலாம்.
  ”ஈழப்பெண்கள் கர்பிணியரோ, முதியோரோ அல்லாது இருப்பின், அவர்கள் கற்பழிப்புக்கு உகந்தவர்களே, எனவே தங்களை அவர்கள்தான் எப்படியாவது காத்துக்கொள்ள வேண்டும். சிங்கள போர் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துதான் நியாயத்தை நிலை நாட்டியுள்ளனர், புலிகளின் குழப்ப நடவடிக்கைதான் இதற்கு முழுமுதற்காரணம்... “ இதைப்போல இன்னும் நிறைய யோசித்துக்கொண்டே போனால் விரக்திதான் மிஞ்சுகிறது.

இது போன்ற படங்களை ஊக்குவித்து திரையரங்கம் வரை கொண்டுவந்து சேர்த்த ஒவ்வொருவனும் தமிழின துரோகிதான்.

இந்த படங்களின் அரசியல், இறையாண்மை பின்புலங்களை  புதியதலைமுறையின் ‘லக்கிகிருஷ்ணா’ போன்ற கூர்நோக்கும் எழுத்தாளர்கள் எழுதி அம்பலப்படுத்த காத்திருக்கிறேன்.

வருத்தங்களுடன்,
கணேஷ் நாராயணஸ்வாமி.

Saturday, March 22, 2014

குக்கூ - செல்லுலாய்ட் குயில்!




இளங்காலைப் பொழுதுகளில், ஆளற்ற வனங்களில் உலவும் அரவங்களை துயில் எழுப்பிவிட சுப்ரபாதம் இசைக்கும் குயில்களின் குரலினை கேட்டிருக்கிறீர்களா?!.. எனக்கு கால் சத வாழ்க்கை அப்படித்தான் கழிந்தது. நான் நடக்கும் பாதையை சற்று நழுவி அந்த குயிலின் முகம் காண விழையும்போது., தன் குரலை நிறுத்தி அடையாளங்களை மறைத்து காணாமல் போகும்


ஆனால் ராஜுமுருகனின் குக்கூவிற்கு நிலைமை நேர்மாறானது. கண்கள் கிடையாது, கேட்டலிலும் தழுவலிலும் மட்டுமே முன் நிற்பவரை உணர முடியும். பகலில் ரயிலில் வழிகாட்டும்ஒளிவிளக்கு விற்பதும், மாலை நாடக குழுவில் ராஜாவின் குரலில் பாடல் பாடுவதுமாய் நகர்கிறது வாழ்வு. இந்நிலையில் இவனது பயணத்தில் வந்து சேரும் இன்னொரு கண்ணற்ற படித்த(!?) குக்கூவுடன் இவர் சேர்ந்தாரா என்பது திரைக்கதை.


ராஜுமுருகன் விகடன் நிருபராய் இருந்த நாட்களில் தான் கடந்து வந்த மனிதர்களில் மறக்கமுடியாதவர் என அடையாளம் காட்டி, தினேஷின் கதையை சொல்லத்துவங்குகிறார். சங்கரின் ’S’ பிக்சர்ஸில் கதை சொல்லி அங்கே துவங்க இருந்த அவரது சினிமா பயணம் தாமதமாய் இந்த படத்தில் துவங்குகிறது. தனது முதல் வாய்ப்பையே கமர்ஷியல் பேக்கேஜுக்கு காவு கொடுக்காத இயக்குனரின் தைரியம் கொஞ்சம் ஆச்சர்யம்தான்.  

வட்டியும் முதலும்தொடரில் மனித உளவியல்களை வார்த்தைகளில் கோர்த்தவர்., செல்லுலாய்டில்கண்அற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைஒளிஓவியமாய் வரைந்திருக்கிறார். நல்ல தரமான படைப்பை தர முயன்றிருக்கிறார்.  ஆனால் தனக்கு தெரிந்த    பல விஷயங்களைஇன்னொரு படம் மூலம் சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் போனால் என்னவாகுமோ?!’ என்ற பதைபதைப்புடன் பல விஷயங்களை திணிக்க முயன்ற தொனி அங்கங்கே தெரிகிறது. ரசிக்கும்படியாகவே இருந்தாலும் சில இடங்களில் அவசியமின்றி காட்சிக்கு பொருந்தாமல் வந்துவிழும் அரசியல் வசனங்கள்  இதற்கு உதாரணம்.


இந்த சிறு நெருடல்களை மறக்கடிக்க வைப்பவைசந்திரபாபுஅண்டு கோவின் அட்ராசிட்டி அலப்பறைகளே. போனஸாக தினேஷின் நண்பராக வரும் அந்த மாற்றுத்திறனாளியின் கருத்து குத்துக்கள் பல இடங்களில் சிரிக்க வைத்துவிடுகிறது.


நல்லவர் என நினைப்பவரை கெட்டவராகவும், கெட்டவர் நினைப்பவரை நல்லவராகவும் சில இடங்களில் நேர்மாறாகவும் காட்டும் வழக்கமான சினிமா உத்திகள் சில இடங்களில் மட்டுமேவொர்க் அவுட்ஆகிறது.


நாயகி மாளவிகா, அலட்டலில்லாத நடிப்பில் முட்டைக் கண்களுடன் அழகாக வந்து போகும் அவருக்கு சினிமா உலகம் குட்டைப் பாவாடை மாட்டிவிட்டு அல்ட்ரா மாடர்னாக மாற்றும் வரை நிச்சயம் ரசிக்கலாம்.


குக்கூ பாடல்கள் அழகிய ஹைக்கூ கவிதைகள்தாம். அவைகளை இயக்குனர் நெருடலின்றி சரியான இடத்தில் பொதிந்திருக்கிறார். இளையராஜாவின் பாடல்களும் அப்படித்தான்.., அதிலும் அந்த ஆத்தாடி பாவாடை பாடலை முடித்தவிதம் மட்டும் இயக்குனரின் குசும்புக் கவிதை.


பெரிய பதற்றங்கள் எதுவுமின்றி நகைச்சுவையோடு நன்றாகவே கடந்துபோகும் முன்பாதியின் நிறைவு பின் பாதியில் சற்றுக் குறைவுதான். எல்லாம் சுமுகமாக நடந்துவிடுமென்று நினைக்கும் நிலையில் நாயகி நாயகனுக்கு என்ன நடந்திருக்கும் என்றுகூட தெரிந்துக்கொள்ள பொறுமையின்றி  தான் இருக்கும் பாதுகாப்பான சூழலை உடைத்து திடுமென காணாமல் போகிறார்.


இந்த சினிமாத்தனமான ட்விஸ்ட் திரைக்கதை அதுவரை கட்டிக்காத்த இயல்பான ஓட்டத்தை குலைக்கத்தவறுவதில்லை. ஒருவேளை இது உண்மைக் கதையாகவே இருக்கும் பட்சத்தில் அதற்கான காரணத்தை அசட்டையாக சொன்ன வகையில் இயக்குனரின் அனுபவ அளவீடாக எடுத்துக்கொள்ளலாமா?!


பல இயக்குனர்களை தனது மதிப்பெண்களால் மதிப்பீடு செய்யும் உத்தியின் மூலம் பல இயக்குனர்களின் கருவல்களை மார்பில் தாங்கும் விகடனின் செல்ல இயக்குனருக்கு அவர்கள் வைக்கப்போகும் விமரிசனத்தை விமரிசனம் செய்ய ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது!   


முதல் படைப்பு என்ற வகையில் நிறைகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் சாமானியனின் ரசிப்புத்தன்மை இருந்தால் இந்த கூவல் பரவசமாகும், என்னளவில் எனது பால்யங்களில் நான் கானகத்துள் கேட்டு கடந்த கணங்களின்  பரவசம் இந்த குக்கூவில் கொஞ்சம் குறைவுதான்.